Saturday, August 28, 2010

கண்ணாமூச்சியாட்டம்

உள் விழும் கிரகணங்களை
ஊடுருவிச் சென்று எப்போதும்
தேடிக்கொண்டிருக்கும் புழுதிகளை
அது மின்னி மறையும் தருணங்களில்
நான் நினைத்துக்கொள்வேன்
விடை கிடைத்து விட்டதென்று...

மின்சாரமற்ற ஒரு நாளின்
பகல் பொழுதொன்றில்
இருண்டு கிடக்கும் என் அறையின்...
அசைந்தாடும் ஒற்றை மஞ்சள் நிற விளக்கொளி
 பரப்பிக்கிடந்த புத்தகங்களின் பின் பக்கத்தினை
வெளிச்சமிட்டு காட்டிக்கொண்டிருந்தது...

நின்றுபோன கடிகாரத்தில்
முன்பின் என முண்டியடித்துகொண்டிருந்த நொடிமுள்ளின்
நகர்வுகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தது
அசைவற்ற மஞ்சள் நிறப் பல்லியொன்று.

தேடித்திரியும் வண்டுகள் போல்
பொதுவான ஒன்றான ஒன்றை
நேற்று இன்று நாளை என்று...
அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
அதன் செயல்களில் ஒளிந்துகொண்டு
கண்களை திறந்து கொண்டு விளையாடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்...

Sunday, August 15, 2010

திரிதல்

உருகும் வெண்பனிமலையின் 
குளுமையை உணர்ந்தேன்
நீ அருகில் இருக்கும் தருணங்களில்.

இங்கு நீ என்று எழுதியதால்
அவனோ அவளோ அதுவோ
நானோ நீயோ என்னோ உன்னோ
என்று வைத்துக்கொள்கிறேன் இல்லை
வைத்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சிக் குலாவும் ஊரித்திரியும்
குழந்தையெனக்கொள்கிறேன் அதன் திரிதல்களை.
விடிகாலைப்பொழுதை நீ வெள்ளனவே என்னும் போது
உருமாறிய வார்த்தையைப் போல்
உன் விருப்பங்களும் திரிதல்களும்
நகரும் பூகோளத்தினை யொத்தெ நகர்கின்றது.

வெற்றுக்கால்களுடன் உன்னுடன் நான் பயணிக்கும்
தருணங்களில் என் மீது மோதிச்செல்லும் காற்றாய்
கிளரிச்செல்லும் மண்வெளியாய்
பட்டுத்தெரிக்கும் வாகன ஒளியாய்
விண்ணில் மின்னும் மின்னல் பூச்சிகளாய்
வான்வெளியின் மங்கிப்போன விண்மீன்களாய்
என்று எங்கும் நிறைந்த உன் இருப்பை என்னுள்
உணர்த்துகிறாய் உன் திரிதலின் மூலம்.

தொடர்பற்ற வார்த்தைகளைக் கொண்டு
அதனை தொடர்புருத்தவே விளைகிறேன்
நீண்டுவிட்ட இந்த வார்த்தைகளைப்போல்
முடிவிலிகளின் சூத்திரத்தைத்
தொடர்பற்ற சமன்பாடுகளால்
அதன் திரிதல்களைக்கொண்டு
சமன் செய்ய முனைகிறேன்
என் திரிதல்களோடு.

Thursday, August 12, 2010

அறியாத ஒன்று

யாரிடம் கேட்பது.....
எப்பொழுதும் கேள்விகளோடே
இந்த வாழ்க்கை நகருமென்றால்
என்ன பதில் சொல்வது
மனசாட்சிக்கு....

மாறாத எண்ணங்களுடன்
மீறாத காதலுடன்
மீளாத நினைவுடன்
இடையிடையே வந்துபோகும்
இல்லை என்னைக் கடந்துபோகும்
நான் அறியாப் பிம்பங்களை
நிறுத்திப்பார்க்கின்றேன்....
மறைந்து போன பிரியங்களோ இல்லை
மறைத்து வைக்கப்பட்ட எதன் பிம்பங்களோ
மீட்க முனைகின்ற ஒரு தருணத்தில்
வெற்றிடமாகிப்போன இந்த உள்ளொளியினில்
மெல்ல உட்புக முனையும் அதன் முன்முயற்ச்சியினை
நான் யாதென்று விளிப்பேன்.....

