Wednesday, July 28, 2010

கொஞ்சம் கரைக்க முனைகிறேன்

வறண்டு போன பாலைவனம் என்று சொன்னால் அதில் புதுமையேதுமில்லை
வறண்டு போன நதி என்று சொன்னாலும் அதிலும் புதுமையில்லை
வற்றாத கடல் எனக்கொள்கிறேன் என் வறட்சியை,
அது மீண்டும் மீண்டும் பெருகுமே அன்றி வறண்டுபோகதல்லவா
காரணம் ஏதென்று யோசிக்கின்றேன்...

ஒரு முறைமட்டுமே வந்ததால் இது இப்படி என்று ஒருவர் சொன்னார்
நான் முற்றாக மறுக்கவில்லை,
தொலைத்தொடர்பில் ஒரே அலைவரிசையில் பேசியதுண்டா?
தொலைப்பேசியில்லாமல் ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததுண்டா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
உனக்காக யாரிடமாவது சண்டையிட்டிருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
பேருந்தின் முன் இருக்கையில் நீ இருக்கையில்
பின் இருக்கையில் நான் இருக்க பின் வந்து மோதும்
உன் ஸ்பரிசத்தினை உணர்ந்திருக்கின்றேனா?
ஆம் என்று தலையை ஆட்டிக்கொள்கிறேன்.
இதிலும் புதுமையில்லைதான் ஆனால்
எத்தனை முறை ஆம் என்று கொட்டிக்கொண்டாலும்
வெறுமை என்னும் கடல் கூடிக்கொண்டே போகின்றதடி.

இன்றும் உன் அருகாமையை உணர்கிறேன்
ஆம் ஆம் என்று சொல்லும் போதெல்லாம்
முகத்தினில் முறுவல் தோன்றுதடி.
காய்ந்த சறுகுகள் கூட பசுமையாய் தோன்றிய காலமடி.
அந்த பசுமையை எழுத நினைக்கையில் வெறுமையாய்
வார்த்தைகள் விழுகுதடி.
இது முதல் முறையல்ல
இது எத்தனையாவது முறை என்ற
கணக்கும் என்னிடம் இல்லை
இது தொடர்கதையடி....
முடிவு வரும் வரை தொடருமடி....

என்றாவது ஒரு நாள் பதிவுசெய்வேன் பசுமையுடன்
என்ற நம்பிக்கை அற்றுப்போகவில்லையடி
நீ எங்கிருக்கின்றாய் என்று அறியேனடி
ஒருவர் சொன்னார் காலம் மாறும் வாழ்வில் வசந்தம் வருமென்று!!!!
என் பசுமை உன்னிடம் உள்ளதடி..
ஏன் என்னிடம் பகைமை கொண்டாயடி..

ஒரு நாள் கண்டேன் உன்னை தூரத்தில்
ஐந்து நிமிடத்தில் உன் அருகினில்
ஆழமாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தேன்...

அன்று அறிந்தோ தெரிந்தோ இல்லை
எனக்காகவோ தெரியவில்லை
எதற்காகவோ மூச்சு வாங்கினேன்
அதில் உன் மூச்சும் கலந்திருந்தது,
சேர்த்து இழுத்துக்கொண்டிருந்தேன்
நீயும் இழுத்துக்கொண்டிருந்தாய்
இருவரும் அறிந்திருக்கவில்லை
ஆனால் மறுக்க முடியாது,
என் உன் என இரண்டும் உள்ளும் வெளியும்
கலந்து கலந்து உடல் முழுதும்
அனைத்து செல்களிலும் பொதிந்து விட்டது
அந்த நொடியில் இருவரின் ஜீவனும் ஜனித்திருந்தது
இருவரின் மூச்சிலே அல்லவா!!
இன்றும் உணர்கிறேன் அந்த சுவாசத்தினை
மூச்சு வாங்கும்போதெல்லாம்.

இங்கிருந்து நிறுத்தி மேலிருந்து கீழ் படித்துப்பார்க்கிறேன்,
என் வெறுமை வெளிப்படுகிறாத என்று,
நீங்கள் இதை சுய புராணம் என்றாலும்
சுவாரஸ்யம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
இதில் அவள் இல்லாத வெறுமையை கொஞ்சம்
கரைக்க முற்படுகின்றேன் அவ்வளவே.

Wednesday, July 21, 2010

துபாய் பஸ்ஸில் ஏறிய மானம் (மீள் பதிவு )

(இந்த வலை பதிவ ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை மீண்டும் மீண்டும்  படிக்கப்படுகின்ற பதிவில் அதிகம் முறை படிக்கப்பட்ட என் பதிவு இதுதான் )

இந்தியாவோட மானம் போன கதையும்  அத தடுப்பதற்கு நம்ம ஹீரோ செய்த காரியமும். இதுதான் மேட்டரு.  பிச்சகாசு 2 திர்ஹம்ஸ்க்காகன்னு சொல்ல முடியாது அதுவே ரொம்பப்  பெரிய விசயமா தெரிஞ்சதனாலதான் இத செஞ்சிருப்பாங்களோன்னு  தோனுது. 

