Monday, December 20, 2010

முதல் கிறுக்கல்

சிறகொடிந்த பறவையொன்று
வீழ்ந்துகொண்டிருந்தது
கீழ்நோக்கி....
அதன் சிறகுகளோ
பறந்துகொண்டிருந்தன
மேல் நோக்கி....


முதன் முதலில் டைரி எழுத ஆரம்பித்த பொழுது கவிதை என்று  நினைத்துகொண்டு எழுதிய முதல் வார்த்தைகள்.

Sunday, December 19, 2010

ஒற்றை மழைத்துளி

தொடரும் பயணங்களில்
வழிந்தோடிக்கொண்டிருக்கின்றது
என்னுள் நிறைந்திருக்கும்
உன் சாரல் மழை.

நினைவுகளை நின்று விட்ட மழையின்
ஒற்றைத் துளி அடித்துச் செல்ல
சோ வென்ற மழை மொழி புதிதாய்
நிரம்பத்தொடங்குகின்றது.

காயத் தொடங்கும் முற்றத்து வாசலில்
குறுக்கும் நெடுக்குமாய்  நேர்கோட்டில் 
அணி சேரத்தொடங்கினர்
என் அழைய விருந்தாளிகள்.

மழைமேகங்கள் விலகிச்செல்ல
ஒற்றைத்துளியாய் சுழ் எங்கும்
பசுமை போர்த்திக்கொண்டு
பறவையின் சிலும்பல்களில்
சிந்திக்கொண்டிருந்தது என்னின்
ஒற்றை மழைத்துளி.

Thursday, November 25, 2010

இனிமையான இசையுடனான என் இரவு

இணையத்தில் யூடுயூப் தளத்தில் இசைக்கோர்வைகளைத்
தேடிக்கொண்டிருந்தேன்.  தெரியாத பெயர்களில் நிறைய வந்து விழுந்தது. ஒவ்வோன்றாக கேட்டுக்கொண்டேயிருந்தேன். அந்த வரிசையில் ஏஆர் ரஹ்மானின் பம்பாய் படத்தின் கரு(Theme) இசையினை நேரடியாக இசைக்கும் காணொளி இருந்தது.  படம் வெளியான பொழுதும், பின்பு தொலைக்காட்சியில் படத்தினைப் பார்த்த பொழுதும் கேட்டது.  அப்பொழுது தீம் இசையை விட பாடல்களின் மேலே ஈர்ப்பு அதிகமாக இருந்திருக்கக்கூடும்.  உண்மையச் சொல்லவேண்டும் என்றால், தீம் இசை என்றாலே என்ன வென்று தெரியாத அளவிற்கே என் இசையறிவு இருந்திருக்கும்.

அமைதியான டிங் டிங் என்ற மணியோசையுடன் ஆரம்பித்து,  பின்பு புல்லாங்குழல் இசையோடு அமைதியான அமைதியை உடல் முழுதும் பறவவிட்டு சட்டென மாறி வயலினுடன் ஆரம்பிக்கும் அந்த இசையை என்ன வென்று விவரிப்பது.  அற்புதமான அனுபவமாகவே நேற்றைய இரவு கழிந்தது.  மனம் முழுதும் அமைதியே குடிகொண்டு  யாருமற்ற அந்த தனிமையில்  உடல் முழுவதும் அதிர்வினை ஏற்படுத்திய இசையினை நீங்களும் கேளூங்கள்........

Saturday, November 20, 2010

உள்ளிருப்பவை....

முதலாய் தொடங்கி மிதவாய்
தனியாய்  திரிந்தாய் தனிந்தாய்
நினைவாய் பொதியாய் அலைந்தாய்
கனவாய் தினம் கனிவாய் ஒரு நாள்
மறு நாள் சரியாய் தவறாய்
அதனாய் அழிவாய் வருவாய் வெளியாய்
முடிவாய்....!!! முடிவாய்......!!!

Thursday, November 18, 2010

முதல் முதல்-3

ரொம்ப நாளாச்சுள்ள முதல் பாகம் இங்க கிளிக் பண்ணி படிக்கலாம் 

காதல் அருமையான உணர்வுன்னு ரொம்ப சுலபமா ஒரு வார்த்தைல சொல்லிட்டு போற விசயமில்ல.  அந்த உணர்வு உள்ள வந்த பின்னாலே வரக்கூடிய இல்லை கிடைக்கப்பெறக்கூடிய சந்தோசமும், வருத்தமும் அளவுக்கு அதிகமா இருக்கும்.  அது அவங்கவங்க திறமையப்பொருத்த விசயம்.   அதுக்கு நீங்க நல்லவனா இருந்தா மட்டும் போதாது ஒரு வேலையச்செய்ய எப்படி படிப்பும் திறமையும் முக்கியமோ அதவிட அதிகபடியான திறமைய இதுல காட்ட வேண்டியிருக்கும்.  இந்த விசயத்த பொருத்த வரைக்கும் திறமையிருந்தா படிப்பெல்லாம் ஒரு விசயமே இல்லங்க.


ஆனால் கேவுக்கு இத்துனை எளிதாக அமைந்ததில் அவனுக்கே ஆச்சரியம்தான். அத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவே அவன் பேரை சொல்லி அழைத்துவிட்டு வெட்கித் தலைகுனிந்திருந்தாள்.  பறக்கத்தொடங்கிய பட்டாம் பூச்சிகள் நண்பர்களின் கேளிப்பேச்சுகளில் மறைந்தன.  தலை குனிந்த வாரே அவள் இவனைக் கடந்து செல்ல,  இவனும் என்ன செய்வதென்று அறியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


வீணான கற்பனைகளுக்குள் செல்வதை அவன் மனம் என்றுமே அனுமதித்ததில்லை. ஆனால் அன்றைய இரவு அவன் மனமும் மூளையும் தூக்கத்துக்கு விடைகொடுத்துவிட்டு  நான்கு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து குதூகலித்துக்கொண்டிருந்தது.  அவள் கடந்து சென்ற பின்  இவனும் பின்னால் செல்ல நண்பர்களுக்குக் கொண்டாட்டமாய் போனது.  பேருந்து நிலையத்தில் பெருங்கூட்டம் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தது.  பேருந்து உள் நுழையும் போதே பையைப் போட்டு இடத்தினை பிடிக்க அனைவரும் முண்டியடிக்க, இவன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.


உங்கள் இயல்புகளை உடைத்துபோடும் வல்லமை காதலுக்கு மட்டுமே உண்டு.  அதுவரையிலும், கூட்டம் குறைந்த பின்னே பேருந்தினுள் ஏறிக்கொண்டிருந்தவன் முதல் முறையாக கூட்டத்தில் அடித்து பிடித்து ஏறி இரண்டு சீட்டுகளைப் பிடித்தான்.  உட்கார வருபவர்களை எதிர்த்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டிருக்க அவள் அந்தப் பேருந்தில் ஏறவேயில்லை.  அவன் நண்பர்களும் ஏறவில்லை.(இந்த இடத்துல நம்ம கே வழிஞ்ச வழிசல் இருக்கே, காலத்துக்கும் மறக்காது)

மறுநாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் எழுந்தவன் குளித்து முடித்து, உடைகளை அயர்ன் செய்து, முகத்தில் பேர் அண்ட் லவ்லியின் புதுப் பொழிவுடன்  பேருந்து  நிறுத்தத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே காத்திருக்க, அரை மணி நேரத்தில் அவளும் வர,  பேருந்து கிளம்பும் வரைக் காத்திருந்து விட்டு கிளம்பிய பின் ஒற்றைக்கையில் கம்பியைப் பற்றி தொத்திக்கொண்டான். சட்டென யாரோ இவன் பெயர் சொல்லி அழைக்க திரும்பிப்பார்த்தான் அவன் அண்ணன் நின்று கொண்டிருந்தார். கேவுக்கு அடிவயிற்றை ஏதோ செய்தது.

எனக்குப் பிடித்த ரஜினி படங்கள்

சினிமா சம்பந்தமா எழுதி ரொம்ப நாளாச்சு.  சின்ன வயசுல ரஜினி ரசிகனா இருந்து ஒரு கட்டத்துல கமல் படங்களுக்கு ரசிகனா மாறியாச்சு. நான் முதல்ல பார்த்த அதாவது தியேட்டர்ல பாத்த ரஜினி படம் சிவாஜிதாங்க,  இத நீங்க நம்பித்தான் ஆகனும்.  இப்போ வரிசைக்கு போகலாம்.................


1.முள்ளும் மலரும்....

சின்ன வயசுல ரஜினியோட ஆக்சன் படங்களா பார்த்துட்டு இந்தப் படத்த பார்க்கும் போது செம போர் அடிச்சுது.  என் ரசனை மாறி ஹீரோவும் மாறினப்பிறகு இந்தப் படத்த பார்த்தேன்.  "காளி ரொம்ப கெட்டவன் சார்" இந்த டயலாக்கும், இந்தப்படத்தின் பாடல்களும் மறக்கமுடியாத ஒன்னு. 


2.ஜானி...

மேல சொன்ன அதே கேட்டகிரியிலதான் இந்தப் படமும்.  இந்தப் படத்த பொதிகைல தான் முதன் முதல்ல பார்த்தேன்.  கார் திருடுறதுல ஆரம்பிச்ச உடனே சரி இதுவும் வழக்கமான ரஜினி படமோன்னு தான் நினைச்சேன்.  ஆனா இயக்குனர் மகேந்திரன் ரசினிய ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடிப்ப ரசினிக்கிட்டேர்ந்து கொடுத்திருப்பார்.  ஆனா ரசினி கண்ணாடி போட்ட வேசத்துல ரகளை பண்ணியிருப்பார்.

3.தளபதி...

இந்தப் படத்த எத்தனை தடவ போட்டாலும் பார்ப்பேன்.  எங்கயுமே தொய்வே வராது.  ஆர்ப்பாட்டமோ,  ஸ்டைலோ இல்ல பன்ச் டயலாக்கோ எதுவுமே இல்லாத, ரஜினியோட இன்னோரு பெஸ்ட் இந்தப் படம்.


4.மன்னன்....

படம் ஆரம்பிச்சதுலேர்ந்து கடைசி வரைக்கும் ரஜினி ரஜினி ரஜினி. அவருக்கு சம்மான வேடம் விஜயசாந்திக்கு.  என்ன சொல்ல இந்தப் படத்துல வர்ற டயலாக் எல்லாம் செம ரகளை. ரஜினி ஆண்-பெண் ஏட்டிக்குப் போட்டியா நடிச்ச படங்கள் எல்லாமே  சூப்பராதான் இருக்கும். படையப்பா(6)வும் இந்த வகைலதான் சேரும். பட் மன்னன் தான் பெஸ்ட்.


5.மூன்று முடிச்சு....

கமலும் ரசினியும் சேர்ந்து நடிச்ச படம்.  இதும் ஆண்-பெண் எதிர் எதிர் என்ற கேட்டகிரியிலதான் சேருது.  கமல் இறந்து போன பின்னாடிதான் கதையே ஆரம்பிக்கும்.  ஸ்ரீதேவி ரஜினி காம்பினேசன்ல இதுவும் எனக்குப்பிடிச்ச படம்.

 ஒரு முக்கியமான விசயம் ஆக்சன் படங்களிலேயே த பெஸ்ட் அப்புடின்னு சொன்னா அது பாட்சா(7) மட்டும் தான்.  என்னா படங்க அது. இது எழுதும்போதே எனக்கு சிலிர்த்துப்போகுது.  எத்தனை தடவ பார்த்திருக்கேன் கணக்கே இல்லங்க.  இந்த மாதிரி ஒரு படம் மறுபடியும் வருமாங்குறது எனக்குத்தெரியல.  பட் என்ன சொல்ல சூப்பரோ சுப்பர் இததான் சொல்லமுடியும்.

தொடர் பதிவுக்கு அழைத்த தேவா அண்ணாவுக்கு நன்றிகள் .

Sunday, October 24, 2010

வாழ்வே மாயம்

அது கல்லூரிக்காலம்.  புத்தகங்களை மிகத்தீவரமாக வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.  ஒரு நாள் திருச்சி தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் சு.ரா வின் ''என் உரைகள்'' மற்றும் சி.சு செல்லப்பாவின் ''வாடிவாசல்'' என இரண்டையும் தேடிக்கொண்டிருந்தேன்.  அப்பொழுதுதான் அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. "மரணம் மற்றும்" இதுதான் புத்தகத்தின் தலைப்பு.  கன்னடத்து சிறுகதைகளின் தொகுப்பு.  தமிழில் அதை நஞ்சுண்டான் மொழிப்பெயர்த்திருந்தார்.  மரணம் என்கின்ற வார்த்தையும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அர்த்தங்களும் என்று ,  மரணம் என்ற வார்த்தையில் எனக்கு பயமே உண்டானது.

 ஆனாலும் அந்தப் புத்தகத்தை வாங்கி விட்டேன்.  மரணத்தைப் பற்றியும் அதன் பின் நடக்கக்கூடியவைகளைப் பற்றியும் சொல்லிச்சென்றது.  இப்பொழுது அந்த கதைகள் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.  அதனால் ஏற்பட்ட பாதிப்பு இன்றும் தொடர்கின்றது.  ஒரு புரிதல் என்று கூட அதனைக்கூறுவேன்.  இன்ஸூரன்ஸ் துறையில் வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது உங்கள் மரணத்திற்கு பின் என்ற வார்த்தை உபயோகத்தை முடிந்த அளவிற்கு தவிர்க்க முயற்சி செய்வோம்.  இப்படி பொதுவாக நாம் அதனையும், அதனைப்பற்றி பேசுவதையும் தவிற்கவே விருப்புகின்றோம்.  நேற்று தேவா அவர்களின் ஒரு பதிவுத்தொடரை படிக்க நேர்ந்தது. வாழ்வே மாயம் என்ற தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதப்பட்ட ஒரு தொடர்.  


ஒருவரின் மரணத்தில் தொடங்கி அந்த உடல் எரியூட்டப்படுவது வரையான தன் எண்ண ஓட்டங்களை மிக எதார்த்தமாக எழுதியிருந்தார்.  சிலருடைய பதிவுகளை நாம் படிக்கத்தொடங்கிய காலகட்டதிலிருந்தே தொடர்கிறோம் அதற்கு முன் அவர் எழுதியவைகளை கண்டுகொள்வதில்லை, அதற்கான நேரமும் கிடைப்பதில்லை.  நேற்று இந்த பதிவு வாழ்வே மாயம் என் கண்ணில் பட்டது.  அதை அனைவரிடமும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை தேவா அவர்களின் அனுமதியுடன் பகிர்கின்றேன். 