Tuesday, August 10, 2010

ஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு நன்றியும்

மருத்துவர் துமிழ் அவர்களின் மனித உடலின் ஒரு பாகத்தினைப்பற்றிய ஒரு பதிவு.

              அந்தப்பதிவினைப்படித்த உடன் எனக்கு என் பள்ளிக்கால நினைவுகள் வந்து போனது.  காரணம் இருக்கின்றது.  உயிரியல் பாடத்தினை நான் என்றுமே மனனம் செய்து படித்ததில்லை.  அந்தப்பருவத்தில் வேறு முக்கியமான வேலையில்லாத சமயங்களில் அந்தப் பாடப் புத்தகத்தினை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அது வாழ்க்கைக் கல்வியாக இருந்ததனாலே அதன் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் சொல்லாமலேயே முக்கியமாக மனனம் செய்யாமல் படித்துவிடுவேன்.  எங்கள் ஆசிரியரும் அதற்கு முக்கியமான காரணியாக இருந்தார்.  அவர் மூன்று மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தும் பொழுது எங்களுக்கு என்றுமே அயற்சி உண்டானதில்லை.  அத்தனை உற்சாகமாக இருக்கும்.  இடையே இடைவேளையும் கொடுப்பார்.  இடைவேளைக்குப் பின் இருக்கக்கூடிய ஒரு மணி நேரத்திற்காகவே நாங்கள் மூன்று மணி நேரத்தைக்கடந்தும் அதே உற்சாகத்துடன் அமர்ந்திருப்போம்.

         அந்த வயதினில் அந்த ஒரு மணி நேரம் மிக சுவரஸ்யமானதாகவும் மேலும் எங்கள் அறியாமையை போக்கும் ஒன்றாகவும் இருந்திருக்கின்றது,
என்பதை அறியாமலேயே கடந்து வந்து விட்டோம் என்பதை இன்று உணர்ந்திருக்கின்றேன்.  எங்களுக்கு இருக்கக்கூடியா பாலியல் ரீதியான சந்தேகங்களை விளக்குவதற்காகவே வாரத்தின் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தினை ஒதுக்குவார்.  ஒரு துண்டுச்சீட்டில் எங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எழுதிக்கொடுப்போம்.  ஒவ்வொருவருக்கும் விதவிதமான சந்தேகங்கள்.  தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், அந்த வயதுக்கே உரிய ஒரு சில விருப்பங்களும் எங்களை தூண்டியது.  நாங்கள் எழுதிக்கொடுத்த அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு அதிலிருந்து பத்து சீட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக பதில் சொல்வார்.  மீதி இருக்கக்கூடிய கேள்விகளை படித்துவிட்டு அது பற்றிய போதுவான விசயங்களை கோர்வையாக எங்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார்.

         பாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்களை எங்களுக்கு அறியக்கொடுத்தார். ஒரு சிலக்கேள்விகளைப் படித்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தூக்கி குப்பையில் போடுவார்.  நாங்கள் புரிந்து கொள்வோம் எவனோ ஒருவன் விவகாரமான கேள்வியினைக் கேட்டுள்ளான் என்பதை.  நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் அதைக்கேட்டால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள் என்பார். அவர் பாதிரியார் என்பதால் நாங்கள் FATHER என்றே அழைப்போம்.  அப்பொழுது விளையாட்டுத்தனமாக நாங்கள் கேட்டக் கேள்விகள் அப்பருவத்தில் முழுமையாக இல்லையானாலும் பின்பு ஒரு சில விசியங்களில் புரிதலை எனக்குக்கொடுத்தது. மேலும் ஒரு சில விசயங்களை சுய ஆர்வத்தின் காரணமாக படித்து தெரிந்து கொண்டேன்.  நான் படித்தது ஒரு பாலர் பள்ளியில். அவர் ஒரு ஆண் என்பதால் நிறை விசயங்களை வெளிப்படையாக விவாதித்தார்.  அதுவே இருபாலர் என்றால் அதுவும் ஆசிரியர் பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே எனக்குத்தோன்றுகிறது.