ராத்திரி 8 மணி இருக்கும்.  இடி இடிக்கல மழையும் பெய்யல. நாங்கயெல்லாம் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தோம். நாங்கன்னு சொன்னதால யார் யார்ன்னு சொல்லுறேன் 5,6 சீனா காரங்க, 4,5 மூனு வெள்ளக்காரங்க(எந்த ஊர்னு தெரியல) கந்தூர போட்ட அரபிங்க, ஒமன் காரங்க , இப்புடி பல பேரு பல நாடு.  இதுல மெஜாரிட்டி யாரு, வேறயாரு நம்மாளுகதான்.  நம்ம STOP தான் கடைசி வர்றவங்களுக்கு, போறவங்களுக்கு மொத STOP ப்பு.  டிரைவரு நமக்கு ரொம்ப டியரு.  ஓமான் காரரு.  ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்ல மனுசன்...


ஒரு வழியா டிக்கெட்ட கொடுத்து முடிச்சுட்டு பஸ் கதவ மூடிட்டு எதயோ 
தேடுறதுக்காக சீட் லைட்ட போட்டாறு அப்போ அவரு கண்ணவுறுத்துற 
மாதிரி  பச்ச கலர்ல ரெட்டி கையெழுத்தோட காந்தி தாத்தா அவர பாத்து
சிரிச்சாறு. எங்க!! துபைல ஒரு மெய்ன் ரோட்டுல. அதே நெரத்துல 
அவரு கை, வண்டியையும் ஸ்டார்ட் பண்ணுச்சு, ஆன் பண்ணுனத 
ஆஃப் பண்ணிட்டு அந்த 5 ருவாவ எடுத்துக்கிட்டு நம்மவூர்ல படத்துல SPECIAL லா விஜயகுமார் சிபரிசுல அப்பாய்ண்ட் பண்ணுன 
போலிஸ்காரராட்டம் கண்ணு சிவக்காம, காத்து அடிக்காம இப்புடி எதுவுமெ இல்லாம ரொம்ப சாதாரணமா அப்புடியே அந்த நோட்டோடப் பக்கவாட்ல இரண்டு கையையும் புடிச்சுகிட்டு நடந்து வந்தாரு.


யாருக்கும் ஒன்னும் புரியல நான் கடைசி சீட்டுல உட்கார்ந்திருந்ததால 
ரொம்ப லேட்டாதான் புரிஞ்சிச்சு. முதல்ல லைட்டா கேட்டறு,
கொஞ்சம் குரல மாத்தி ஹர்டாவும கேட்டுப்பாத்தாரு.  நம்ம ஆளுங்கதான் எதையும் பிளான் பண்ணி செய்ரவங்களாச்சே.  ஒருத்தரும் உண்மைய 
ஒத்துக்கல.  ஒத்துக்கலனா இப்பவே இங்கயே இந்த நோட்ட 
கிளிச்சுடுவேன்னு இடிமாதிரி முழங்கி ரெடியானாரு அப்பொ STOP னு யாரோ கத்துனாங்க. யாரு நம்ம ஹீரோதான்.  நீயா!!! அவருக்கு ஒரெ ஷாக்.....
(மேஜர் சுந்தர்ராஜன்இருந்திருந்தார்னா,  இரண்டு திர்ஹம்ஸ்க்கு பதிலா ஒரு ரூபாவும், ஒரு திர்ஹம்ஸ்சும்னு அன்னைக்கு ஏமாத்துனானே ஒருத்தன்னு  இன்னைக்கு சொல்லுரதுக்கு நாகேஷ் இல்ல அத கேக்குறதுக்கு நம்ம மேஜர் சாரும் இல்ல) 
உடனே எல்லோரும் அவனுங்களுகுள்ளேயே அத கொடுத்தவனும் சேர்ந்து ரொம்ப நல்லவனுங்க மாதிரி பேசிக்கிட்டாய்ங்க. நம்ம ஹீரோவுக்கு 
இதெல்லாம் காதுல விழல அவனுக்கு அந்த நோட்டும் இந்தியாவோட
மானமும் தான் தெரிஞ்சது.

ஹீரோ 5 திர்ஹம்ஸ்ச கொடுத்து 5 ருபாய வாங்குனான்.  இத்தாங்க கத,  ஹீரோ யாரா இருப்பான்னு நீங்களே முடிவுபண்ணிகோங்க.  அந்த 5 ரூவா இருந்த பர்ஸ, இந்தியாவோட மானத்த,  ஹீரோ இந்தியா வந்தப்போ நல்லவங்க யாரோ திருடிட்டாங்கங்குறது வேற கதை.