Thursday, October 07, 2010

நிறைவு

இவர் என் வாழ்க்கையின் உள்ளே வருவார் என்று நான் நினைத்துப்பார்த்தது இல்லை.  அவரும் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்.  ஆனால் அது நடந்துவிட்டது.  அதனில் தானே வாழ்க்கையின் சுவரசியமும் அடங்கியிருக்கின்றது. அவருடைய பதிவுகளை படிக்காமலேயே தலைப்பைப் பார்த்த நொடியில் ஓட்டுப்போட்டுவிட்டேன்.  அந்த பதிவு அறை வீடு.  வோட் செய்த அடுத்த அரைமணி நேரத்தில் சாட் விண்டோவில் ஒரு அழைப்பு.  அனுமதித்துவிட்டு காத்திருந்தேன்.

அடுத்த நொடியில் வணக்கம் என்ற வாசகத்துடன், வாக்களித்ததிற்கு நன்றி என்ற தகவல் வந்தது.  நான் எந்தப்பதிவுக்கு என்றேன்.  என் பதிவுக்கு தற்பொழுதுதானே வாக்களித்தீர்கள் என்றார். மீண்டும் எந்த பதிவு என்றேன். அறைவீடு என்றார்.  நான் அப்படியா உங்கள் பதிவின் தொடுப்பை அனுப்புங்கள் என்றேன்.  பார்த்துவிட்டு உங்கள் பதிவின் தலைப்பையும், புகைப்படத்தையும்  பார்த்தேன் பிடித்திருந்தது.  அதனால் வாக்களித்தேன், ஆனால் இன்னும் படிக்கவில்லை என்றேன்.   பிறகு பரஸ்பர அறிமுகத்தில் இருவரும் ஒரே ஊர் என்று தெரிந்தது.  நான் என் தொலைப்பேசி எண்ணை அவரிடம் அளித்துவிட்டு அவருடைய எண்ணைக்கேட்டேன்.  அவர் தரவில்லை.

அடுத்த நாள் காலைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.  தன் பதிவின் முகவரியை கொடுத்து புதிய பதிவு என்றார்.  நேற்று அவருக்கு வாக்களித்த பதிவையே இன்னும் படிக்கவில்லை,  அதற்குள் மற்றொன்றா.  ஆஹா வசமா மாட்டிக்கிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.  நான் அவரிடம் இதற்கு முந்தைய பதிவையே நான் இன்னும் படிக்கவில்லையே, எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே கருத்துறையும், வாக்கும் அளிப்பேன் என்றேன்.


அலுவலக நேரத்தில் பதிவுகளை படிக்க இயலாத சமயங்களில் வாக்களித்துவிட்டு தமிழிஸின் என்னுடைய புரொபைலில் சென்று அன்று வாக்களித்த பதிவுகளை படிப்பது என் வழக்கமாக இருந்தது அப்போது.
தொடர்ந்து அவரும் அவருடையப் பதிவுக்கான தொடுப்புகளை அனுப்பிக்கொண்டே இருந்தார்.  நான் அப்பொழுது பதிவுகள் எழுதுவதை நிருத்தி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. (உருப்படியான ஒன்றையும் எழுதியதில்லை அதனால்)  பதிவுலகில் சில பல அரசியல்களும் அரங்கேறிய நேரம் அது. ஒரு சலிப்பு என்று கூட அதனை சொல்லலாம்.

ஒரு வழியாக அறைவீடு பதிவினைப் படித்தேன்.  அதில் நான் இருந்தேன்.  என் பாட்டியும் தாத்தாவும் இருந்தார்கள்.  அருமையான பதிவு அது.  எங்கள் அறைவீடு என் கண்முன் வந்துச்சென்றது.  ஒரு ஈர்ப்பு உண்டாது, அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வந்தது.  அவருடைய எழுத்துக்கள் ஒரு தேடலை நோக்கிச்செல்வதாக தோன்றியது.  அவருடைய பழைய பதிவுகளையும் படிக்கத்தொடங்கினேன்.

முதலில் முழுவதுமாக விளங்கவில்லை.  அவரது பதிவின் பயணம் நம்மை எங்கே கொண்டு போய் நிருத்தப் போகின்றது,  அதன் மையம் எங்கே என்றக் கேள்வி எங்கே என்ற தேடலின் உந்துதல் உண்டானது.  அடுத்த பதிவில் மரணத்திற்குப்பிறகான வாழ்க்கை என்ற கருவைக்கொண்டு வடித்திருந்தார்.  அந்தப்பதிவைப் போடுவதற்கு ஒரு நாள் முன், தொலைப்பேசி எண்ணைக் கேட்டார் முதல் முறையாக பேசினோம்.   அந்தப் பதிவின் கேள்வியைக்கேட்டார்.  நானும் அதற்கான பதிலை தந்துவிட்டேன்.  அடுத்த நாள் அந்தக்கேள்வியே ஒரு பதிவாக நீண்டிருந்தது.  பின்பு அந்தக் கேள்வி என்னிடம் மட்டும் கேட்கப்படவில்லை என்று தெரிந்துகொண்டேன்.

ஒன்று மட்டும் உறுதி, தன் இலக்கு என்னவென்பதை சரியாகத்தெரிந்தவனுக்கு எதுவுமே ஒரு பிரச்சனையில்லை.  இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்குப் பொருந்தும்.  தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.  தன் புரிதலை உடைக்கும் முகமாய யாராகிலும் வரமாட்டார்களா என காத்துக்கொண்டிருப்பவர். இது புகழ்ச்சியாகத்தெரிந்தால் அது உங்கள் தவறு.


 தொடர்ச்சியான உரையாடல்களில் புரிதல்களின் அடையாளமாய்    எங்கள் உரையாடல்களின் தோரணை மாறிய ஒரு பொழுதில் திட்டமிடாமல் ஒரு சந்திப்பு அவர் வீட்டினில் நடைப்பெற்றது.  அங்கிருந்து தொடங்கிய அண்ணன் என்கின்ற புதிய உறவு ஒரு நாளின் அனேக நேரங்களை அவருடன் பேசுவதிலேயே கழிந்துவிடச்செய்கின்றது.


இதற்கு பதிவுலகத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பதிவுலகத்திற்குள் வந்த நாட்களில் ஒரு சில பதிவர்களுக்கிடையேயான உரையாடல்களையும், பதிவுகளைப் படிக்கும் பொழுதும் அவர்களுக்கிடையேயான ஒரு அன்யோன்யத்தை உணர முடியும். இது எப்படி என்று வியந்து போவேன். அதை என் வாழ்விலும் சாத்தியமாக்கி உணர வைத்த பதிவுலகம் என்ற களத்திற்கு நன்றிகள்.

  அண்ணனுக்கு இன்றைக்கு பிறந்த நாளாம்,  ஒரு வாரமாக எனக்கு நியாபக அஞ்சல்கள் வந்துகொண்டேயிருக்கின்றது.  பிறந்த நாளை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  எப்பொழுதும் அதையும் வருடத்தின் ஒரு நாளாகவே என்னளவில் எடுத்துக்கொள்வேன்.  என் பிறந்த தினத்தையே மறந்துவிடும் அளவிற்கே என் ஆர்வம் இருக்கும். ஆனால் இன்று ஓர் மாற்றம்.

தேவா அண்ணா, பிறந்தநாள் வாழ்த்துகள்.

Wednesday, October 06, 2010

தோன்றிக்கொண்டிருப்பவை

ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு யுகங்களாய் தொடர்ந்து
கொண்டிருக்கும் இப்பூகோளத்தின் நகர்தலில்
நில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் நினைவுகளை
யாதோரு வலியுமில்லாமல் எதிர்வரும் முகங்களில்
திணிக்க எண்ணுகிறேன்.....

எதிரெதிரே வரும் முகங்களில்
மாறிமாறி நிகழும் மோதல்களில்
வீரியமற்ற என்னின் நினைவுகளும் மோதி
மோதித் திரும்புகின்றன புதிய நிறங்களுடன்.....

சில நேரங்களில் அதன் இயல்புத்தன்மைகள்
பஞ்சுப் பொதிகளின் தன்மையை ஒத்திருக்கின்றது
இலக்கில்லாமல் சிறகுகளின்றிப் பறக்கச் செய்யும்
அதனில் சிக்கிக்கொண்டு நான் இளகுவதை உணர்கிறேன்...

வீடு திரும்பலில் இருக்கும் இனிமையை தொலைத்துவிட்ட
தனிமையான இந்நாட்களில்
எங்கும் பறந்து நிறைந்து இறைந்து கிடக்கும்
பின்னிப்பிணைந்த அதன் தொடர்புகளில்
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக தாவிக்கொண்டு
வேர் நோக்கிய அதனின் பயணங்களில்
தொலைந்து கொண்டேயிருக்கின்றன என்னின் தூங்கா இரவுகள்......

Wednesday, September 29, 2010

முதல் முதல்-2

                    கே விற்கு தெரியாது அன்று நடக்கப்போகும் அந்த விபத்து அவன் பாதையை மாற்றி வாழ்க்கையை தடம்புரளச் செய்யப்போகின்றது என்று. பள்ளிப்படிப்பை முடித்த பின்பு பொறியியல் கல்லுரியில் சேர்வதற்காக நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்தான். அதில் சேர்ந்து ஒரு வாரங்கள் கடந்திருக்கும்.  அன்றும் வழக்கம் போல் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தான்.

                      அவளின் முதல் பார்வை அவனை ஒன்றுமே செய்யவில்லை. அவன் அந்தப்பேருந்திலும் ஏற வில்லை.   பேருந்து அவனைக் கடந்த பின்பே ஏதோ ஒன்று தாக்கியதை உணர்ந்தான்.  உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனை உசுப்பி விட பேருந்தை நோக்கி ஓடத்தொடங்கினான்.  சிறிது தூரம் சென்ற பேருந்து அவனை மூச்சிரைக்க விடமால் அவனுக்காக நின்றது. சன்னல்லிருந்து   மீண்டும் அதே பார்வை புன்னைகையுடன்.  பேருந்து நின்று விட்டதே என்று இவனும் நிற்க, நொடிப்பொறுமையின்றி  மீண்டும் இவனை விட்டுவிட்டு அது கிளம்பி விட்டது.


                     சிவப்பு நிற தாவணியில், முகத்தில் இருந்த திருநீரும்,ஜவ்வாதும் , சிரிப்பில் தெரிந்த தெத்துப்பள்ளும் என்று அந்த முகம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தது.  தனக்குள் ஒரு மாற்றத்தை அவன் உணர்ந்தான். அடுத்த நாள் முதல் அவளுக்காக காத்திருக்கத்தொடங்கினான். ஒரு வாரம் கடந்த பின்பும் அவள் முகம் காணக்கிடைக்கவில்லை.   நம்பிக்கையற்றவனாய் வாரத்தின் தொடர்ச்சியான ஒரு நாளில் காத்திருக்க மீண்டும் அவள்.

                     அதே பார்வை, அதே புன்னகை. பரவசமும் ஆச்சரியமுமாய் இருவரின் பார்வைகளும் மோதிக்கொண்டன. பேருந்து நிற்கவில்லை, தலையை வெளியே நீட்டித் திரும்பிக் கேவைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இவன் சப்த நாடிகளும் அவளுக்காகவே வாழ்ந்து முடித்தன, அந்தக் கணத்தில். பின்னால் வந்த மற்றொரு பேருந்தில் ஏறி  பின் தொடர்ந்தான்.  விதி வலியது என்பார்கள்.  முன்னால் சென்ற பேருந்து நேரே செல்ல,எங்கே போகின்றது என்பதை அறியாமலேயே இவன் ஏறிய பேருந்து  வலதுபக்கம் திரும்பியது.

                   வழக்கம் போல் அன்றும் வகுப்பிற்கு தாமதமாக சென்றவன்,  அனுமதி மறுக்கப்பட்டு அந்தக் கல்லூரியின் மைதானத்தில் தனியாக அமர்ந்திருந்தான். 
மதிய உணவுக்கான இடைவேளையில் நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.  அவர்களுடன் பேசிக்கொண்டே கல்லூரியின் உணவு விடுதியை நோக்கி நடக்க  எதிர்வரும் முகங்களில் எல்லாம் அவளின் முகத்தை தேடத்துவங்கினான்.  நண்பர்களின் கேளியும். கும்மாளமுமாய் இருந்த ஒரு கணத்தில் அதே முகம் இவனைக் கடந்து சென்றதை இவன் தவற விட அவள் தேடிக்கொண்டிருந்த முகத்தை கண்டுகொண்டாள்.

                    காத்திருக்கவைப்பதிலும், தவிக்க விடுவதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்.  எத்தனை மணி நேரங்கள் தாமதமாக வந்தாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமால் பேசுவது அவர்களுக்கு மட்டுமே உள்ள திறமையென்பது பின் வந்த நாட்களில் தெரிந்துகொண்டான்.  கண்ணாமுச்சியாட்டம் மேலும் ஒரு வாரங்களுக்குத் தொடர்ந்தது. நொந்தே போனான்.  இது தேவையா என்ற கேள்வியும் அவன் மனதில் தோன்றாமல் இல்லை.  விட்டுவிட நினைத்தாலும் மனதில் பதிந்துவிட்ட முகம் இமை மூடும் தருணத்தில் எல்லாம் உள் வந்து இம்சை செய்து கொண்டிருந்தது.

பயிற்சி முடிந்த ஒரு நாளின்  மாலை வேலையில் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த பொழுதில்  இவன் பேர் சொல்லி அழைத்த குரல் கேட்டு  திருப்பிப்பார்க்க........... கே வைச் சுற்றிப் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்தன...........

Sunday, September 26, 2010

முதல் முதல்

முதல் சிரிப்பில்
அதிர்ந்துதான் போனது
பின் வந்த சென்ற ஒவ்வொருச் சிரிப்பிலும்
அதிர்ந்து அதிர்ந்து அதிர்வு நிரந்தரமான ஒன்றானது....

முதல் பார்வையில்
சிறகுகள் முளைத்தது
பின் வந்த சென்ற ஒவ்வொருப் பார்வையிலும்
அறியாத் திசை நோக்கிப் பறக்கச் செய்தது.......

முதல் ஸ்பரிசத்தில்
அருகாமையின் அருமையை
சிலிர்த்து அடங்கும் மயிற்கால்கள்
நிதமும் உணரவைத்தது........


முதல் மோதலில்
அடங்கித்தான் போனது....
பின் வந்த தொடர் மோதல்களில்
முன் வரும் கோபம் பின்வராமல் போனது..........


முதல் கோணலில்
கனவுக்கோட்டையின் பாதாளத்தில்
காவு வாங்கிய கைதியின்
உயிர் பிரியும் வலியிருந்தது........


முதல் முத்தம்
அறியும் தருணம்  வரவில்லை
கொடுக்கவோ இல்லை தடுக்கவோ
யார் கையும் உதடும் துடிக்கவில்லை......

முதல் முதல் என்று நீண்டு கொண்டிருந்த ஒவ்வொன்றும்
கற்பனையின் உச்சத்தில் தூர நின்று ரசிக்கும்
சராசரிப் பார்வையாளனின் ஒரு மணிநேர
பேருந்துப் பயணத்தில் முடிந்து போனது.........