           பின்பு கல்லூரிக்காலத்திலும் தொடர்ந்தது.  நான் கல்லூரியில் முதன்மைப் பாடமாக இயற்பியல் பாடத்தினை படித்தேன்.  அங்கும் NSS இல் இணைந்ததன் மூலமாக பல மருந்துவத்துறை கருந்தரங்களிலும் மற்றும் சமுதாயப்பணிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது.  எயிட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நாடங்களை நாங்கள் கிராமங்களில் சென்று அரங்கேற்றுவோம்.   எங்களில் ஒரு சிலருக்கு பார்த்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் முகபாவனைகளை கண்காணித்து அறிக்கை தருமாறு கூறுவார்கள்.  ஒரு சில மிகச் சிக்கலான வசனங்கள் அதாவது மிக வெளிப்படையாக(பச்சையாக) ஒரு சில விசயங்களை (வசனங்களில்) சொல்வோம். அப்பொழுது பெரும்பாலனவர்களின் முகம்மாறும். அதுவரை அவர்கள் நம்பிக்கொண்டிருந்த அல்லது செய்துகொண்டிருந்த ஏதோ ஒன்று தவறு எனப் புலப்படும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். 

       கல்லூரியில் படிக்கும் போது முக்கியமாக அறிவியல் பிரிவு அல்லாது மற்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாலியல் ரீதியான அறிவு இல்லை என்பது என் அனுமானம்.  ஒரு சிலர் என்னிடம் கேட்கும் அல்லது கேட்ட கேள்விகளில் இருந்து அனுமானிக்கின்றேன். இதை பள்ளிப்பருவத்திலே கொண்டுவருவது அவசியமான ஒன்றாகவே எனக்குப்படுகின்றது.  ஆனால் இதை தொடங்குவதற்கு முன் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவேண்டியது அவசியம்.

இந்தப்பதிவை எழுதியதன் நோக்கமே பாலியல் கல்வி தேவை என்பதற்காகத்தான்.  அது எந்த அளவிற்கு இங்கு வெளிப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.  இது சம்பந்தமாக எத்தனையோ பதிவுகள் இந்த வலையுலகில் வந்துள்ளது. இது என்பங்காக இருக்கட்டும்.

மருத்துவர் துமிழ் அவர்களின் வலைப்பூ நிறைய பேருடைய சந்தேகங்களுக்கு நல்ல மருந்தாக அமைந்துள்ளது.  மேலும் ஒரு விசயம் அவருடைய வலைப்பூவின் பதிவுகள், என் நண்பர் ஒருவருடைய மனக்குறையை நீக்கி மண வாழ்க்கையை இனிமையாய் தொடங்கிட வழி கோலியுள்ளது.  என் நண்பரின் சார்பாக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Saturday, August 07, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

 தொடர்ப்பதிவிற்கு அழைத்த சவுந்தருக்கு நன்றி. 1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சமீர் அகமது.2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

 என் உண்மையான பெயர் சமீர் அகமது. முதலில் வலைப்பதிவின் பெயர் ஜீவன்பென்னி பதிவுகள் என்று இருந்தது. பின்பு பதிவுகள் என்று மாற்றிவிட்டேன்.  ஜீவன்பென்னி என் நண்பனின் புனைப்பெயர் அவன் நினைவாகவே இந்த வலைப்பூவிற்கு இதை வைத்தேன். இது சுந்தரராமசாமியின் ஜெஜே சில குறிப்புகள் நாவலில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

வலைப்பூவின் அறிமுகம் thatstamil.com மூலமாக அறிமுகமானது. ஒரு வருடம் வரையிலும் படித்துக்கொண்டு மட்டுமே இருந்தேன். எனது முதல் வலைப்பூவை  wordpressஸில் சென்ற வருடம் எப்ரல் மாதத்தில் ஆரம்பித்தேன். அதன் பிறகு இரண்டும் மாதம் கழித்து பிளாக்கருக்கு மாறியாகிவிட்டது.4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திரட்டிகளில் இணைப்பதோடு சரி.   இடுக்கையின் தரமே, அதன் பிரபலத்தன்மையை முடிவுசெய்யும். ஆனால் இங்கு நிலைமை வேறு. நான் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த வரையிலும் எனக்குப் பிடிக்கும் பட்சத்தில் ஓட்டும், கருத்துரையும் எழுதியிட்டு வந்தேன். வலைப்பூ ஆரம்பித்த உடன் அது குறைந்துவிட்டது. 