Monday, July 19, 2010

அரசு அலுவலகத்தில் ராஜ மரியாதை

நண்பர் ஒருவருடைய தொல்லைப்பேசி தொலைந்துவிட்டது.  இது நடந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது.  தொலைப்பேசியின் விலை 20,000 ரூபாயை தொடும்.  முக்கியமான விசயம் விலையில்லை அதில் சேமித்து வைத்து இருக்கக்கூடிய அவரது தொழில் தொடர்பான தொகுப்புகள்.  என்ன செய்வது என்று தெரியாமல் என்னிடம் வந்தார்.  நான் அவரைக் கூப்பிட்டுக்கொண்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காகச் சென்றேன்.

காவல் நிலையத்தில் புகார் பதிவாளர் இல்லாத காரணத்தால் சிறிது நேரம் காத்திருக்கச்சொன்னார்கள்.  எங்கள் பக்கத்தில் இன்னொருவர் அமர்ந்திருந்தார்.  எங்களிடம் என்ன வேலையாக வந்திருக்கின்றீர்கள் என்று விசாரித்து விட்டு,  அவர் வேறொரு ஆலோசை கூறினார்.  அவர் ஆலோசனையின் பேரில்,  பேருந்தில் தொலைந்து போயிருந்த காரணத்தால் நண்பர் இறங்கிய பேருந்து நிலையத்திற்குச் சென்று விசாரித்தோம்.

வெயில் அடித்து காயப்போட்டுக்கொண்டிருந்தது.  பேருந்து நிலையத்தின் அலுவலகத்திற்குச் சென்று நாங்கள் வந்த காரணத்தை விளக்கிவிட்டு   அவரின் பதிலுக்காகக் காத்திருந்தோம்.  எங்களை வெய்டிங் ரூமில் காத்திருக்கச்சொல்லிவிட்டு கணினியில் மும்முராமாக வேலைச் செய்யத் தொடங்கினார்.  எங்கள் இரண்டு பேருக்கும் நம்பிக்கையில்லை கிடைக்கும் என்று,  ஏனென்றால் தொலைந்து இன்றோடு ஒரு வாரக் காலமாகிவிட்டது.  எடுத்தவர் நல்லவராக இருந்திருந்தால் போன் செய்த போதே எடுத்துப்பேசியிருப்பார்.  ஆனால் அது அணைக்கப்பட்டு இருந்தது.

அரை மணி நேரக்காத்திருக்குப் பின் எங்களை அழைத்தனர்.  என்று தொலைந்தது, எங்கு தொலைந்தது, எப்போது தொலைந்தது, அப்பொது எத்தனை மணியிருக்கும், அதன் நிறம், தயாரிப்பாளர் மற்றும் குறியீட்டு எண் என அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டு மீண்டும் எங்களைக் காத்திருக்கச்சொன்னார்.  சிறிது நம்பிக்கை வந்தது.  நம் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதால்.  சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்து நண்பரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு கடிதத்தை காகித உறையில் போட்டு ஒரு விலாசத்தைக்கூறி அங்குப் போகுமாறு கூறினார்.

நாங்கள் அவரிடம் நன்றி கூறி விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்துக் கிளம்பி அவர் கூறிய இடத்திற்குச் சென்றோம்.   அந்த அலுவலகம் முழுவதும் பழைய கனரகவாகனங்கள், குப்பையைப்போன்று குவியலாகக்கிடந்தன.  அவற்றின் மத்தியில் அலுவலகக்கட்டிடம் நல்ல விசாலமான முறையில் கட்டப்பட்டிருந்தது.  உள் நுழையும் போதே குளிந்த காற்று உடலையும் சேர்த்து மனதையும் வருடிச்சென்றது.  வரவேற்பறையில் இருந்த ஒருவர் எங்களிடம் வெயில் அதிகமா இருக்கிறதா என்று கேட்டுவிட்டு எங்களை ஒரு இடத்தைக்காட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார்.  இருவரும் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் .  அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்ட படியால் இதை கவனிக்கவில்லை.


நாங்கள் அவர் காட்டிய அறையில் சென்று அமர்ந்து கொண்டோம்.  அது குளிரூட்டப்பட்ட அரை. அவர் கூறியதற்கும் காரணம் இருக்கின்றது.  எங்கள் சட்டைகள் வியர்வையில் நனைந்து தொப்பல் தொப்பலாக இருந்தது.  பின் ஒருவர் வந்து குடிப்பதற்குத் தண்ணீரும், அதனுடன் பழச்சாரையும் கொடுத்துவிட்டுப்போனார்.  மீண்டும் அதே ரேகைகள்.  இது அரசு அலுவலகம் தானா.  பெருமூச்சும், ஆச்சரியங்களும் மாறி மாறி வந்துபோனது.  மீண்டும் அதே அலுவலர் வந்து அழைத்து என்ன பிரச்சனையென்று கேட்க நாங்கள் அந்தக்கடிதத்தை அவரிடம் கொடுத்தோம்.  படித்து விட்டு மீண்டும் எங்களை காத்திருக்கச்சொன்னார்.  பத்து நிமிட நேர இடைவெளியில் அலைப்பேசி எங்களிடம் வந்து சேர்ந்தது.  ஒரு சிறு கீரல் கூட இல்லாமல் விட்டது விட்ட படியே எங்கள் கைகளில்.  நண்பரின் மன மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.