Saturday, August 28, 2010

கண்ணாமூச்சியாட்டம்

உள் விழும் கிரகணங்களை
ஊடுருவிச் சென்று எப்போதும்
தேடிக்கொண்டிருக்கும் புழுதிகளை
அது மின்னி மறையும் தருணங்களில்
நான் நினைத்துக்கொள்வேன்
விடை கிடைத்து விட்டதென்று...

மின்சாரமற்ற ஒரு நாளின்
பகல் பொழுதொன்றில்
இருண்டு கிடக்கும் என் அறையின்...
அசைந்தாடும் ஒற்றை மஞ்சள் நிற விளக்கொளி
 பரப்பிக்கிடந்த புத்தகங்களின் பின் பக்கத்தினை
வெளிச்சமிட்டு காட்டிக்கொண்டிருந்தது...

நின்றுபோன கடிகாரத்தில்
முன்பின் என முண்டியடித்துகொண்டிருந்த நொடிமுள்ளின்
நகர்வுகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தது
அசைவற்ற மஞ்சள் நிறப் பல்லியொன்று.

தேடித்திரியும் வண்டுகள் போல்
பொதுவான ஒன்றான ஒன்றை
நேற்று இன்று நாளை என்று...
அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
அதன் செயல்களில் ஒளிந்துகொண்டு
கண்களை திறந்து கொண்டு விளையாடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில் நானும் ஒருவனாகவே இருக்கின்றேன்...

Sunday, August 15, 2010

திரிதல்

உருகும் வெண்பனிமலையின் 
குளுமையை உணர்ந்தேன்
நீ அருகில் இருக்கும் தருணங்களில்.

இங்கு நீ என்று எழுதியதால்
அவனோ அவளோ அதுவோ
நானோ நீயோ என்னோ உன்னோ
என்று வைத்துக்கொள்கிறேன் இல்லை
வைத்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சிக் குலாவும் ஊரித்திரியும்
குழந்தையெனக்கொள்கிறேன் அதன் திரிதல்களை.
விடிகாலைப்பொழுதை நீ வெள்ளனவே என்னும் போது
உருமாறிய வார்த்தையைப் போல்
உன் விருப்பங்களும் திரிதல்களும்
நகரும் பூகோளத்தினை யொத்தெ நகர்கின்றது.

வெற்றுக்கால்களுடன் உன்னுடன் நான் பயணிக்கும்
தருணங்களில் என் மீது மோதிச்செல்லும் காற்றாய்
கிளரிச்செல்லும் மண்வெளியாய்
பட்டுத்தெரிக்கும் வாகன ஒளியாய்
விண்ணில் மின்னும் மின்னல் பூச்சிகளாய்
வான்வெளியின் மங்கிப்போன விண்மீன்களாய்
என்று எங்கும் நிறைந்த உன் இருப்பை என்னுள்
உணர்த்துகிறாய் உன் திரிதலின் மூலம்.

தொடர்பற்ற வார்த்தைகளைக் கொண்டு
அதனை தொடர்புருத்தவே விளைகிறேன்
நீண்டுவிட்ட இந்த வார்த்தைகளைப்போல்
முடிவிலிகளின் சூத்திரத்தைத்
தொடர்பற்ற சமன்பாடுகளால்
அதன் திரிதல்களைக்கொண்டு
சமன் செய்ய முனைகிறேன்
என் திரிதல்களோடு.

Thursday, August 12, 2010

அறியாத ஒன்று

யாரிடம் கேட்பது.....
எப்பொழுதும் கேள்விகளோடே
இந்த வாழ்க்கை நகருமென்றால்
என்ன பதில் சொல்வது
மனசாட்சிக்கு....

மாறாத எண்ணங்களுடன்
மீறாத காதலுடன்
மீளாத நினைவுடன்
இடையிடையே வந்துபோகும்
இல்லை என்னைக் கடந்துபோகும்
நான் அறியாப் பிம்பங்களை
நிறுத்திப்பார்க்கின்றேன்....
மறைந்து போன பிரியங்களோ இல்லை
மறைத்து வைக்கப்பட்ட எதன் பிம்பங்களோ
மீட்க முனைகின்ற ஒரு தருணத்தில்
வெற்றிடமாகிப்போன இந்த உள்ளொளியினில்
மெல்ல உட்புக முனையும் அதன் முன்முயற்ச்சியினை
நான் யாதென்று விளிப்பேன்.....

Tuesday, August 10, 2010

ஒரு சில எண்ணங்களும்-துமிழ் அவர்களுக்கு நன்றியும்

மருத்துவர் துமிழ் அவர்களின் மனித உடலின் ஒரு பாகத்தினைப்பற்றிய ஒரு பதிவு.

              அந்தப்பதிவினைப்படித்த உடன் எனக்கு என் பள்ளிக்கால நினைவுகள் வந்து போனது.  காரணம் இருக்கின்றது.  உயிரியல் பாடத்தினை நான் என்றுமே மனனம் செய்து படித்ததில்லை.  அந்தப்பருவத்தில் வேறு முக்கியமான வேலையில்லாத சமயங்களில் அந்தப் பாடப் புத்தகத்தினை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அது வாழ்க்கைக் கல்வியாக இருந்ததனாலே அதன் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. யாரும் சொல்லாமலேயே முக்கியமாக மனனம் செய்யாமல் படித்துவிடுவேன்.  எங்கள் ஆசிரியரும் அதற்கு முக்கியமான காரணியாக இருந்தார்.  அவர் மூன்று மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தும் பொழுது எங்களுக்கு என்றுமே அயற்சி உண்டானதில்லை.  அத்தனை உற்சாகமாக இருக்கும்.  இடையே இடைவேளையும் கொடுப்பார்.  இடைவேளைக்குப் பின் இருக்கக்கூடிய ஒரு மணி நேரத்திற்காகவே நாங்கள் மூன்று மணி நேரத்தைக்கடந்தும் அதே உற்சாகத்துடன் அமர்ந்திருப்போம்.

         அந்த வயதினில் அந்த ஒரு மணி நேரம் மிக சுவரஸ்யமானதாகவும் மேலும் எங்கள் அறியாமையை போக்கும் ஒன்றாகவும் இருந்திருக்கின்றது,
என்பதை அறியாமலேயே கடந்து வந்து விட்டோம் என்பதை இன்று உணர்ந்திருக்கின்றேன்.  எங்களுக்கு இருக்கக்கூடியா பாலியல் ரீதியான சந்தேகங்களை விளக்குவதற்காகவே வாரத்தின் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தினை ஒதுக்குவார்.  ஒரு துண்டுச்சீட்டில் எங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எழுதிக்கொடுப்போம்.  ஒவ்வொருவருக்கும் விதவிதமான சந்தேகங்கள்.  தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், அந்த வயதுக்கே உரிய ஒரு சில விருப்பங்களும் எங்களை தூண்டியது.  நாங்கள் எழுதிக்கொடுத்த அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு அதிலிருந்து பத்து சீட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக பதில் சொல்வார்.  மீதி இருக்கக்கூடிய கேள்விகளை படித்துவிட்டு அது பற்றிய போதுவான விசயங்களை கோர்வையாக எங்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார்.

         பாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்களை எங்களுக்கு அறியக்கொடுத்தார். ஒரு சிலக்கேள்விகளைப் படித்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தூக்கி குப்பையில் போடுவார்.  நாங்கள் புரிந்து கொள்வோம் எவனோ ஒருவன் விவகாரமான கேள்வியினைக் கேட்டுள்ளான் என்பதை.  நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் அதைக்கேட்டால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள் என்பார். அவர் பாதிரியார் என்பதால் நாங்கள் FATHER என்றே அழைப்போம்.  அப்பொழுது விளையாட்டுத்தனமாக நாங்கள் கேட்டக் கேள்விகள் அப்பருவத்தில் முழுமையாக இல்லையானாலும் பின்பு ஒரு சில விசியங்களில் புரிதலை எனக்குக்கொடுத்தது. மேலும் ஒரு சில விசயங்களை சுய ஆர்வத்தின் காரணமாக படித்து தெரிந்து கொண்டேன்.  நான் படித்தது ஒரு பாலர் பள்ளியில். அவர் ஒரு ஆண் என்பதால் நிறை விசயங்களை வெளிப்படையாக விவாதித்தார்.  அதுவே இருபாலர் என்றால் அதுவும் ஆசிரியர் பெண்ணாக இருந்திருக்கும் பட்சத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே எனக்குத்தோன்றுகிறது.

           பின்பு கல்லூரிக்காலத்திலும் தொடர்ந்தது.  நான் கல்லூரியில் முதன்மைப் பாடமாக இயற்பியல் பாடத்தினை படித்தேன்.  அங்கும் NSS இல் இணைந்ததன் மூலமாக பல மருந்துவத்துறை கருந்தரங்களிலும் மற்றும் சமுதாயப்பணிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது.  எயிட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நாடங்களை நாங்கள் கிராமங்களில் சென்று அரங்கேற்றுவோம்.   எங்களில் ஒரு சிலருக்கு பார்த்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் முகபாவனைகளை கண்காணித்து அறிக்கை தருமாறு கூறுவார்கள்.  ஒரு சில மிகச் சிக்கலான வசனங்கள் அதாவது மிக வெளிப்படையாக(பச்சையாக) ஒரு சில விசயங்களை (வசனங்களில்) சொல்வோம். அப்பொழுது பெரும்பாலனவர்களின் முகம்மாறும். அதுவரை அவர்கள் நம்பிக்கொண்டிருந்த அல்லது செய்துகொண்டிருந்த ஏதோ ஒன்று தவறு எனப் புலப்படும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். 

       கல்லூரியில் படிக்கும் போது முக்கியமாக அறிவியல் பிரிவு அல்லாது மற்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாலியல் ரீதியான அறிவு இல்லை என்பது என் அனுமானம்.  ஒரு சிலர் என்னிடம் கேட்கும் அல்லது கேட்ட கேள்விகளில் இருந்து அனுமானிக்கின்றேன். இதை பள்ளிப்பருவத்திலே கொண்டுவருவது அவசியமான ஒன்றாகவே எனக்குப்படுகின்றது.  ஆனால் இதை தொடங்குவதற்கு முன் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவேண்டியது அவசியம்.

இந்தப்பதிவை எழுதியதன் நோக்கமே பாலியல் கல்வி தேவை என்பதற்காகத்தான்.  அது எந்த அளவிற்கு இங்கு வெளிப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.  இது சம்பந்தமாக எத்தனையோ பதிவுகள் இந்த வலையுலகில் வந்துள்ளது. இது என்பங்காக இருக்கட்டும்.

மருத்துவர் துமிழ் அவர்களின் வலைப்பூ நிறைய பேருடைய சந்தேகங்களுக்கு நல்ல மருந்தாக அமைந்துள்ளது.  மேலும் ஒரு விசயம் அவருடைய வலைப்பூவின் பதிவுகள், என் நண்பர் ஒருவருடைய மனக்குறையை நீக்கி மண வாழ்க்கையை இனிமையாய் தொடங்கிட வழி கோலியுள்ளது.  என் நண்பரின் சார்பாக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Saturday, August 07, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

 தொடர்ப்பதிவிற்கு அழைத்த சவுந்தருக்கு நன்றி. 



1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சமீர் அகமது.



2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

 என் உண்மையான பெயர் சமீர் அகமது. முதலில் வலைப்பதிவின் பெயர் ஜீவன்பென்னி பதிவுகள் என்று இருந்தது. பின்பு பதிவுகள் என்று மாற்றிவிட்டேன்.  ஜீவன்பென்னி என் நண்பனின் புனைப்பெயர் அவன் நினைவாகவே இந்த வலைப்பூவிற்கு இதை வைத்தேன். இது சுந்தரராமசாமியின் ஜெஜே சில குறிப்புகள் நாவலில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்.




3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

வலைப்பூவின் அறிமுகம் thatstamil.com மூலமாக அறிமுகமானது. ஒரு வருடம் வரையிலும் படித்துக்கொண்டு மட்டுமே இருந்தேன். எனது முதல் வலைப்பூவை  wordpressஸில் சென்ற வருடம் எப்ரல் மாதத்தில் ஆரம்பித்தேன். அதன் பிறகு இரண்டும் மாதம் கழித்து பிளாக்கருக்கு மாறியாகிவிட்டது.



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திரட்டிகளில் இணைப்பதோடு சரி.   இடுக்கையின் தரமே, அதன் பிரபலத்தன்மையை முடிவுசெய்யும். ஆனால் இங்கு நிலைமை வேறு. நான் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த வரையிலும் எனக்குப் பிடிக்கும் பட்சத்தில் ஓட்டும், கருத்துரையும் எழுதியிட்டு வந்தேன். வலைப்பூ ஆரம்பித்த உடன் அது குறைந்துவிட்டது. 


,5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விசயங்களை அதிகமா பகிர்ந்ததில்லை. என் கண்ணில் நான் கண்டவை, சொல்லக்கேட்டவை, உணர்ந்தவை இப்படி அனைத்தையும் வைத்தே எழுதுகிறேன். என் சொந்த விசயங்களை வெளிப்படையாக எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை என்று நினைக்கின்றேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனநிலையினைப்பொருத்தே என் பதிவுகலும் அதன் வார்த்தைப்போக்கும் அமைகின்றன.  வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியதற்கு காரணம் பொழுது போக்கு பதிவுகள்தான்.  ஆரம்பத்தில் எழுதினேன்.  இப்பொழுது எழுதுவதில்லை.  அதற்குண்டான மனநிலை அமையும் பட்சத்தில் எழுதுவேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 பன்னீர்புஷ்பங்கள் என்ற மற்றொன்று உண்டு. அதில் ஒரு பதிவு மட்டுமே எழுதியிருக்கின்றேன்.



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 

அவரவர்க்கு அவரவர் வழி. எனக்கு என் வழி.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எனக்கு முதலில் பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தியவர் கலையரசன். அதன் பிறகு  அமீரக நண்பர்கள்.  ஒரு கட்டத்தில் பதிவுலகின் மீது ஏதோ ஒரு வெறுப்பு தோன்றி எழுதாமல் இருந்த பொழுது மீண்டும் என்னை எழுததத் தூண்டிய பதிவர் தேவா அவர்கள் மற்றும் கழுகுத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

அனைவருக்கு நன்றியும், வணக்கங்களும்.

சவுந்தர் நான் யாரையும் தொடரச்சொல்லப் போவதில்லை. இதை உனக்காக மட்டுமே எழுதினேன்.


Thursday, August 05, 2010

புகை எனக்குப் பகை-உங்களுக்கும் தான்

 



அவர்கள் இருவரும் மிக சுவரசியமான முறையில் அந்த பகுதியே அலரும் வகையில் கத்திக்கொண்டிருந்தனர், இல்லையில்லை அவர்களைப்பொறுத்த வரையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.   அவர்கள் இருவருக்கும் நிச்சயம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது இருக்கக்கூடும்.  அவர்களுக்கு என்னைக்கண்டால் பிடிப்பதில்லை.  நான் வந்தால் என்னை முறைப்பதும்,  போகும் வழியினை வேண்டுமென்றே மறைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள்.  நான் இருப்பதும் அவர்கள் இருப்பதும் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில்தான்.


அவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதிற்கு காரணம், எனக்கு பிடிக்காத ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம்.  அவர்கள் கைகளும், வாய்களும் எப்போதும் புகைபோக்கிக்கொண்டிருக்கும்.  அதை ஒரு முறை நான் கண்டிக்க முற்படுகையில், அவர்களுக்கும் எனக்குமான முதல் பேச்சுவார்த்தை சிறு முறைப்புடன் முடிந்தது.  நான் அவர்களிடம் இங்கு வேண்டாம், இந்த இடத்திலிருந்து வெளியே சென்று அதை செய்யலமே என்றேன். ஏனென்றால், மாடிப்படி ஏறும் இடத்தில் குறுக்கலாக நின்று கொண்டு முழுப்பாதையையும் மறித்தோ அல்லது மறைத்தோ போவோர்க்கும் வருவோர்க்கும் இடைஞ்சலாக தானும் கெட்டு, போவோர் வருவோரையும் சேர்த்து தன் புகைபழக்கத்தினால் தொந்தரவு செய்துகொண்டிருந்தனர்.

ஒரு நாள் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் விட்டுச் சென்றுவிட்டிருந்தார்கள்.  நான் அணைத்துவிட்டு நேரக அவர்கள் வீட்டுக்சென்று அதைப்பற்றி கேட்கப்போக அது மீண்டும் பிரச்சனையில் முடிந்தது.  மேலும் அதை தாங்கள் செய்யவில்லை என்று சொல்லிவிட்டனர்.  அதற்குமேல் அங்கு விவாதம் செய்வது வீண் வேலை என்று தோன்றவே அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  அதன் பிறகே நான் மேலே சொல்லிய எதிர்வினைகள் எனக்கு கிடைத்தது.  அன்று முதல் சிகரெட்டை அணைப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டிருந்தார்கள்.  எப்போதும் புகைந்துகொண்டேயிருக்கும்.  நானும் என் கண்ணில் படும் நேரங்களில் அணைத்துக்கொண்டேயிருந்தேன்.

ஒரு வாரம் சென்றிருக்கும்,  அவர்கள் இருவரில் ஒருத்தருடைய குழந்தையை மருந்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல் வந்தது.  குழந்தையின் முகத்தினில் காயம், நன்றாக ஜுரமும் அடித்துக்கொண்டிருந்தது.  மருந்துவமணையில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.  அவர்கள் இருவரும் என்னைப் பார்ப்பதற்குத் தயக்கம் கொண்டு நான் சென்ற நேரம் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தனர்.  அழகான முகத்தின் கண்ணங்களின் ஒரு பக்கத்தில் திருஷ்டிப்பொட்டுப்போல் நல்ல ஆழமான   காயம், நெருப்பினால் சுட்டமாதிரி இருந்தது. அந்த பிஞ்சிற்கு எப்படி வலித்திறுக்கும்.  அதை நினக்கும்போது எனக்கும் வலித்தது. வலியில் குழந்தை சிணுங்கிக்கொண்டிருந்தது.


அதன் பிறகு இரண்டு முறை அவர்கள் வீட்டிற்கு சென்று  குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன்.  குழந்தைக்கு முகத்தினில் இருந்த காயம் ஆரத்தொடங்கியிருந்தது. சிறு குழந்தையாதலால் வளரும் போது இந்தக்காயம் மறைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அதன் தாயார் கூறினார்.  குழந்தைக்குக் காயம்பட்ட அடுத்த நாளிலிருந்து மாடிப்படிகளில் சிகரெட் வாசமும்,  வழியினை மறித்து பேசுவதும்  முற்றிலும் நின்றுவிட்டிருந்தது.   
காரணம் வேறொன்றும் இல்லை,  இவர்கள் அணைக்காமல் விட்டுச்சென்ற சிகரெட் அவர்களுடைய குழந்தையை தண்டித்துவிட்டது.  புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை அறியாத குழந்தை அந்த இடத்தில் கால் தடுமாறி விழ அங்கிருந்த அந்த நச்சுபாம்பு அந்த குழந்தையின் முகத்தை சுட்டுவிட்டது.

அவர்கள் சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக பின்பு அறிந்துகொண்டேன்.  இதை நான் கூறிய அன்றே நிறுத்தியிருந்தார்களானால் இந்த அசம்பாவிதமே நடந்திருக்காது.  நான் அவர்களை விட வயதில் இளையவன்,  இது கூட அவர்கள் என்னைப் புறக்கணிக்க காரணமாக இருந்திருக்கக்கூடும்.  இங்கு தனக்கென்று ஒன்று வரும் போதுதான் நம் மக்கள் அதன் வீரியத்தை உணருகின்றார்கள்.  வரும் முன் காப்போம் என்பதை நினைவு படுத்தினாலும் உணருவதில்லை.  இதை நான் கூறுவதால் நான் நல்லவன் என்று நினைக்கவேண்டாம்.  இந்தப் புகை விசயத்தில் நான் அதற்கு எதிரானவன் என்பதனால்தான் இங்கே இதைப் பகிற்கிறேன்.  இன்றும் என்றும் நடைப்பாதையில் கண்ணில் படும் புகைந்து கொண்டிருக்கும் அந்த புகையிலை அரக்கனை நான் அணைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன்,  என் காலைப் பதம்பார்த்த நாளிலிருந்து.  உங்களுக்கு புகைபழக்கம் இருக்குமானல் அதை விட்டுவிடுங்கள் இல்லையானல் அணைக்க முற்படுங்கள்.

Wednesday, July 28, 2010

கொஞ்சம் கரைக்க முனைகிறேன்

வறண்டு போன பாலைவனம் என்று சொன்னால் அதில் புதுமையேதுமில்லை
வறண்டு போன நதி என்று சொன்னாலும் அதிலும் புதுமையில்லை
வற்றாத கடல் எனக்கொள்கிறேன் என் வறட்சியை,
அது மீண்டும் மீண்டும் பெருகுமே அன்றி வறண்டுபோகதல்லவா
காரணம் ஏதென்று யோசிக்கின்றேன்...

ஒரு முறைமட்டுமே வந்ததால் இது இப்படி என்று ஒருவர் சொன்னார்
நான் முற்றாக மறுக்கவில்லை,
தொலைத்தொடர்பில் ஒரே அலைவரிசையில் பேசியதுண்டா?
தொலைப்பேசியில்லாமல் ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததுண்டா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக யாரிடமாவது சண்டையிட்டிருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
பேருந்தின் முன் இருக்கையில் நீ இருக்கையில்
பின் இருக்கையில் நான் இருக்க பின் வந்து மோதும்
உன் ஸ்பரிசத்தினை உணர்ந்திருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
இதிலும் புதுமையில்லைதான் ஆனால்
எத்தனை முறை ஆம் என்று கொட்டிக்கொண்டாலும்
வெறுமை என்னும் கடல் கூடிக்கொண்டே போகின்றதடி.

இன்றும் உன் அருகாமையை உணர்கிறேன்
ஆம் ஆம் என்று சொல்லும் போதெல்லாம்
முகத்தினில் முறுவல் தோன்றுதடி.
காய்ந்த சறுகுகள் கூட பசுமையாய் தோன்றிய காலமடி.
அந்த பசுமையை எழுத நினைக்கையில் வெறுமையாய்
வார்த்தைகள் விழுகுதடி.
இது முதல் முறையல்ல
இது எத்தனையாவது முறை என்ற
கணக்கும் என்னிடம் இல்லை
இது தொடர்கதையடி....
முடிவு வரும் வரை தொடருமடி....

என்றாவது ஒரு நாள் பதிவுசெய்வேன் பசுமையுடன்
என்ற நம்பிக்கை அற்றுப்போகவில்லையடி
நீ எங்கிருக்கின்றாய் என்று அறியேனடி
ஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று!!!!
என் பசுமை உன்னிடம் உள்ளதடி..
ஏன் என்னிடம் பகைமை கொண்டாயடி..

ஒரு நாள் கண்டேன் உன்னை தூரத்தில்
ஐந்து நிமிடத்தில் உன் அருகினில்
ஆழமாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தேன்...

அன்று அறிந்தோ தெரிந்தோ இல்லை
எனக்காகவோ தெரியவில்லை
எதற்காகவோ மூச்சு வாங்கினேன்
அதில் உன் மூச்சும் கலந்திருந்தது,
சேர்த்து இழுத்துக்கொண்டிருந்தேன்
நீயும் இழுத்துக்கொண்டிருந்தாய்
இருவரும் அறிந்திருக்கவில்லை
ஆனால் மறுக்க முடியாது,
என் உன் என இரண்டும் உள்ளும் வெளியும்
கலந்து கலந்து உடல் முழுதும்
அனைத்து செல்களிலும் பொதிந்து விட்டது
அந்த நொடியில் இருவரின் ஜீவனும் ஜனித்திருந்தது
இருவரின் மூச்சிலே அல்லவா!!
இன்றும் உணர்கிறேன் அந்த சுவாசத்தினை
மூச்சு வாங்கும்போதெல்லாம்.

இங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,
என் வெறுமை வெளிப்படுகிறாத என்று,
நீங்கள் இதை சுய புராணம் என்றாலும்
சுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
இதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்
கரைக்க முற்படுகின்றேன் அவ்வளவே.

Wednesday, July 21, 2010

துபாய் பஸ்ஸில் ஏறிய மானம் (மீள் பதிவு )

(இந்த வலை பதிவ ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை மீண்டும் மீண்டும்  படிக்கப்படுகின்ற பதிவில் அதிகம் முறை படிக்கப்பட்ட என் பதிவு இதுதான் )

இந்தியாவோட மானம் போன கதையும்  அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு.  பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்பப்  பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோன்னு  தோனுது. 

ராத்திரி 8 மணி இருக்கும்.  இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு.  இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான்.  நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு.  டிரைவரு நமக்கு ரொம்ப டியரு.  ஓமான் காரரு.  ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...


ஒரு வழியா டிக்கெட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ மூடிட்டு எதயோ 
தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு அப்போ அவரு கண்ணவுறுத்துற 
மாதிரி  பச்ச கலர்ல ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல. அதே நெரத்துல 
அவரு கை, வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத 
ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன 
போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம, காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு நடந்து வந்தாரு.


யாருக்கும் ஒன்னும் புரியல நான் கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால 
ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு. முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞ்சம் குரல மாத்தி ஹர்டாவும கேட்டுப்பாத்தாரு.  நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பண்ணி செய்ரவங்களாச்சே.  ஒருத்தரும் உண்மைய 
ஒத்துக்கல.  ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட 
கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான்.  நீயா!!! அவருக்கு ஒரெ ஷாக்.....
(மேஜர் சுந்தர்ராஜன்இருந்திருந்தார்னா,  இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு  இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல) 
உடனே எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க. நம்ம ஹீரோவுக்கு 
இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவோட
மானமும் தான் தெரிஞ்சது.

ஹீரோ 5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான்.  இத்தாங்க கத,  ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க.  அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த,  ஹீரோ இந்தியா வந்தப்போ நல்லவங்க யாரோ திருடிட்டாங்கங்குறது வேற கதை.

Monday, July 19, 2010

அரசு அலுவலகத்தில் ராஜ மரியாதை

நண்பர் ஒருவருடைய தொல்லைப்பேசி தொலைந்துவிட்டது.  இது நடந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது.  தொலைப்பேசியின் விலை 20,000 ரூபாயை தொடும்.  முக்கியமான விசயம் விலையில்லை அதில் சேமித்து வைத்து இருக்கக்கூடிய அவரது தொழில் தொடர்பான தொகுப்புகள்.  என்ன செய்வது என்று தெரியாமல் என்னிடம் வந்தார்.  நான் அவரைக் கூப்பிட்டுக்கொண்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காகச் சென்றேன்.

காவல் நிலையத்தில் புகார் பதிவாளர் இல்லாத காரணத்தால் சிறிது நேரம் காத்திருக்கச்சொன்னார்கள்.  எங்கள் பக்கத்தில் இன்னொருவர் அமர்ந்திருந்தார்.  எங்களிடம் என்ன வேலையாக வந்திருக்கின்றீர்கள் என்று விசாரித்து விட்டு,  அவர் வேறொரு ஆலோசை கூறினார்.  அவர் ஆலோசனையின் பேரில்,  பேருந்தில் தொலைந்து போயிருந்த காரணத்தால் நண்பர் இறங்கிய பேருந்து நிலையத்திற்குச் சென்று விசாரித்தோம்.

வெயில் அடித்து காயப்போட்டுக்கொண்டிருந்தது.  பேருந்து நிலையத்தின் அலுவலகத்திற்குச் சென்று நாங்கள் வந்த காரணத்தை விளக்கிவிட்டு   அவரின் பதிலுக்காகக் காத்திருந்தோம்.  எங்களை வெய்டிங் ரூமில் காத்திருக்கச்சொல்லிவிட்டு கணினியில் மும்முராமாக வேலைச் செய்யத் தொடங்கினார்.  எங்கள் இரண்டு பேருக்கும் நம்பிக்கையில்லை கிடைக்கும் என்று,  ஏனென்றால் தொலைந்து இன்றோடு ஒரு வாரக் காலமாகிவிட்டது.  எடுத்தவர் நல்லவராக இருந்திருந்தால் போன் செய்த போதே எடுத்துப்பேசியிருப்பார்.  ஆனால் அது அணைக்கப்பட்டு இருந்தது.

அரை மணி நேரக்காத்திருக்குப் பின் எங்களை அழைத்தனர்.  என்று தொலைந்தது, எங்கு தொலைந்தது, எப்போது தொலைந்தது, அப்பொது எத்தனை மணியிருக்கும், அதன் நிறம், தயாரிப்பாளர் மற்றும் குறியீட்டு எண் என அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டு மீண்டும் எங்களைக் காத்திருக்கச்சொன்னார்.  சிறிது நம்பிக்கை வந்தது.  நம் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதால்.  சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்து நண்பரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு கடிதத்தை காகித உறையில் போட்டு ஒரு விலாசத்தைக்கூறி அங்குப் போகுமாறு கூறினார்.