,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விசயங்களை அதிகமா பகிர்ந்ததில்லை. என் கண்ணில் நான் கண்டவை, சொல்லக்கேட்டவை, உணர்ந்தவை இப்படி அனைத்தையும் வைத்தே எழுதுகிறேன். என் சொந்த விசயங்களை வெளிப்படையாக எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை என்று நினைக்கின்றேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனநிலையினைப்பொருத்தே என் பதிவுகலும் அதன் வார்த்தைப்போக்கும் அமைகின்றன.  வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியதற்கு காரணம் பொழுது போக்கு பதிவுகள்தான்.  ஆரம்பத்தில் எழுதினேன்.  இப்பொழுது எழுதுவதில்லை.  அதற்குண்டான மனநிலை அமையும் பட்சத்தில் எழுதுவேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 பன்னீர்புஷ்பங்கள் என்ற மற்றொன்று உண்டு. அதில் ஒரு பதிவு மட்டுமே எழுதியிருக்கின்றேன்.8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 

அவரவர்க்கு அவரவர் வழி. எனக்கு என் வழி.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எனக்கு முதலில் பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தியவர் கலையரசன். அதன் பிறகு  அமீரக நண்பர்கள்.  ஒரு கட்டத்தில் பதிவுலகின் மீது ஏதோ ஒரு வெறுப்பு தோன்றி எழுதாமல் இருந்த பொழுது மீண்டும் என்னை எழுததத் தூண்டிய பதிவர் தேவா அவர்கள் மற்றும் கழுகுத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

அனைவருக்கு நன்றியும், வணக்கங்களும்.

சவுந்தர் நான் யாரையும் தொடரச்சொல்லப் போவதில்லை. இதை உனக்காக மட்டுமே எழுதினேன்.


Thursday, August 05, 2010

புகை எனக்குப் பகை-உங்களுக்கும் தான்

 அவர்கள் இருவரும் மிக சுவரசியமான முறையில் அந்த பகுதியே அலரும் வகையில் கத்திக்கொண்டிருந்தனர், இல்லையில்லை அவர்களைப்பொறுத்த வரையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.   அவர்கள் இருவருக்கும் நிச்சயம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது இருக்கக்கூடும்.  அவர்களுக்கு என்னைக்கண்டால் பிடிப்பதில்லை.  நான் வந்தால் என்னை முறைப்பதும்,  போகும் வழியினை வேண்டுமென்றே மறைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள்.  நான் இருப்பதும் அவர்கள் இருப்பதும் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில்தான்.


அவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதிற்கு காரணம், எனக்கு பிடிக்காத ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம்.  அவர்கள் கைகளும், வாய்களும் எப்போதும் புகைபோக்கிக்கொண்டிருக்கும்.  அதை ஒரு முறை நான் கண்டிக்க முற்படுகையில், அவர்களுக்கும் எனக்குமான முதல் பேச்சுவார்த்தை சிறு முறைப்புடன் முடிந்தது.  நான் அவர்களிடம் இங்கு வேண்டாம், இந்த இடத்திலிருந்து வெளியே சென்று அதை செய்யலமே என்றேன். ஏனென்றால், மாடிப்படி ஏறும் இடத்தில் குறுக்கலாக நின்று கொண்டு முழுப்பாதையையும் மறித்தோ அல்லது மறைத்தோ போவோர்க்கும் வருவோர்க்கும் இடைஞ்சலாக தானும் கெட்டு, போவோர் வருவோரையும் சேர்த்து தன் புகைபழக்கத்தினால் தொந்தரவு செய்துகொண்டிருந்தனர்.