ஆச்சரியங்கள் அதோடு முடியவில்லை. எங்களிடம் எங்கே போகவேண்டும் என்றார். நாங்கள் இடத்தைச்சொல்லவும் நானும் அங்கே தான் செல்கிறேன். வாருங்கள் என்று அழைத்து வந்து எங்கள் இடத்தில் விட்டுவிட, அவரிடம் நன்றி சொல்லி விடைப்பெற்றோம்.  ஒரே நாளில் அதுவும் வெகு சுலபமாக எங்கள் வேலை முடிந்தது. 


இது நடந்தது அமீரகத்தில்.  அந்த அலுவலர் தனது பணியைத்தான் செய்தார். ஆனால் அதில் மனிதமும், நேயமும் கலந்திருந்தது.  தொலைந்த ஒன்று கிடைத்த மகிழ்ச்சியிருந்தாலும், ஒவ்வொரு அதிர்ச்சியின் போதும் நம் நாட்டின் நினைவுவராமலில்லை.  இது இந்தியாவில் நடந்திருக்குமானால்.   திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு,  அப்படியே நல்லவர்கள் யாராவது அதை இப்படி ஒப்படைத்திருந்தாலும் இத்தனை எளிதில் கிடைத்துவிடுமா.  அங்கே இங்கே என்று சில ஆயிரங்கள் நம்மை விட்டுப் போயிருக்கக்கூடும்.  ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பதற்கோ, இத்தனையும் கொடுத்த பின்பு நமக்கு கிடைக்க வேண்டிய குறைநதபட்ச மரியாதைக்கோ உத்திரவாதம் கிடையாது. மனிதத்திற்கு விலையென்ன என்றிருப்பார்கள்.  

இந்த சம்பவத்தில் எனக்கு பொருள் கிடைத்தது என்பதை விட மனிதம் என்னும் அடிப்படை உணர்வு அற்றுப்போகாது என்பதை உணர்ந்துகொண்டேன்.  அது ஒவ்வோரு மனிதனுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றது.   வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதம் என்னும் உணர்வு நம்மை விட்டு விழகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பெருக ஆரம்பிக்கின்றது.


மரம் வளர்ப்போம் மனிதமும் வளர்ப்போம்.

Saturday, July 17, 2010

விடிவெள்ளியுடன் ஒரு சந்திப்பு-நம்ம தேவா அண்ணன்தான்



எதிர்பார்த்து நடப்பதை விட எதிர்ப்பாராமல் நடக்கும் சந்திப்புகள் சுவையானதாக இருக்கக்கூடும்.  அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அண்ணனுக்கு போன் செய்தேன்.  வழக்கமாக உரையாடிவிட்டு வைக்கும் முன், இன்று உங்களை பார்க்க வருகிறேன் என்றேன்.  போன் பேசிய ஐந்து நிமிட வேளையில் மனதில் தோன்றிய ஒன்று.  அலுவலகத்திலிருந்து அரை மணி நேரம் முன்பாகவே கிளம்பிவிட்டேன். தேராவிலிருந்து டேக்ஸி பிடித்து அல் நாதா செல்ல வேண்டும்.  அஞ்சப்பர் முன் நின்று கொண்டு மீண்டும் அழைத்தேன்.  புரிந்தும் புரியாமலும் வழியை கேட்டுக்கொண்டு வேலிதாண்டி சென்றேன். அண்ணன் சொல்லிய பின்புதான் தெரியும் அந்த வேலி துபாயையும்,சார்ஜாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு என்று.

வெயில் 55 டிகிரி அடித்து முடித்த களைப்பில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தது.  அமீரகத்திற்கு வந்த பின் சார்ஜாவுக்குள் செல்வது இது இரண்டாவது முறை.  அரைமணிநேரத்தேடலுக்குப் பின் ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அடுத்த சோதனை காத்திருந்தது அது 45 மாடிக் கட்டிடம், கீழே லிப்டில் ஏறுவதற்கு வரிசை ஒன்று நின்றுகொண்டிருந்தது.  இது வேரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.  இருபது நிமிட காத்திருப்பிற்கு பின் எனக்கும் உள்ளே இடம் கிடைத்தது.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தேன். உள்ளிருந்து ஒரு வெண்கலக் கவர்ந்திலுக்கும் காந்தக்குரல் கேட்டது. நான் அதிர்ந்து போனேன். போனில் நாம் கேட்டது இந்தக்குரல் இல்லையே. நாம் தவறாக வந்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ஒரு உருவம் கதவை திறந்தது, அந்த நொடியில் நான் இரண்டடி என்னையும் அறியாமல் பின்னால் இழுத்துச்செல்லப்பட்டு பின் உள்ளிழுக்கப்பட்டேன். அந்த அனுபவம் ஒரு பரவசநிலையினைக்கொடுத்தது. கை கொடுத்த அடுத்த வினாடியே என் ஆன்மா உள்நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் ஒரே இருள் சூழ்ந்திருந்தது. எனக்குள் இது சூனியமோ என்ற எண்ணம். ஆனால் உள்ளுணர்வு வந்தவுடன் இது அண்ணனின் வீடு என்று உணர்ந்துகொண்டேன். கவனிக்க தெரிந்துகொள்வதும், உணர்ந்துகொள்வதும் வேறு வேறு.