நாங்கள் அவரிடம் நன்றி கூறி விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்துக் கிளம்பி அவர் கூறிய இடத்திற்குச் சென்றோம்.   அந்த அலுவலகம் முழுவதும் பழைய கனரகவாகனங்கள், குப்பையைப்போன்று குவியலாகக்கிடந்தன.  அவற்றின் மத்தியில் அலுவலகக்கட்டிடம் நல்ல விசாலமான முறையில் கட்டப்பட்டிருந்தது.  உள் நுழையும் போதே குளிந்த காற்று உடலையும் சேர்த்து மனதையும் வருடிச்சென்றது.  வரவேற்பறையில் இருந்த ஒருவர் எங்களிடம் வெயில் அதிகமா இருக்கிறதா என்று கேட்டுவிட்டு எங்களை ஒரு இடத்தைக்காட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார்.  இருவரும் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் .  அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்ட படியால் இதை கவனிக்கவில்லை.


நாங்கள் அவர் காட்டிய அறையில் சென்று அமர்ந்து கொண்டோம்.  அது குளிரூட்டப்பட்ட அரை. அவர் கூறியதற்கும் காரணம் இருக்கின்றது.  எங்கள் சட்டைகள் வியர்வையில் நனைந்து தொப்பல் தொப்பலாக இருந்தது.  பின் ஒருவர் வந்து குடிப்பதற்குத் தண்ணீரும், அதனுடன் பழச்சாரையும் கொடுத்துவிட்டுப்போனார்.  மீண்டும் அதே ரேகைகள்.  இது அரசு அலுவலகம் தானா.  பெருமூச்சும், ஆச்சரியங்களும் மாறி மாறி வந்துபோனது.  மீண்டும் அதே அலுவலர் வந்து அழைத்து என்ன பிரச்சனையென்று கேட்க நாங்கள் அந்தக்கடிதத்தை அவரிடம் கொடுத்தோம்.  படித்து விட்டு மீண்டும் எங்களை காத்திருக்கச்சொன்னார்.  பத்து நிமிட நேர இடைவெளியில் அலைப்பேசி எங்களிடம் வந்து சேர்ந்தது.  ஒரு சிறு கீரல் கூட இல்லாமல் விட்டது விட்ட படியே எங்கள் கைகளில்.  நண்பரின் மன மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.

ஆச்சரியங்கள் அதோடு முடியவில்லை. எங்களிடம் எங்கே போகவேண்டும் என்றார். நாங்கள் இடத்தைச்சொல்லவும் நானும் அங்கே தான் செல்கிறேன். வாருங்கள் என்று அழைத்து வந்து எங்கள் இடத்தில் விட்டுவிட, அவரிடம் நன்றி சொல்லி விடைப்பெற்றோம்.  ஒரே நாளில் அதுவும் வெகு சுலபமாக எங்கள் வேலை முடிந்தது. 


இது நடந்தது அமீரகத்தில்.  அந்த அலுவலர் தனது பணியைத்தான் செய்தார். ஆனால் அதில் மனிதமும், நேயமும் கலந்திருந்தது.  தொலைந்த ஒன்று கிடைத்த மகிழ்ச்சியிருந்தாலும், ஒவ்வொரு அதிர்ச்சியின் போதும் நம் நாட்டின் நினைவுவராமலில்லை.  இது இந்தியாவில் நடந்திருக்குமானால்.   திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு,  அப்படியே நல்லவர்கள் யாராவது அதை இப்படி ஒப்படைத்திருந்தாலும் இத்தனை எளிதில் கிடைத்துவிடுமா.  அங்கே இங்கே என்று சில ஆயிரங்கள் நம்மை விட்டுப் போயிருக்கக்கூடும்.  ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பதற்கோ, இத்தனையும் கொடுத்த பின்பு நமக்கு கிடைக்க வேண்டிய குறைநதபட்ச மரியாதைக்கோ உத்திரவாதம் கிடையாது. மனிதத்திற்கு விலையென்ன என்றிருப்பார்கள்.  

இந்த சம்பவத்தில் எனக்கு பொருள் கிடைத்தது என்பதை விட மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்பதை உணர்ந்துகொண்டேன்.  அது ஒவ்வோரு மனிதனுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றது.   வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது.


மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.

Saturday, July 17, 2010

விடிவெள்ளியுடன் ஒரு சந்திப்பு-நம்ம தேவா அண்ணன்தான்



எதிர்பார்த்து நடப்பதை விட எதிர்ப்பாராமல் நடக்கும் சந்திப்புகள் சுவையானதாக இருக்கக்கூடும்.  அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அண்ணனுக்கு போன் செய்தேன்.  வழக்கமாக உரையாடிவிட்டு வைக்கும் முன், இன்று உங்களை பார்க்க வருகிறேன் என்றேன்.  போன் பேசிய ஐந்து நிமிட வேளையில் மனதில் தோன்றிய ஒன்று.  அலுவலகத்திலிருந்து அரை மணி நேரம் முன்பாகவே கிளம்பிவிட்டேன். தேராவிலிருந்து டேக்ஸி பிடித்து அல் நாதா செல்ல வேண்டும்.  அஞ்சப்பர் முன் நின்று கொண்டு மீண்டும் அழைத்தேன்.  புரிந்தும் புரியாமலும் வழியை கேட்டுக்கொண்டு வேலிதாண்டி சென்றேன். அண்ணன் சொல்லிய பின்புதான் தெரியும் அந்த வேலி துபாயையும்,சார்ஜாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு என்று.

வெயில் 55 டிகிரி அடித்து முடித்த களைப்பில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தது.  அமீரகத்திற்கு வந்த பின் சார்ஜாவுக்குள் செல்வது இது இரண்டாவது முறை.  அரைமணிநேரத்தேடலுக்குப் பின் ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அடுத்த சோதனை காத்திருந்தது அது 45 மாடிக் கட்டிடம், கீழே லிப்டில் ஏறுவதற்கு வரிசை ஒன்று நின்றுகொண்டிருந்தது.  இது வேரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.  இருபது நிமிட காத்திருப்பிற்கு பின் எனக்கும் உள்ளே இடம் கிடைத்தது.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தேன். உள்ளிருந்து ஒரு வெண்கலக் கவர்ந்திலுக்கும் காந்தக்குரல் கேட்டது. நான் அதிர்ந்து போனேன். போனில் நாம் கேட்டது இந்தக்குரல் இல்லையே. நாம் தவறாக வந்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ஒரு உருவம் கதவை திறந்தது, அந்த நொடியில் நான் இரண்டடி என்னையும் அறியாமல் பின்னால் இழுத்துச்செல்லப்பட்டு பின் உள்ளிழுக்கப்பட்டேன். அந்த அனுபவம் ஒரு பரவசநிலையினைக்கொடுத்தது. கை கொடுத்த அடுத்த வினாடியே என் ஆன்மா உள்நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் ஒரே இருள் சூழ்ந்திருந்தது. எனக்குள் இது சூனியமோ என்ற எண்ணம். ஆனால் உள்ளுணர்வு வந்தவுடன் இது அண்ணனின் வீடு என்று உணர்ந்துகொண்டேன். கவனிக்க தெரிந்துகொள்வதும், உணர்ந்துகொள்வதும் வேறு வேறு.


நீண்ட நெடிய பாதை, பக்கவாட்டில் சமையலறை ஒரு பத்தடி இருக்கும் அதை கடந்த பின் முகப்பறை. உட்காருவதற்கு ஏதுவாக இரண்டு பெரிய பஞ்சுப்பொதிகள் நிரம்பிய நாற்காலிகள். அட்சயாவுக்கு அண்ணிக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அண்ணனைப்பார்த்தேன். ஒரு உண்மையை விளங்கிக்கொண்டேன். கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று. அவருடைய போதி மரத்தையும் கண்டேன். இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார் போதி மரத்துடன். அருவியில் கூட தண்ணீர் வரண்டு காய்ந்துவிடும். ஆனால் இங்கு ஆஹா ஆஹ்ஹா அது ஒரு பரவச அனுபவம்.

என்னுடன் பேச ஆரம்பிக்கும் முன் நானும், அண்ணனும் குடித்து முடித்திருந்தோம் கோலாவை.  ஒரு வழியாக என் பக்கம் வந்தார்,  போதிமரத்தை மூடி வைத்துவிட்டு. இனி பேசலாம் என எத்தனித்த போது அண்டைவீட்டிலிருந்து இருவர் எங்களோடு வந்து இணைந்து
கொண்டார்கள்.

என்னவென்று சொல்வேன் கடவுளின் திருவிளையாடலை.
அங்கிருந்து கிளம்பும் வரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.  இங்கு அவர்களை குறைச்சொல்லவில்லை, எல்லாம் எல்லாம் ஆனதால் எல்லாம் எல்லாம் ஆகிப்போனது. அப்படிப்பட்ட நிலையிலும் அண்ணனும் நானும் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.  சில மின்புத்தகங்களை படிக்கக்கொடுத்தார்.  மணி 10.30 ஐ தாண்டிவிட்டது.  இப்பொழுதும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  அனைவரிடம் சொல்லிவிட்டு நான் விடைபெற எத்தனிக்கையில் அண்ணியின்(நன்றிகள்) வற்புறுத்தலில் அங்கேயே சாப்பிட்டுவிட்டு விடைப்பெற்றேன். 

அடிக்கடி போனில் பேசி அறிமுகமாகிவிட்டதால் அறிமுகப்படலமும் தேவைப்படவில்லை. போதிமரம்ங்கிறது அவரோட லாப்டாப். 

சீக்கிரமாக முடிந்துவிட்டாதாக தோன்றும் பெரிதாக எழுத வேண்டிய அளவிற்கு விடயங்கள் இல்லாத போது இவ்வளவுதான் எழுத முடிந்தது. அடுத்த சந்திப்பில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் அப்டேட் செய்கிறேன்.


பின்குறிப்பு:  அட்சயாக்கிட்ட உனக்கு பிடிச்ச நிறம் என்னண்ணு கேட்டேன்.  பிங்க் சொல்லுச்சு. ஏன் கேட்டா கேர்ள்ஸ் எல்லாம் கியூட் அதானால அதோட தொடர்ச்சியா சொல்லுச்சு பாய்ஸ்கு பிளாக்னு ஏன்னுகேட்டதுக்கு அவங்க எல்லாம்...... அப்புடின்னுச்சு. உங்கப்பாக்கூடாவான்னு கேட்டேன்.... அதுக்கு...... முடிஞ்சா அண்ணன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

Friday, July 16, 2010

துபை - விபச்சாரத்தின் அறிமுகம்(மீள் பதிவு)

இந்த பதிவுல துபைக்கு வந்தப்போ ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்லாலாம்னு இருக்கேன்.

துபை தேரா பகுதி நம்ம வசிக்குமிடம். பொதுவா தமிழ் மக்களும், தமிழ் ஆளுங்க கடைகளும், வாரக்கடைசில அனைவரும் கூடும் இடமா இருக்கும்.
வந்த புதுசுல வெளியில போறப்போ அறைல இருந்த அண்ணாச்சி
 பாத்து பத்திறமா போயிட்டுவாப்பான்னாரு.

புதுசுங்கறதால சொல்லுறாரு போல நானும் தலைய ஆட்டிட்டு
கிளம்பிட்டேன். தேரா பஜார் ஏரியால நேறய சந்து சந்தா இருக்கும், 
சந்தோட முடிவுல குட்டையா கட்டையா பங்களாதேஸ் காரைங்க
 நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போறப்பல்லாம்    நம்மல பாத்து ஏதோ ஒன்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க.  நான் அத பெருசா காதுல வாங்கிக்காம கடந்து போய்கிட்டேயிருப்பேன்.  ஒரு நாள் ஒருத்தன் நேரா வந்து கைய கொடுத்தான்.  நானும் கையகொடுத்தேன்.  "லடுக்கிச்சாயே" அப்போதான் அந்த வார்த்தைய முதல் முதல்ல கேட்டேன். ஒன்னும் புரியாம நமக்கு தெரிஞ்ச இந்தில "கியா" ன்னேன்.  "அச்சா லடுக்கிஹே 30 திர்ஹாம்" னான் அப்பவும் விளங்கல,  எதேச்சையா அந்த பக்கம் வந்த அறை அண்ணாச்சி இத பார்த்துட்டு ஓடிவந்து தலைல அடிச்சுக்காத குறயா அறைக்கு கூட்டிட்டுவந்துட்டார்.  வந்ததுக்கு பின்னாடி "இப்புடி இப்புடி அப்புடி அப்புடி னு" பெரிய விரிவுரையே நடத்துனார்.  அன்னைலேர்ந்து சந்துகள பார்த்தாலே பத்தடித் தள்ளி நடக்க ஆரம்பிச்சேன்.

அப்புடியும் சனி நம்மல விடுல இப்போ ஒரு பெண் வடிவுல.  துபைல நான் பார்த்தா வகைல கருப்பின பெண்கள் நல்லா பருமனா பார்க்கவே பயமா இருப்பாங்க. அண்ணாச்சி அவங்கள பத்தியும் விரிவுரை நடத்தியிருந்தால கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன். 

ஒரு நாள் பதினோரு மணியிருக்கு கொஞ்சம் ஆள் அரவம் இல்லாத ஏரியா நடந்து வந்துகிட்டிருந்தேன்.  திடீர்னு பின்னாடி போன கை முன்னாடி வரல என்னாடான்னு பார்த்தா கைய ஒரு பொண்ணு புடிச்சுக்கிட்டிருந்துச்சி. நான் திரும்புனதும் " im sudani" அப்புடின்னுச்சு நானும் பதிலுக்கு விட்டுகொடுக்காம பின்னாடி நடக்க போற வில்லங்கம் தெரியாம ரொம்ப கம்பீரமா "im indian" னேன்.  இப்போ கை கொஞ்சம் இருகுச்சு வலிக்குர மாதிரி இல்ல நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுச்சு. பொண்ணுன்னு சொன்னேன்ல அத பொம்பலன்னு மாத்திக்கோங்க. மறுபடியும் "im sudani" ன்னு சொன்னா. நான் "so what?" னேன்.

"GIVE ME 40 DIRHAM, OTHERWISE I WILL CALL THE POLICE" இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு அம்மணி யாருன்னு.  போலிஸ்னு சொன்னோன்னே பதட்டத்துல வியற்க ஆரம்பிச்சுடுச்சு.  போய்தொலாயுது காச எடுத்து கொடுத்துட்டேன்.  "shall we go? " ன்னு கேட்டா. அடங்கொய்யால கைய ஒதரிட்டு நடக்க ஆரம்பிச்சுடேன்.  ஒரு விசியத்துல அவள பாராட்டாம இருக்க முடியல கொடுத்தா அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.

Thursday, July 15, 2010

கரிய முகம்

விழுந்த இடத்தில் கல்லாய்
விரிசல் விழுந்த மனமாய்
பறந்து விழுந்த பறவையாய்
சரிந்து போன வாழ்க்கையாய்
நீண்டு கொண்டே போனதடி
நீ இல்லாத இந்த வாழ்க்கை
தொலைத்துவிடவே முயன்றேன்
உன் நினைவுகளை
தொடவே முடியாத தூரத்தில்
தொடர்பே அற்ற இத்தருணத்தில்
மீண்டும் மீண்டும் துரத்துதடி
உன் கரிய முகம்.