ஒரு நாள் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் விட்டுச் சென்றுவிட்டிருந்தார்கள்.  நான் அணைத்துவிட்டு நேரக அவர்கள் வீட்டுக்சென்று அதைப்பற்றி கேட்கப்போக அது மீண்டும் பிரச்சனையில் முடிந்தது.  மேலும் அதை தாங்கள் செய்யவில்லை என்று சொல்லிவிட்டனர்.  அதற்குமேல் அங்கு விவாதம் செய்வது வீண் வேலை என்று தோன்றவே அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  அதன் பிறகே நான் மேலே சொல்லிய எதிர்வினைகள் எனக்கு கிடைத்தது.  அன்று முதல் சிகரெட்டை அணைப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டிருந்தார்கள்.  எப்போதும் புகைந்துகொண்டேயிருக்கும்.  நானும் என் கண்ணில் படும் நேரங்களில் அணைத்துக்கொண்டேயிருந்தேன்.

ஒரு வாரம் சென்றிருக்கும்,  அவர்கள் இருவரில் ஒருத்தருடைய குழந்தையை மருந்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல் வந்தது.  குழந்தையின் முகத்தினில் காயம், நன்றாக ஜுரமும் அடித்துக்கொண்டிருந்தது.  மருந்துவமணையில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.  அவர்கள் இருவரும் என்னைப் பார்ப்பதற்குத் தயக்கம் கொண்டு நான் சென்ற நேரம் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தனர்.  அழகான முகத்தின் கண்ணங்களின் ஒரு பக்கத்தில் திருஷ்டிப்பொட்டுப்போல் நல்ல ஆழமான   காயம், நெருப்பினால் சுட்டமாதிரி இருந்தது. அந்த பிஞ்சிற்கு எப்படி வலித்திறுக்கும்.  அதை நினக்கும்போது எனக்கும் வலித்தது. வலியில் குழந்தை சிணுங்கிக்கொண்டிருந்தது.


அதன் பிறகு இரண்டு முறை அவர்கள் வீட்டிற்கு சென்று  குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன்.  குழந்தைக்கு முகத்தினில் இருந்த காயம் ஆரத்தொடங்கியிருந்தது. சிறு குழந்தையாதலால் வளரும் போது இந்தக்காயம் மறைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அதன் தாயார் கூறினார்.  குழந்தைக்குக் காயம்பட்ட அடுத்த நாளிலிருந்து மாடிப்படிகளில் சிகரெட் வாசமும்,  வழியினை மறித்து பேசுவதும்  முற்றிலும் நின்றுவிட்டிருந்தது.   
காரணம் வேறொன்றும் இல்லை,  இவர்கள் அணைக்காமல் விட்டுச்சென்ற சிகரெட் அவர்களுடைய குழந்தையை தண்டித்துவிட்டது.  புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை அறியாத குழந்தை அந்த இடத்தில் கால் தடுமாறி விழ அங்கிருந்த அந்த நச்சுபாம்பு அந்த குழந்தையின் முகத்தை சுட்டுவிட்டது.

அவர்கள் சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக பின்பு அறிந்துகொண்டேன்.  இதை நான் கூறிய அன்றே நிறுத்தியிருந்தார்களானால் இந்த அசம்பாவிதமே நடந்திருக்காது.  நான் அவர்களை விட வயதில் இளையவன்,  இது கூட அவர்கள் என்னைப் புறக்கணிக்க காரணமாக இருந்திருக்கக்கூடும்.  இங்கு தனக்கென்று ஒன்று வரும் போதுதான் நம் மக்கள் அதன் வீரியத்தை உணருகின்றார்கள்.  வரும் முன் காப்போம் என்பதை நினைவு படுத்தினாலும் உணருவதில்லை.  இதை நான் கூறுவதால் நான் நல்லவன் என்று நினைக்கவேண்டாம்.  இந்தப் புகை விசயத்தில் நான் அதற்கு எதிரானவன் என்பதனால்தான் இங்கே இதைப் பகிற்கிறேன்.  இன்றும் என்றும் நடைப்பாதையில் கண்ணில் படும் புகைந்து கொண்டிருக்கும் அந்த புகையிலை அரக்கனை நான் அணைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன்,  என் காலைப் பதம்பார்த்த நாளிலிருந்து.  உங்களுக்கு புகைபழக்கம் இருக்குமானல் அதை விட்டுவிடுங்கள் இல்லையானல் அணைக்க முற்படுங்கள்.