நீண்ட நெடிய பாதை, பக்கவாட்டில் சமையலறை ஒரு பத்தடி இருக்கும் அதை கடந்த பின் முகப்பறை. உட்காருவதற்கு ஏதுவாக இரண்டு பெரிய பஞ்சுப்பொதிகள் நிரம்பிய நாற்காலிகள். அட்சயாவுக்கு அண்ணிக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அண்ணனைப்பார்த்தேன். ஒரு உண்மையை விளங்கிக்கொண்டேன். கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்வது பொய் என்று. அவருடைய போதி மரத்தையும் கண்டேன். இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார் போதி மரத்துடன். அருவியில் கூட தண்ணீர் வரண்டு காய்ந்துவிடும். ஆனால் இங்கு ஆஹா ஆஹ்ஹா அது ஒரு பரவச அனுபவம்.

என்னுடன் பேச ஆரம்பிக்கும் முன் நானும், அண்ணனும் குடித்து முடித்திருந்தோம் கோலாவை.  ஒரு வழியாக என் பக்கம் வந்தார்,  போதிமரத்தை மூடி வைத்துவிட்டு. இனி பேசலாம் என எத்தனித்த போது அண்டைவீட்டிலிருந்து இருவர் எங்களோடு வந்து இணைந்து
கொண்டார்கள்.

என்னவென்று சொல்வேன் கடவுளின் திருவிளையாடலை.
அங்கிருந்து கிளம்பும் வரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.  இங்கு அவர்களை குறைச்சொல்லவில்லை, எல்லாம் எல்லாம் ஆனதால் எல்லாம் எல்லாம் ஆகிப்போனது. அப்படிப்பட்ட நிலையிலும் அண்ணனும் நானும் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.  சில மின்புத்தகங்களை படிக்கக்கொடுத்தார்.  மணி 10.30 ஐ தாண்டிவிட்டது.  இப்பொழுதும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  அனைவரிடம் சொல்லிவிட்டு நான் விடைபெற எத்தனிக்கையில் அண்ணியின்(நன்றிகள்) வற்புறுத்தலில் அங்கேயே சாப்பிட்டுவிட்டு விடைப்பெற்றேன். 

அடிக்கடி போனில் பேசி அறிமுகமாகிவிட்டதால் அறிமுகப்படலமும் தேவைப்படவில்லை. போதிமரம்ங்கிறது அவரோட லாப்டாப். 

சீக்கிரமாக முடிந்துவிட்டாதாக தோன்றும் பெரிதாக எழுத வேண்டிய அளவிற்கு விடயங்கள் இல்லாத போது இவ்வளவுதான் எழுத முடிந்தது. அடுத்த சந்திப்பில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் அப்டேட் செய்கிறேன்.


பின்குறிப்பு:  அட்சயாக்கிட்ட உனக்கு பிடிச்ச நிறம் என்னண்ணு கேட்டேன்.  பிங்க் சொல்லுச்சு. ஏன் கேட்டா கேர்ள்ஸ் எல்லாம் கியூட் அதானால அதோட தொடர்ச்சியா சொல்லுச்சு பாய்ஸ்கு பிளாக்னு ஏன்னுகேட்டதுக்கு அவங்க எல்லாம்...... அப்புடின்னுச்சு. உங்கப்பாக்கூடாவான்னு கேட்டேன்.... அதுக்கு...... முடிஞ்சா அண்ணன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

Friday, July 16, 2010

துபை - விபச்சாரத்தின் அறிமுகம்(மீள் பதிவு)

இந்த பதிவுல துபைக்கு வந்தப்போ ஏற்பட்ட ஒரு அனுபவத்த சொல்லாலாம்னு இருக்கேன்.

துபை தேரா பகுதி நம்ம வசிக்குமிடம். பொதுவா தமிழ் மக்களும், தமிழ் ஆளுங்க கடைகளும், வாரக்கடைசில அனைவரும் கூடும் இடமா இருக்கும்.
வந்த புதுசுல வெளியில போறப்போ அறைல இருந்த அண்ணாச்சி
 பாத்து பத்திறமா போயிட்டுவாப்பான்னாரு.