கோணல் என்பார்கள்
பின்னால் பேசிச்சிரிப்பார்கள்
முன்னால் போகும் எனக்கோ
முடிவுரை எழுதத்தோன்றும்.

கையை பிடித்து இழுத்து வருவாய்
பின் கண்ணீரால் என் கையை நனைத்து விடுவாய்.
கருமை நிறக் கடவுளுக்கே அழகுமுகத்தின் தேவை இங்கே
கத்திப்பேசி சண்டையிடுவேன்
நீ என் அழகியென்று.

சிரித்து சிரித்துப் பேசும்பொழுது
சிதறி விழும் புன்னகையை
சிந்தவிடாமல் அள்ளிப் பருகிக்கொள்வேன்.
அறிமுகம் செய்ய அழைத்துப்போக
பேரைச்சொல்லும் முன்னே
கோணலாய் போனதடி அகமுகம்.

முகம் காட்ட மறுத்த முகத்தை
முறைத்துவிட்டு வெளியேறினேன்.
அறியேனடி விட்டுப்பிரிவாய் என்று
தேடித்திரிந்தேனடி இலக்கறியாமல்.

தேடிக்களைத்த ஒரு பொழுதில்
சேதி வந்ததடி நீ வந்துவிட்டாய் என்று
ஓடிவந்தேனடி உறைந்து நின்றேனடி
கரியமுகம் காணவில்லையடி.
பின்னே யாரோ பேசும் ஓசைக்கேட்டது
உன் முகத்தை இரயில் தண்டவாளம் எடுத்துக்கொண்டது என்று.

Tuesday, July 13, 2010

விலாசம் இல்லா இத்தருணத்தில்

நான் நீ என்று 
என்றுமே அழைத்ததில்லை
நாம் என்ற எழுத்தே நம் முதல் அழைப்பானது
சிரித்து மகிழும் குழந்தையின்
குதூகலத்தை நாம் அருகில் இருந்த
இருக்கப்போகும் தருணங்களை
நீண்டுவிட்ட இந்த இடைவெளியில்
உன் பெயரைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறேன்.

தூரப்பயணங்கள் அரிதான இக்காலத்தில்
நினைவுகள் உன்னை நோக்கியிழுத்து
உன் ஊர் நோக்கி நடக்கையில்
விலாசம் இல்லா இத்தருணத்தில்
நீ வரைந்து கொடுத்த ஒன்றை வைத்துக்கொண்டு
கடந்துபோகும் புன்னகைகளை புறம்தள்ளி
தேட முற்படுகிறேன்.

ஓர் நாள்
பெருங்கூட்டமொன்றில் ஒற்றைப்புள்ளியாய்
மிகுந்துவிட்ட எறும்புக்கூட்டமொன்றில்
கூடுதெரியாமல் தவித்த என்னை
நீ கூவிக்கூவி அழைத்ததை
என்னிடம் பகிர்கையில்
கூட்டம் என்பதை மறந்து
உமிழ்நீரை உன் கண்ணங்களில்
கலங்கிய உன் கண்ணீரோடு
கரைத்து வழியவிட்டேன்.

அந்த உமிழின் சுவையை
வழியும் என் வியர்வையில்
கசியும் என் கண்ணீரில்
வறண்ட என் உதடுகளில்
துலாவும் என் நாக்கின் உதவியுடன்
இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.
 .               

தொடர்பில்லாதவை






















ஒரு கணம் போதும் என்பேன்
உருப்பெரும் ஒவ்வொன்றும்
அதனதன் அகப்புறப்பொருளுடன்
தொடரும் இல்லை முடிவுரும்
முடிவினையெடுக்க.

இப்படித்தான் இருக்குமா
இல்லை இப்படித்தான் வலிக்குமா
வலிந்து பிரிப்பதில்லை
இது விடுதலையுமில்லை.

நிலைவாசலும் அதன் பின்னோ
அல்லது முன்னோ வரும்
முன்வாசலும் பின்வாசலும்,
இதில் முன்பின் என்று
யார் பிரித்தது ஏன் வந்தது
மறந்து இடித்துக்கொள்ளும்
கூரைவீட்டு நிலைக்கும்
இது பொதுதானே.

இடித்துக்கொள்வது
அதன் பின் வலிப்பது
ஒன்றன் பின் ஒன்றாய்
வரிசைக்கட்டி வரும்
குசலங்களும் வருத்தங்களும்
இதுவும் பொதுதானே.

இங்கு
விடுதலையுமில்லை
விட்டுப்பிரிவதுமில்லை
தொடுவதுமில்லை
தொடர்வதுமில்லை
நீயே தொலைந்துபோ.

Monday, July 12, 2010

ஒரு மேட்டரும் சில நினைவுகளும்

ஒரே ஒரு கண்டீசன் கடைசி வரைக்கும் படிங்க.

இந்த சங்காத்தமே வேண்டாம்னுதான நா உன்னைய விட்டு விலகி இருக்குறேன்.  ஏன் திரும்ப திரும்ப வந்து தொல்லை பண்ணுற.  ஒழுங்கு மரியாதையா இத இத்தோட நிறுத்திடு.  நான் பாட்டுக்கும் என் வழியப்பாத்துக்கிட்டு போயிடுறேன்.

வராத ஏய் வராத.... வராத வராத வராத எத்தனை தடவ சொல்லிட்டேன் வராதன்னு.  இப்போ உனக்கு என்ன வேணும்குற. மேட்டர சொல்லு.
என்னது மேட்டரே இல்லயா.  அப்ப ஏன் திருமபத்திருப்ப  வந்துகிட்ட இருக்க.
ஆ.... மேட்டரு இருக்கா.  ஆனா அது ஒரு பெரிய மேட்டரு இல்லயா.
இப்போ என்னத்த சொல்ல வார.

யாரப்பாத்து இந்தக்கேள்வியக்கேட்ட  அதுவும் யாரப்பத்திக்கேட்ட.  இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னா என்னையப்பத்தி என்னா நினைப்பாரு.  இத வேற யாருக்கிட்டயும் கேட்டுறாது.  அப்புடியே ஓடிப்போய்டு.  திரும்ப இந்தப் பக்கம் வந்துராத.  அப்புறம் நானே....

நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கேன்.  நாளைக்கு பேசலாமே,  இன்னைக்கே பேசனுமா.  இல்லப்பா இன்னைக்கு முடியாது நாளைக்கு அங்க வந்துடுறியா, சொல்லுறதக்கேளு நாளைக்கு பாப்போம்.  முடியாதா.  அப்ப நானும் உன்னையா பாக்கமுடியாது.

நான் எவ்வளோ முக்கியாமான வேலைன்னு சொல்லுறேன்.  சும்மா கேக்காம நீ சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க.  இப்போ என்ன அவசரம் அதுக்கு.  போ போய் வேற வேலையப்பாரு.

இதுக்கு இவ்வளவு, அதுக்கு அவ்வளவு, அந்ததுக்கு ஏன் எதுவுமே இல்ல.  நல்லாத்தானய்யா இருக்கு.  போ போய் அதுக்கும் கொஞ்சம் போட்டுட்டு வா.  நீ போகமாட்டியா.  சரி கொடு நானே போறேன்.

நல்லவேலை தப்புச்சேண்டா சாமி,  கொலைகாரப்பயலுக நம்மளையே கவுக்கப் பாக்குறாய்ங்க.  இந்தப் பாழாப்போன செருப்பு வேற பிச்சுக்கிட்டு நம்மள காலிப் பண்ணப் பாத்துச்சு.  இப்போ எங்கப் போறது.  ஒருத்தனையும் காணோம். ஹலோ யாருங்க,  கொஞ்சம் நில்லுங்க.  அங்க வரைக்கும் போகனும் ஒரு லிப்ட் கிடைக்குமா.

எதுவுமே தோனலன்னா இப்புடி எதயாச்சும் கிறுக்கிக்கிட்டே இருப்பேன்.  சில சமயம் விசயம் புடிபடும் சில சமயம் அப்புடியே மூடி வச்சு படுத்துடுவேன்.  அப்படி செய்யுறப்ப தானா வந்து விழுந்ததுதான் கீழ இருக்கக்கூடிய இந்த வரிகள்.. 


ஆக மொத்தம் அறுபது வீடு
அத்தனையும் அத்துப்படி
அனுமதியும் தேவையில்ல
அதகேக்குறதும் யாருமில்ல.

அங்க ஓடி இங்க ஓடி
தவிச்சா தண்ணிக்கிடைக்கும்
தவறவிட்டா கொண்டுவிடும்
நாளு கிழமையின்னா
ராத்திரி கண்ணு முழிச்சு
விதவிதமா வண்ணமிட்டு
அழகான கோலமிட்டு
நா முந்தி நீ முந்தின்னு
ருசிருசியா வந்துச்சேரும்.

முட்ட திண்ணுபுட்டு
கட்டம் வட்டம்போட்டு
விதவிதமா ஆடிப்பாடி
ஆறுமணியான பின்ன
எட்டுமணிக்கு முன்ன
அத்தனையும் முடிச்சுப்புட்டு
மீண்டும்
கட்டம் வட்டம் போட
சிட்டா பறந்து விடும்.

அரவம் அடங்கிய பின்ன
சீமையில வந்த ஒன்னு
நடுத்தெருவுல வந்து நின்னு
ஆட்டம்பாட்டம் காட்டி
எல்லாம் போக முன்ன
அடங்கிப்போகும் பின்ன.

எல்லாம் மாறிப்போச்சு
ஆகமொத்தம் எத்தனையின்னு
யாரும் அறியயில்ல
ஆடி ஓடியாட
கட்டம் வட்டம் போட
மண்ணும் ஏதுமில்ல.

தவிச்ச தண்ணித்தர
போனா கொண்டுவிட
நினைச்சா உள்ள போக
அனுமதியுமில்ல இங்க.

அரவம் அடங்குறதில்ல
நடுத்தெருவுக்கும் வாரதில்ல
எல்லாம் வீட்டுகுள்ள
இப்போ டீவிமுன்ன...............................................................!!!!!!

Saturday, July 10, 2010

காதல் என்னும் படிநிலை

மறக்க வேண்டிய ஒரு சில விசயங்களை நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மறக்கமுடியாது.  அவை சோகமான, இன்று நினைத்தாலும் மனதை வறுந்தச் செய்யும் சம்பவங்களாகவோ அல்லது மகிழ்ச்சியான மனதை வருடும் ஒன்றாகவோ இருக்கக்கூடும். அது நட்போ,காதலோ, இரண்டின் பிரிவோ ஏதாவது ஒன்றாக இருக்கக்கூடும்.  இந்த இரண்டு வார்த்தைக்கு பின்னும் எத்தனையோ கணக்கிட முடியாத அற்புதமான கதைகளும் இருக்கக்கூடும்.  அவை மகிழ்வையும், சோகத்தையும் இரு சேர கலந்த நம் வாழ்வின் எச்சமாக நம்மோடு ஒட்டிக்கொண்டு,  வாழ்நாள் முழுவதும்  நம்மோடு பயனித்துக்கொண்டிருக்கக்கூடும்.

இது எங்கு துவங்கி எங்கு முடியும் என்று தெரியாது.  எழுதத்துவங்கும் எனக்குத் தெரியாது என்று துவங்கியது எங்கு முடியப்போகின்றது என்று.  காதல் என்ற உணர்வுக்கு யாரும் விதிவிலக்கில்லை.  காதலுக்கும் பருவம் உண்டு காலமும் உண்டு.  ஒரு மனிதனின் வாழ்க்கை படிநிலைபோல் ஒவ்வொரு படிநிலையிலும் அவனோடு ஒட்டிக்கொண்டு பயனிக்கும்.  அதுவே அவன் வாழ்க்கை படிநிலையை முடிவுசெய்கிறது.  அதை எவரும் புறம் தள்ளமுடியாது.  காதல் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கி மீண்டும் அதே ஒற்றைப்புள்ளியில் நாம் வந்து சேரும் போது நாம் என்பது இல்லாது போயிருக்கும்.

ஆதார  சுருதியான, ஆதியான ஓர் உணர்வு.  அதை கதைசொல்லியாக சொல்ல முறச்சி செய்கின்றேன்.  எழுத்தில் எந்தக்காதலை சொல்வது.  எந்தக்காதலை சொல்லாமல் செல்வது.  காதல் என்பது அனைத்திலும் நிறைந்திருக்கக்கூடிய அபாயம் இங்கிருப்பதால்,  அனைத்தையும் சொல்லத்தோன்றியது, நானும் ஆதியிலிருந்து எழுத்த தொடங்கினேன்.  எழுதி முடித்துவிட்டு படிக்கவில்லை எழுதும்போதே நிறுத்திவிட்டேன்.  அதில் எதனை எடுப்பது எதனை சேர்ப்பது.   என் காதலை முழுமையாக என்னால் ஏன் எழுதமுடியவில்லை. அசிங்கம் என்பது ஏதுமில்லை. நான் தூக்கிச் சுமந்த என் காதலின் முன்னே என் முகத்திரை அல்ல மனத்திறை கிழியும் ஓசைக்கேட்டது.  என் காதல் படிநிலைகள் என்னை அடித்து கீழை தள்ளி என் முகத்தில் காரி உமிழ்ந்தன.


 எத்தனை பக்கங்கள் எழுதியிருப்பேன் என்பது எனக்குத்தெரியவில்லை.  என் காதல்களைப் பொருத்து என் கையெழுத்துக்களும் படிநிலைகளுடன் இருந்தன.  கையெழுத்துகளும் காதல் கொண்டது.  இங்கு பிடித்ததும், பிடிக்காததும் அனைத்திற்கு பொதுவான ஒன்றே.  இங்கு என் காதல் என்பது  அனைத்து திணைகளையும் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.  என் மீது காரி உமிழும் என் காதலை அப்படியே ஏற்றுக்கொண்டு வெளிக்கொணர முடியவில்லை.  அவ்வாறு செய்யும் படசத்தில் இந்த உலகம் என்னை தூற்றத்தொடங்கிவிடும்,  அதுவும் அதன் பங்கிற்கு காரத்துடங்கும் , அதன் காதலை மறைத்துக்கொண்டு.  இங்கு காதல் பொதுவான ஒன்று.  என் மீது துப்பப்படும்,தூற்றப்படும் அனைத்தும் தங்கள் மீது காரி
உமிழ்வதற்கு ஒப்பானதாக இருக்கக்கூடும்.  

 இரண்டு படிநிலைகள் ம்னித உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது.  ஒன்று குடும்பம் என்ற உறவுகள், அதன் பின் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான என்ற இரண்டு நிலைகள்.