புதுசுங்கறதால சொல்லுறாரு போல நானும் தலைய ஆட்டிட்டு
கிளம்பிட்டேன். தேரா பஜார் ஏரியால நேறய சந்து சந்தா இருக்கும், 
சந்தோட முடிவுல குட்டையா கட்டையா பங்களாதேஸ் காரைங்க
 நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போறப்பல்லாம்    நம்மல பாத்து ஏதோ ஒன்னு சொல்லிகிட்டே இருப்பானுங்க.  நான் அத பெருசா காதுல வாங்கிக்காம கடந்து போய்கிட்டேயிருப்பேன்.  ஒரு நாள் ஒருத்தன் நேரா வந்து கைய கொடுத்தான்.  நானும் கையகொடுத்தேன்.  "லடுக்கிச்சாயே" அப்போதான் அந்த வார்த்தைய முதல் முதல்ல கேட்டேன். ஒன்னும் புரியாம நமக்கு தெரிஞ்ச இந்தில "கியா" ன்னேன்.  "அச்சா லடுக்கிஹே 30 திர்ஹாம்" னான் அப்பவும் விளங்கல,  எதேச்சையா அந்த பக்கம் வந்த அறை அண்ணாச்சி இத பார்த்துட்டு ஓடிவந்து தலைல அடிச்சுக்காத குறயா அறைக்கு கூட்டிட்டுவந்துட்டார்.  வந்ததுக்கு பின்னாடி "இப்புடி இப்புடி அப்புடி அப்புடி னு" பெரிய விரிவுரையே நடத்துனார்.  அன்னைலேர்ந்து சந்துகள பார்த்தாலே பத்தடித் தள்ளி நடக்க ஆரம்பிச்சேன்.

அப்புடியும் சனி நம்மல விடுல இப்போ ஒரு பெண் வடிவுல.  துபைல நான் பார்த்தா வகைல கருப்பின பெண்கள் நல்லா பருமனா பார்க்கவே பயமா இருப்பாங்க. அண்ணாச்சி அவங்கள பத்தியும் விரிவுரை நடத்தியிருந்தால கொஞ்சம் எச்சரிக்கையவே இருந்துட்டு இருந்தேன். 

ஒரு நாள் பதினோரு மணியிருக்கு கொஞ்சம் ஆள் அரவம் இல்லாத ஏரியா நடந்து வந்துகிட்டிருந்தேன்.  திடீர்னு பின்னாடி போன கை முன்னாடி வரல என்னாடான்னு பார்த்தா கைய ஒரு பொண்ணு புடிச்சுக்கிட்டிருந்துச்சி. நான் திரும்புனதும் " im sudani" அப்புடின்னுச்சு நானும் பதிலுக்கு விட்டுகொடுக்காம பின்னாடி நடக்க போற வில்லங்கம் தெரியாம ரொம்ப கம்பீரமா "im indian" னேன்.  இப்போ கை கொஞ்சம் இருகுச்சு வலிக்குர மாதிரி இல்ல நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுச்சு. பொண்ணுன்னு சொன்னேன்ல அத பொம்பலன்னு மாத்திக்கோங்க. மறுபடியும் "im sudani" ன்னு சொன்னா. நான் "so what?" னேன்.

"GIVE ME 40 DIRHAM, OTHERWISE I WILL CALL THE POLICE" இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு அம்மணி யாருன்னு.  போலிஸ்னு சொன்னோன்னே பதட்டத்துல வியற்க ஆரம்பிச்சுடுச்சு.  போய்தொலாயுது காச எடுத்து கொடுத்துட்டேன்.  "shall we go? " ன்னு கேட்டா. அடங்கொய்யால கைய ஒதரிட்டு நடக்க ஆரம்பிச்சுடேன்.  ஒரு விசியத்துல அவள பாராட்டாம இருக்க முடியல கொடுத்தா அம்பது திர்ஹம்சுக்கு நாப்பது போக மீதி பத்த கொடுத்தா. என்ன ஒரு நேர்மை.

Thursday, July 15, 2010

கரிய முகம்

விழுந்த இடத்தில் கல்லாய்
விரிசல் விழுந்த மனமாய்
பறந்து விழுந்த பறவையாய்
சரிந்து போன வாழ்க்கையாய்
நீண்டு கொண்டே போனதடி
நீ இல்லாத இந்த வாழ்க்கை
தொலைத்துவிடவே முயன்றேன்
உன் நினைவுகளை
தொடவே முடியாத தூரத்தில்
தொடர்பே அற்ற இத்தருணத்தில்
மீண்டும் மீண்டும் துரத்துதடி
உன் கரிய முகம்.

கோணல் என்பார்கள்
பின்னால் பேசிச்சிரிப்பார்கள்
முன்னால் போகும் எனக்கோ
முடிவுரை எழுதத்தோன்றும்.

கையை பிடித்து இழுத்து வருவாய்
பின் கண்ணீரால் என் கையை நனைத்து விடுவாய்.
கருமை நிறக் கடவுளுக்கே அழகுமுகத்தின் தேவை இங்கே
கத்திப்பேசி சண்டையிடுவேன்
நீ என் அழகியென்று.

சிரித்து சிரித்துப் பேசும்பொழுது
சிதறி விழும் புன்னகையை
சிந்தவிடாமல் அள்ளிப் பருகிக்கொள்வேன்.
அறிமுகம் செய்ய அழைத்துப்போக
பேரைச்சொல்லும் முன்னே
கோணலாய் போனதடி அகமுகம்.

முகம் காட்ட மறுத்த முகத்தை
முறைத்துவிட்டு வெளியேறினேன்.
அறியேனடி விட்டுப்பிரிவாய் என்று
தேடித்திரிந்தேனடி இலக்கறியாமல்.

தேடிக்களைத்த ஒரு பொழுதில்
சேதி வந்ததடி நீ வந்துவிட்டாய் என்று
ஓடிவந்தேனடி உறைந்து நின்றேனடி
கரியமுகம் காணவில்லையடி.
பின்னே யாரோ பேசும் ஓசைக்கேட்டது
உன் முகத்தை இரயில் தண்டவாளம் எடுத்துக்கொண்டது என்று.

Tuesday, July 13, 2010

விலாசம் இல்லா இத்தருணத்தில்

நான் நீ என்று 
என்றுமே அழைத்ததில்லை
நாம் என்ற எழுத்தே நம் முதல் அழைப்பானது
சிரித்து மகிழும் குழந்தையின்
குதூகலத்தை நாம் அருகில் இருந்த
இருக்கப்போகும் தருணங்களை
நீண்டுவிட்ட இந்த இடைவெளியில்
உன் பெயரைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறேன்.

தூரப்பயணங்கள் அரிதான இக்காலத்தில்
நினைவுகள் உன்னை நோக்கியிழுத்து
உன் ஊர் நோக்கி நடக்கையில்
விலாசம் இல்லா இத்தருணத்தில்
நீ வரைந்து கொடுத்த ஒன்றை வைத்துக்கொண்டு
கடந்துபோகும் புன்னகைகளை புறம்தள்ளி
தேட முற்படுகிறேன்.

ஓர் நாள்
பெருங்கூட்டமொன்றில் ஒற்றைப்புள்ளியாய்
மிகுந்துவிட்ட எறும்புக்கூட்டமொன்றில்
கூடுதெரியாமல் தவித்த என்னை
நீ கூவிக்கூவி அழைத்ததை
என்னிடம் பகிர்கையில்
கூட்டம் என்பதை மறந்து
உமிழ்நீரை உன் கண்ணங்களில்
கலங்கிய உன் கண்ணீரோடு
கரைத்து வழியவிட்டேன்.

அந்த உமிழின் சுவையை
வழியும் என் வியர்வையில்
கசியும் என் கண்ணீரில்
வறண்ட என் உதடுகளில்
துலாவும் என் நாக்கின் உதவியுடன்
இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.
 .               

தொடர்பில்லாதவை






















ஒரு கணம் போதும் என்பேன்
உருப்பெரும் ஒவ்வொன்றும்
அதனதன் அகப்புறப்பொருளுடன்
தொடரும் இல்லை முடிவுரும்
முடிவினையெடுக்க.

இப்படித்தான் இருக்குமா
இல்லை இப்படித்தான் வலிக்குமா
வலிந்து பிரிப்பதில்லை
இது விடுதலையுமில்லை.

நிலைவாசலும் அதன் பின்னோ
அல்லது முன்னோ வரும்
முன்வாசலும் பின்வாசலும்,
இதில் முன்பின் என்று
யார் பிரித்தது ஏன் வந்தது
மறந்து இடித்துக்கொள்ளும்
கூரைவீட்டு நிலைக்கும்
இது பொதுதானே.

இடித்துக்கொள்வது
அதன் பின் வலிப்பது
ஒன்றன் பின் ஒன்றாய்
வரிசைக்கட்டி வரும்
குசலங்களும் வருத்தங்களும்
இதுவும் பொதுதானே.

இங்கு
விடுதலையுமில்லை
விட்டுப்பிரிவதுமில்லை
தொடுவதுமில்லை
தொடர்வதுமில்லை
நீயே தொலைந்துபோ.

Monday, July 12, 2010

ஒரு மேட்டரும் சில நினைவுகளும்

ஒரே ஒரு கண்டீசன் கடைசி வரைக்கும் படிங்க.

இந்த சங்காத்தமே வேண்டாம்னுதான நா உன்னைய விட்டு விலகி இருக்குறேன்.  ஏன் திரும்ப திரும்ப வந்து தொல்லை பண்ணுற.  ஒழுங்கு மரியாதையா இத இத்தோட நிறுத்திடு.  நான் பாட்டுக்கும் என் வழியப்பாத்துக்கிட்டு போயிடுறேன்.

வராத ஏய் வராத.... வராத வராத வராத எத்தனை தடவ சொல்லிட்டேன் வராதன்னு.  இப்போ உனக்கு என்ன வேணும்குற. மேட்டர சொல்லு.
என்னது மேட்டரே இல்லயா.  அப்ப ஏன் திருமபத்திருப்ப  வந்துகிட்ட இருக்க.
ஆ.... மேட்டரு இருக்கா.  ஆனா அது ஒரு பெரிய மேட்டரு இல்லயா.
இப்போ என்னத்த சொல்ல வார.