மீண்டும் எழுதத்தொடங்கினேன்.  இந்தக்காதல் சுவையாக இருந்தது.  கேலிகளும் கிண்டல்களும்,  கவலையில்லா முகங்களும் அனைத்தும் இதுவரையில்லாத மகிழ்வுடன் கூடிய மறுமலர்ச்சியினை கொண்டிருந்தது.
இது எங்கு எப்போது மலர்ந்தது என்று எனக்குத்தெரியாது.  முகமும்,உடலும் மற்றும் மனம் எங்கும் ஒரு பரவசநிலை பரவியது.  இந்தக்காதல் அவளுக்கும், அவனுக்குமானது.  இந்தப்பரவச நிலை இருவருக்கும் பொதுவானது.  காலையில் தொடங்கி மாலையில் முடியும் பருவகால நிலையில்லாதது.  ஒரு தாம்பத்தியத்தின் அடிநிலையின் முதல் படிநிலையினை நாம் உணர்ந்துகொள்ள உதவக்கூடியது. குறிக்க இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்.  தூங்க மறந்த இரவுகள் அதிகம்,  இமைகள் மூடினாலும் அவள் முகமோ,  அவன் முகமோ கரிய இருட்டுக்குள் வெளிச்சம் போட்டுக்காட்டிக்கொண்டிருக்கும்.   இது முதல்படிநிலையானதால் புரிந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களும்,  அதை வளர்க்க வேண்டா சந்தர்ப்பங்களும் அதிகமிருக்கக்கூடும்.  விட்டுப்பிரிவதும் மறக்கவோ மறைக்கவோ முயல்வதும் இயலாது போகக்கூடும். இதனை விட்டுப்பிரிவது அத்தனை சுலபமில்லை.  ஒற்றைப்புள்ளியில் தொடங்கி மற்றொரு ஒற்றைப்புள்ளியில் முடியும் ஒரு நாளில் இது மறையக்கூடும்.

 எத்தனையோ படிநிலைகளை கடந்துவிட்ட இந்த வாழ்க்கையில்  இந்த ஒரு படிநிலையினை ஆழமாக இல்லாமல் மேலோட்டமாகவே என்னால் எழுதமுடிந்தது.  மற்றவைகளை பற்றி ஒரு சிறிய குறிப்பினைக்கூட இங்கு எழுதமுடியவில்லை.  அவை மறைக்கப்பட்ட பக்கங்களாக மனதின் ஆழ்கிணற்றில் எங்கோ ஓர் மூளையில் ஒளிந்திருக்கக்கூடும்.  கடக்க வேண்டிய காதல் படிநிலைகளை கடக்கும் போது அவை ஒரு நாள் வெளிப்படக்கூடும்.  இதை இப்போது எழுதவிடாமல் தடுத்ததும்,  ஒரு நாள் எழுதச் சொல்லப்போவதும் இதே காதல்தான்.


அதுவரை எங்கோ தொடங்கி எங்கோ முடியும் அறியாத்தெரியா ஒன்றைப்போல் இந்தப் பயணம் தொடரும்.

                                                           

Monday, July 05, 2010

கிறுக்கல்கள்

ஆழக்குழி தோண்டி
மண்ணிலே தாழி செய்து
அடங்கிவிட்ட பிண்டத்தினை
அடைத்துவிட்டு நகர்ந்த பின்னே
அரித்து போகும் பூவுடலும்
முடிவிலா ஆசைகளும்
அதனுடனே முடிந்து போனதோ.
விட்டுப் பிரிந்த
சொந்தங்களும் கேள்வி ஏதும் கேட்பதில்லை.
மறைந்துபோன
மனிதர்களும் வந்து ஏதும் சொல்வதில்லை.

மெய் என்பது உண்டென்றால்
விட்டுப்பிரிவதும் அதுவென்றால்
விடைக்காணா கேள்விகளும்
கடைக்கோடி நட்சத்திரங்களும்
உறைவிடம் தேடி அலைகின்றதோ!

(எதுக்கு எழுதினேன்னு எனக்கே தெரியல)

நிசப்தம்

ஆராவாரங்கள் அற்றுபோனது.
கதவுகளின் உராய்வுகளில்
நிறைந்திருக்கும் ஓசைகளும்
அங்கும் இங்கும்
எங்கும் ஓடித்திரியும்
மழலைகளின் காலடிச்சத்தங்களும்
சுவர்களில் பட்டுத்தெறிக்கும்
கள்ளமில்லா கொஞ்சல்களும்
அடிக்கடி நிகழும்
மனதில் பதியா சண்டைகளும்
பின்வரும் பஞ்சாயத்துகளும்
கலைந்துகிடக்கும் கோலங்களாய்
நிறைந்துகிடக்கும் நினைவூட்டும்
இருத்தல்களும்
காணக்கிடைக்கவில்லை.

Wednesday, June 30, 2010

யாருங்க போராடுறது

ஒன்ன மறக்கனும்னா அங்கிருந்து நகர்ந்துடுன்னு சொல்வாங்க.  நம்ம தலைவர்கள் அதனை செம்மையாக செய்யுறாங்க.  கறைய கழுவுவதற்கோ இல்ல மறைக்குதற்கோ ஒரு மாநாட்ட கோடில கொட்டி  நடத்தி முடிச்சாச்சுங்க.   தப்ப தப்புன்னு சொல்ல வேண்டிய எதிர்கட்சிகளோ தெருக்கட்சிகள் போல ஆகிப்போச்சுங்க.

இப்போ அடுத்ததாக ஒரு குண்டு(பெட்ரோல்,கேஸ் விலை உயர்வுதாங்க) நம்ம அட்டாக் பாண்டிக்கிட்டயிருந்து  வந்திருக்குங்க. அதாங்க நம்ம வச்ச நமக்கான நம்ம மத்திய அரசு. இந்தியா முழுசுக்கும் யாருக்கும் வஞ்சனையேயில்லாம எல்லாத்துக்கு மேலயும் போட்டுடுச்சுங்க.  இதுல ஒரு கோஷ்டிக்கு ஒரு பிரச்சனயும் இல்லங்க. யாரு எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு ஒரு .......இல்லங்க.  மிச்சமிருக்குறது இரண்டு கோஷ்டிங்க.  ஒருத்தருக்கு தானே கெட்டாலும் ஏன் கேக்குறதுக்கு தெம்பே இல்லங்க.  இன்னொருத்தர்,  இவங்க ரொம்ப பேருங்க. எண்ணுனா கோடில இருப்பாங்க.  எதையும் சீக்கிறமா ஜீரணம் செய்ற சக்தி இவங்கக்கிட்ட ரொம்ப அதிகமா இருக்குறதால இந்த விசயத்த மறந்து மன்னிச்சு டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்ணீர் விடுற புரட்சிநாயகியப்பார்த்து தானும் கண்ணீர் விட்டு நாளைக்கு என்னாகுமோங்குற  பயத்துல காத்துக்கிட்டு இருப்பாங்க.


இப்போ இந்த அணுகுண்டை எதிர்த்து தொடர்ந்து போரடப்போறவங்க யாருங்க? அவங்க எங்கயிருக்காங்க?  எங்கிருந்து வரப்போறாங்க?
அப்புடியே போரடுனாலும் விட கிடைக்குமா? இல்ல விடிவு தான் கிடைக்குமா?

இந்த கேள்வி என் மண்டையப்போட்டு குடையுதுங்க.  கம்பியூட்டரு முன்னாடி உட்கார்ந்துகிட்டு நல்லா கேள்வி மட்டும் கேட்கத்தெரியுதுள்ள,
நீ இறங்கி போறடுன்னு மனசு சொல்லுதுங்க.

ஆனா பாருங்க இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு வரலாற்றுக்கதைய சொல்லவேண்டியிருக்கு.  அது என்னனா சுதந்துரத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல ஒருத்தரு கொடிய புடிச்சிக்கிட்டு வீட்லேர்ந்து கிளம்பி தெருமுனைக்கு போனவரு, கால்ல கல்லு குத்துதனால அப்புடியே திரும்பிட்டாருங்க. மறுபடியும் ஒரு முறை இதே மாதிரி கிளம்புனாருங்க.  அன்னைக்கும் திரும்பி வந்துட்டாருங்க.  ஏன்னூ கேக்குறீங்களா? அன்னைக்கு ஆகஸ்ட் 16 ,1947.

இப்புடிதாங்க அனனைகிருந்தே இந்த நாட்டைக்காப்பற்ற புறப்பட்டு இன்னைவரைக்கும் காப்பத்திக்கிட்டே இருக்கோம்.  என் உயிரு தமிழுக்கு,  உடலு இந்த மண்ணுக்குங்க.  இப்போ பிரச்சனை என்னன்னா ' எனக்கு ரொம்பா முக்கியமான வேற வேலையிருக்குங்க, போரட்டத்துக்கு என்னோட முழு ஆதரவு உண்டுங்க.  என் வேலை முடிஞ்சதும் நிச்சயமா உங்க போராட்டத்துல கலந்துக்குவேங்க.'

சரிங்க, இப்போ யாருங்க போராட்டத்த ஆரம்பிக்கப்போறீங்க.  பந்தல் போடுறது,
டீ, காபி,டிபன் இப்புடி போராட்டத்துக்கு தேவையான அனைத்துவகையான தேவைகளுக்கும் குறைந்த செலவுல அனைத்தையும் நாங்க செஞ்சுகொடுப்போங்க. எனக்கு நீங்க எப்போவேனா கால் பண்ணலாங்க. 
24 ஹவர் சரிவீஸ்ங்க.

Tuesday, June 29, 2010

போர்

இருள் சூழ்ந்துவிட்டது
ஆனால்
இது இரவும் அல்ல
மழைப்பெய்வதற்காகவும் அல்ல
வெப்பமும் குறைவதில்லை
வெக்கையும் குறைவதில்லை
உக்கிரத்தின் உச்சதினை
எட்டி
அடங்கிவிட்டது.
பின்னும்
எட்டி எட்டி உதைக்கின்றது
ஓட ஓட விரட்டுகின்றது
எத்திசை நோக்கிலும்
எங்கும் காணவில்லை
ஏதுமற்ற வெளியே தெரிகின்றது.
அடைந்தது யாதென்று
இந்த ஆறறிவிற்கு புரியவில்லை
விடியல் வரும் நாளும் தெரியவில்லை.

Saturday, June 26, 2010

கண்ணீர்

அசைந்து கொண்டிருக்கும்
அனைத்திலிருந்தும்
அறிந்து கொள்ளலாம்
அதனதன் இருப்பை.
செயலற்றுகிடக்கும்
அற்றுப்போன ஆதரங்களை
ஆழத்தோண்டி புதைத்துவிட்டு
கசியும் கரிக்கும் நீர் துளிகளை
செயற்கையாய்
துடைக்கும் அந்த கைகளுக்கு
என்று தெரியுமோ
அது கண்ணீர் என்று.

வார்த்தைகளற்ற ஒரு தருணத்தில்

முன் பின் என
கலைத்து கலைந்துவிட்ட
முற்றுபெறாத ஓவியம் ஒன்றில்
வெடித்துச்சிதறும் வண்ணங்களில்
வழிந்துகொண்டிருக்கும் விருப்பங்களை
அடுக்கடுக்காய்
மேல் கீழாய்
எதிர்மறையாய்
அள்ளித்தெளித்து
கதிர்களைப்போல்
எங்கும் நிறைந்திருக்கும்
வண்ணங்களற்ற வெளியினில்
                                                                                        வெளிப்படவே
                                                                                        விடுபடுவேன் சிறகுகளுடன்.





படங்கள் http://ergunkaraman.com/  என்ற தளத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday, June 23, 2010

மகிழ்ச்சி

எங்கோ ஓர் மூலையில்
முடிந்துவிட்டதாக மூடிவைக்கப்பட்டதாக
உறைந்துவிட்டதாக என எண்ணிக்கொண்ட
பிழையில்லா முகமறியாப் பிரியங்களை
வந்து சேர்ந்த புன்னகையில்
கரைத்துவிட்டு கரையேறினேன்.
ஆறறிவின் மிகுந்துவிட்ட எச்சங்களை
புறம்தள்ளி குருதியில்லாக் கொலை செய்து
புறத்தில் வழிந்தோடிய
முடிவில்லா முடிவிலிகளை
அள்ளிக்குடித்துவிட்டு நிமிர்ந்த வேலையில்
வந்தனைத்த ஆறறிவின் புன்னகையில்
முடிவிலிகள் மிகுந்துபோனது.

Tuesday, June 22, 2010

வெறுமை

எஞ்சியிருக்கும் எச்சத்தையும்
என்னுள் நிறைந்திருக்கும்
வெறுமை எடுத்துக்கொண்டது.
நினைவிலிருக்கும் நினைவுகளும்
ஏற்குமிடமில்லாமல் புறம் தள்ளிவிட்டது மனது.
என் மனக்குரங்கும்
முன்பு போல் எங்கும் தாவுவதில்லை
தவறிவிட்ட பக்கங்களும்
தவிர்த்து விடப்பட்ட பக்கங்களும்
என்னை பின்னோக்கி இழுக்கின்றன.
உள் வர மறுக்கும் புறம் தள்ளிவிட்ட நினைவுகளை
மீள் செய்ய முனைகிறேன்
மீண்டும் மீண்டும் வெறுமையே ஆட்கொள்கின்றது
மீண்டும் மீண்டும் முனைகிறேன்
மீண்டும் மீண்டும் மீள்கிறேன்
முனைவும் மீள்வும் முடிவில்லாமல் தொடர்கின்றது
வெறுமையை புறந்தள்ளாமல்.

Tuesday, April 27, 2010

இந்திய சிற்பிகள்

ஒரு சமயம் பீகாரில் உள்ள மக்களிடம் இந்தியாவின் குடியரசுத்தலைவர் யார் என்று கேட்ட பொழுது லாலு பிரசாத் யாதவ் என்றும்,  பிரதமர் அமிதாப் பச்சன் என்றும் சொன்னதாக படித்தேன்.


நேற்று மதியம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டு வரும் போது வீ தொலை அலைவரிசையில் எதேச்சையாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.  அதில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் மற்றும் பதில்கள் கீழே,

இந்தியாவின் தேசிய விலங்கு எது?

முதாலமவர் : காக்கா

இரண்டாமவர் :  யானை

மூன்றாமவர் :  சிங்கம்

நாங்காமவர் : ????????

இந்தியாவின் தேசிய பறவை எது?

முதாலமவர் : கிளி

இரண்டாமவர் : காக்கா

மூன்றாமவர் : கழுகு

நாங்காமவர் : ??????

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

முதாலமவர் :  கிரிக்கெட் இல்ல கபடி

இரண்டாமவர் : கிரிக்கெட்

மூன்றாமவர் : கிரிக்கெட்

நாங்காமவர் : கிரிக்கெட்

5ஆமவர்:  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்   கிரிக்கெட் இல்ல ஹாக்கி.


இந்தியாவின் தேசிய மொழி எது?

முதாலமவர் : ஹிந்தி

இரண்டாமவர் : ஹிந்தி

மூன்றாமவர் : ஹிந்தி

நாங்காமவர் : ஹிந்தி



நாள் முழுவதும் களியாட்டங்களை ஒளிபரப்பும் ஒரு தொலைக்காட்சியில் நாளைய இந்தியாவின் சிற்பிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள். 

அதில் ஒருவருக்கு விலங்குக்கும்,  பறவைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.  கேள்விகேட்கப்பட்டவர்கள் அனைவரும் சற்று மேல்தர வர்க்கம் என்று அனுமானிக்க அவர்கள் உடைகளும்,  உரையாடல்களும் உதவின.  வயது 20-22 குள் இருக்கும்.  தன் தேசத்தினைப்பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட அவர்களுக்கு இல்லை.  தனக்கு தெரியாததை பெறுமையாக கருதுகிறார்கள். 

நல்லவேளை தேசியக்கொடியின் வண்ணங்களைப்பற்றி கேட்கவில்லை.

Sunday, April 04, 2010

பையா விமர்சனம்






பிளிஸ் Bhaiya, "பஜாவ் பஜாவ்".

நான் இப்புடி சொல்லுறதுக்கு காரணம்

இன்னைக்கிருந்து அறிவுத்தேடுறவரையும், கண்ணாயிருப்பவரையும் அப்புறம் இன்னும் சில பேர படிக்குறதில்லங்குற முடிவுக்கு வந்துட்டேன்.  இவுகளயெல்லாம் படிச்சதனால என்னோட ரசிப்புத்திறனே குறைஞ்சு போச்சு.  இனிமேல நோமோர் உலக சினிமா ஒன் அண்ட் ஒன்லி அக்மார்க் தமிழ்சினிமா மட்டும் பார்க்குறதா முடிவுபண்ணிட்டேன்.

Wednesday, March 31, 2010

அங்காடியும் நானும் - 2

இரவு மணி ஒன்பது கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய

அதிர்ச்சியாக இருந்தது. நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்

சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு

எப்படியிருக்குமென்று.



நேரம் ஆக ஆக கடைக்கு வரும் மக்களின் நிறம் மாறத்தொடங்கியது.  துணிகளின் விலையும் மாறத் தொடங்கியது.  பெரும்பாலனவர்கள் இளைஞர்கள், நாள் முழுவதும் உடல் வருந்த உழைக்கும் மக்கள்.   இதை யாரும் சொல்லாமலே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.எத்தனையோ சினிமாக்களில் 
நாயகன் நாளைய பண்டிகைக்கு அதற்கு முந்தைய நாள் இரவில் தனக்கு கிடைத்த பணத்தில் குழந்தைக்கும், மனைவிக்கும் துணி வாங்கிவிட்டு 
தனக்கென்று ஒன்றும் வாங்காமல் செல்வது போன்ற காட்சிகள் வரும்.  அந்த நிஜத்தினை நேரில் கண்டேன்.  .  காலையிலிருந்து நின்று கொண்டிருப்பதால்
கால்கள் வலிக்கத்தொடங்கியது. வலியினை உணரும் போதெல்லாம்  என் தந்தையின் நினைவும் வந்து சென்றது.  
 பல வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் தந்தைக்கும்,  மற்றவர்களுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்.


மணி இரவு பதினொன்று.  காலகளில் வீக்கம் தெரிந்தது.  முதுகிலும் வலியினை உணர்ந்தேன். என் முன்னே துணிகள் குவிந்து கிடந்தன. கூட்டம் அதிகமானதால்  வருபவர்களை முழுமையாக 
கவனிக்கமுடியவில்லை. சிலர் பொறுமை காத்தனர்,  சிலர் பொறுமை இழந்து தன்னைக் கவனிக்கச் சொல்லிக்கொண்டிருந்தனர்,சிலர் வெளியே சென்றனர்.  எனக்கும் இந்த அனுவம் இருந்திருக்கின்றது.  அது இயல்பு தான் எனினும்,  அங்கே நிற்கும் பொழுதுதான் அது புரிந்தது.


அவருக்கு நாற்பது வயதிருக்கக்கூடும்.
 கிளிசல்களுடன்அழுக்கேரிய சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார்.
கூட்டத்துடன் நின்றிருந்தாலும்அவரை கவனத்திலேயே வைத்திருந்தேன்.
 பேண்ட்களை எடுப்பதும், விலையினைப்பார்ப்பதும் மீண்டும் வைப்பதும் அதே போன்று சட்டைகளை எடுப்பதும் வைப்பதும்.  அவரை அழைத்தேன்,  என்ன வேண்டும்என்று கேட்டபடியே  உள்ளதிலேயே விலை குறைவான
துணிகளாக எடுத்துக் காட்டினேன்.  அவருக்குப் பிடித்திருந்தாலும் இயலாமை அவர் முகத்தில் தெரிந்தது.    மிகுந்த தயக்கத்துடன் ஒன்றையெடுத்து 100 ரூபாய்க்கு கிடைக்குமா என்று கேட்டார்.  அதன் மேல் 225 ரூபாய்க்கு விலை ஒட்டப்பட்டிருந்தது.  நான் 200 என்று கூறினேன்.  முதலாளியிடம் பேசுங்கள் என்று சொல்லி 175 க்கு ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினேன்.  அவரும் அதற்கு மேல்
குறைக்கவில்லை.  முகத்தில் நிறைவும், மகிழ்ச்சியும் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஏக்கமும் தெரிந்தது.  சுருட்டி வைத்திருந்த காகிததிலிருந்து
 ரூபாய்நோட்டுக்களை எடுத்து கொடுத்தார்.  அத்தனையும் பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள்.


இரவு 12 மணியினை தாண்டியிருந்தது.  ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார்.  அந்தப் பையனின் முகம் வாடியிருந்ததைக் கவனித்தேன்.  கேட்டது கிடைக்காத ஏக்கம் தெரிந்தது.  அவர் சாதாரன பேண்ட்களை பார்த்துக்கொண்டிருந்தார்.  அவனது கண்களோ ஜீன்ஸ் பேண்ட்களின் மேல் இருந்தது.  தந்தையும் மகனும் எதிர் எதிர் மன நிலையில்.  அவன் விருப்பத்தினை அவரிடம் கூறினாலும் அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  அவன் விருப்பத்தினை மீறி அவர் வாங்கிவிட்டார்.  அவர் வாங்கியது அங்கு இருந்த ஜீன்ஸ் பேண்ட்களை விட விலை அதிகமான ஒன்றானாலும் அவனுக்கு பிடிக்காதது.  அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.  அழுகை மட்டும் இல்லை. 


காலை நான்கு மணிக்குமேல் கூட்டம் குறையத்தொடங்கியது.  என் கால்களும் முன்பை விட மிகப் பெரிதாக இருந்தன.
5 மணிக்கு மேல் யாரும் வரவில்லை.  நண்பன்  இருதய பிரச்சினை உடையவன்.    அவனால் நிற்க முடியவில்லை.  உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டான்.   நானும் மற்றொரு நண்பனும் பேசிக்கொண்டிருந்தோம்.   முதலாளி வெளியே சென்றிருந்தார்.  அன்று நான் வாங்கப்போகும் சம்பளம் 500 மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன்.  என்னளவில் மிகக் கஷ்டப்பட்டு சம்பாரித்த இல்லை சம்பாதிக்கப்போகும் என் முதல் சம்பளம்.   ஒரு வாரக்காய்ச்சலில் தளர்ந்திருந்த என் உடல் அன்றைய 500 ரூபாய் என்ற இலக்கை நோக்கி அனைத்தையும் தாங்கிக்கொண்டது. 


காலை 8 மணிக்கு முதலாளி வந்தார்.  நாங்களும் கிளம்புவதற்கு தயாரகயிருந்தோம்.  500 ரூபாய் நோட்டுகளை எண்ணி தனியாக வைத்துவிட்டு 100 ரூபாய் நோட்டுகளை எண்ணி ,  ஒரு 50 தை சேர்த்து மொத்தமாக 1050 தை கொடுத்தார். விற்பனை எதிர்பார்த்த அளிவிற்கு இல்லையென்றும் அதனால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்றும் கூறினார்.  இரவு முழுவதும் மிகுந்த இரைச்சல், ஆராவாரங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த பகுதி வெறிச்சோடிக்கிடந்தது.  எங்களை அழைத்து வந்திருந்த நண்பன் 
பேசிப்பார்த்தான்,  அவருடையபேச்சில் அலட்சியமும்,
 இடத்தை காலி செய் என்ற தொனியும் இருந்தது.  
அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கோ,  பிரச்சினைகள் செய்வதற்கோ  எங்களிடம் சக்தியில்லை.  வேறு வழியில்லாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு
பேருந்து நிறுத்தத்தினை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.  இன்று வரையிலும் அந்த 350 பது என் மனத்திற்கு 500 ஆகவே தெரிந்தாலும், என்னளவில் முதல் உழைப்பும், அந்த காகித நோட்டுகளும் மதிப்பிட
 முடியாதவையாகவே இருக்கின்றன.


(காலையில் 800 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டி விறகப்பட்ட ஒரு பேண்ட் 
நடு இரவில் பாதிவிலைக்கும் சற்று அதிகமாக விற்கப்பட்டது.)



Tuesday, March 30, 2010

அங்காடியும் நானும்

இது அங்காடித்தெரு படத்தினைப் பற்றியப்பதிவு அல்ல.  ஒரு துணி அங்காடியில் ஒரு நாள் வேலைப்பார்த்த அனுபவம்.  திருச்சியில் தீபாவளியின் போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் துணிக்கடையினில் பகுதி நேர வேலைக்கு போவார்கள்.  என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது வீட்டில் அனுமதி கிடைக்காது என்று மறுத்துவிடுவேன்.

கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த பொழுது நண்பன் அழைத்தான், (என்ன வீட்டில் இருந்த பொழுது?வெட்டியா இருந்த 
பொழுதுன்னு சொல்லு)  வீட்டில் கேட்டபொழுது அனுமதி கிடைத்தது. இருபத்தி நான்கு மணி நேர வேலை, 500 ருபாய் சம்பளம்.  ரமலான் நோன்பு நேரமும் கூட.  சரியாக காலை 9 மணியளவில் கடையில் நுழைந்தோம்.  நாங்கள் மூன்று பேர். எந்த விதமான முன் அனுபவமும் கிடையாது.  கடையின் முதலாளி வட நாட்டுக்காரர்.  வந்தவுடன் எங்களை மேலிருந்து கீழ் வரை அளந்தார்.  என்னைப்பார்த்துவிட்டு நீ வெளியே நின்று கூட்டம் அதிகமாகும் பொழுது வருவோரை கட்டுப்படுத்தவும்,  
வாங்கிச் செல்லும் பொருட்களையும் பில்லையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தினார். 

காலையில் பெரிதாக கூட்டம் இல்லை.  ஒருவர் இருவராக வந்து கொண்டிருந்தனர்.  ஒரு வாரக்காய்ச்சலில் இருந்து மீண்டு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.  நான் நினைத்த அளவிற்கு கடினமாக இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.  மதியத்திற்கு பின் கூட்டம்
 அதிகமாகிக்கொண்டிருந்தது.  ஒரு கட்டத்தில் உள்ளே ஆள் தேவைப்பட நானும் உள்ளே அழைக்கப்பட்டேன்.  நமது மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள்.  எத்தனை விதமான முகங்கள், ரசனைகள்,விருப்பங்கள்,  சண்டைகள்,கோபங்கள் இன்னும் பல என்று அனைத்தையும் கண்டேன்.  5 வருடங்கள் கடந்த பின்னும் என்னுள் சிரிப்பினை உண்டாக்குகின்றன.  அந்த சுவாரசியங்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.  வருபவர்கள் அதை இதை என்று அனைத்தையும் எடுத்துப்போட சொல்ல ஒவ்வொன்றாக எடுத்து போடுவதும் பின்பு மடித்து எடுத்து வைப்பதும்,  சிறிது நேரத்தில் சலித்துப்போனது. 

பொருட்களுக்கு விலை சொல்வதில்தான் திறமையே இருக்கின்றது.
 இன்று வரையிலும் நான் அங்கு விலை சொல்லி விற்றப்பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவில்லை.  பேண்ட் வகை துணிகள் தரத்தினைப்பொருத்து விலை வேறுபடும்.  இது அனைத்து வகைக்கும் பொருந்தும் என்றாலும்,  அன்று நான் அதை விற்ற விதம் இன்று வரையிலும் புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. அதை இறுதியில் சொல்கிறேன். 

நாளை தீபாவளி. மாலை 6 மணி ,  கூட்டம் சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருந்தது.  என் நண்பன் கூட்டம் நிறைய இருக்கும் சமாளிக்க முடியாது என்று சொல்லியிருந்தான்.  நோன்பு திறப்பதற்காக 20 நிமிடங்கள் முடப்பட்டது.  வெளியே கூட்டம் முண்டியடித்து கொண்டிருந்தது.  விட்டால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவது போல் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.  நான் கதவைத்திறந்து வெளியே சென்று கூட்டத்தை சமாளிக்க முயன்று தோற்றுப்போனேன்.
 

நல்ல உயரம், கையில் மஞ்சள் பை, கருத்த மேனி  பார்த்தவுடனே சொல்லிவிடலாம் கிராமத்தான் என்று.  கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு என்னிடம் வந்து சேர்ந்தார். 
அந்த பச்ச கலரு,  இந்த நீல கலரு,  அது எவ்வளோ, இது எவ்வளோ என்று  நிறைய பார்த்துவிட்டு வேண்டாம் என்று போய்விட்டார்.  ஒரு அறைமணி நேரத்தில் மீண்டும் வந்து மீண்டும் அதே மாதிரி, 
கேட்ட அனைத்தையும் எடுத்துப் போட்டாகிவிட்டது.  ஒன்றும் வாங்கவில்லை.


இப்பொழுது  எனக்கு கோபம் வந்தது. ஆனால் என்னை   நானே
சமாதானப்படுத்திக்கொண்டேன்  இந்த வேலையில் இதெல்லம் சகசம் என்று.  அறைமணி  நேர இடைவெளியில்  மீண்டும் வந்தார்.  இப்பொழுது
எண்ணிடம் இல்லை  என் நண்பனிடம், சட்டைகள் பிரிவில். ஒன்றும்
வாங்கவில்லை.  ஆனால் கையில்  மற்றொரு கடையின் பையிருந்தது.
எனக்கு  விளங்கிவிட்டது.  மீண்டும் அதே  ஆள்,  முதலாளியிடம்
கண்ணை காட்டிவிட்டேன்.   அவரை நுழைவு வாயிலிலேயே தடுத்து
உள்ளே நுழைய விடாமல்  திருப்பி அனுப்பிவிட்டார்.

இரவு மணி ஒன்பது  கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாளை தீபாவளி இரவு 9 மணிக்குப் பின்னும்
சாரை  சாரையாய் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை தீபாவளிக்கு முந்திய இரவு எப்படியிருக்குமென்று. 

தொடரும்.