யாரப்பாத்து இந்தக்கேள்வியக்கேட்ட  அதுவும் யாரப்பத்திக்கேட்ட.  இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னா என்னையப்பத்தி என்னா நினைப்பாரு.  இத வேற யாருக்கிட்டயும் கேட்டுறாது.  அப்புடியே ஓடிப்போய்டு.  திரும்ப இந்தப் பக்கம் வந்துராத.  அப்புறம் நானே....

நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கேன்.  நாளைக்கு பேசலாமே,  இன்னைக்கே பேசனுமா.  இல்லப்பா இன்னைக்கு முடியாது நாளைக்கு அங்க வந்துடுறியா, சொல்லுறதக்கேளு நாளைக்கு பாப்போம்.  முடியாதா.  அப்ப நானும் உன்னையா பாக்கமுடியாது.

நான் எவ்வளோ முக்கியாமான வேலைன்னு சொல்லுறேன்.  சும்மா கேக்காம நீ சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க.  இப்போ என்ன அவசரம் அதுக்கு.  போ போய் வேற வேலையப்பாரு.

இதுக்கு இவ்வளவு, அதுக்கு அவ்வளவு, அந்ததுக்கு ஏன் எதுவுமே இல்ல.  நல்லாத்தானய்யா இருக்கு.  போ போய் அதுக்கும் கொஞ்சம் போட்டுட்டு வா.  நீ போகமாட்டியா.  சரி கொடு நானே போறேன்.

நல்லவேலை தப்புச்சேண்டா சாமி,  கொலைகாரப்பயலுக நம்மளையே கவுக்கப் பாக்குறாய்ங்க.  இந்தப் பாழாப்போன செருப்பு வேற பிச்சுக்கிட்டு நம்மள காலிப் பண்ணப் பாத்துச்சு.  இப்போ எங்கப் போறது.  ஒருத்தனையும் காணோம். ஹலோ யாருங்க,  கொஞ்சம் நில்லுங்க.  அங்க வரைக்கும் போகனும் ஒரு லிப்ட் கிடைக்குமா.

எதுவுமே தோனலன்னா இப்புடி எதயாச்சும் கிறுக்கிக்கிட்டே இருப்பேன்.  சில சமயம் விசயம் புடிபடும் சில சமயம் அப்புடியே மூடி வச்சு படுத்துடுவேன்.  அப்படி செய்யுறப்ப தானா வந்து விழுந்ததுதான் கீழ இருக்கக்கூடிய இந்த வரிகள்.. 


ஆக மொத்தம் அறுபது வீடு
அத்தனையும் அத்துப்படி
அனுமதியும் தேவையில்ல
அதகேக்குறதும் யாருமில்ல.

அங்க ஓடி இங்க ஓடி
தவிச்சா தண்ணிக்கிடைக்கும்
தவறவிட்டா கொண்டுவிடும்
நாளு கிழமையின்னா
ராத்திரி கண்ணு முழிச்சு
விதவிதமா வண்ணமிட்டு
அழகான கோலமிட்டு
நா முந்தி நீ முந்தின்னு
ருசிருசியா வந்துச்சேரும்.

முட்ட திண்ணுபுட்டு
கட்டம் வட்டம்போட்டு
விதவிதமா ஆடிப்பாடி
ஆறுமணியான பின்ன
எட்டுமணிக்கு முன்ன
அத்தனையும் முடிச்சுப்புட்டு
மீண்டும்
கட்டம் வட்டம் போட
சிட்டா பறந்து விடும்.

அரவம் அடங்கிய பின்ன
சீமையில வந்த ஒன்னு
நடுத்தெருவுல வந்து நின்னு
ஆட்டம்பாட்டம் காட்டி
எல்லாம் போக முன்ன
அடங்கிப்போகும் பின்ன.

எல்லாம் மாறிப்போச்சு
ஆகமொத்தம் எத்தனையின்னு
யாரும் அறியயில்ல
ஆடி ஓடியாட
கட்டம் வட்டம் போட
மண்ணும் ஏதுமில்ல.

தவிச்ச தண்ணித்தர
போனா கொண்டுவிட
நினைச்சா உள்ள போக
அனுமதியுமில்ல இங்க.

அரவம் அடங்குறதில்ல
நடுத்தெருவுக்கும் வாரதில்ல
எல்லாம் வீட்டுகுள்ள
இப்போ டீவிமுன்ன...............................................................!!!!!!

Saturday, July 10, 2010

காதல் என்னும் படிநிலை

மறக்க வேண்டிய ஒரு சில விசயங்களை நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மறக்கமுடியாது.  அவை சோகமான, இன்று நினைத்தாலும் மனதை வறுந்தச் செய்யும் சம்பவங்களாகவோ அல்லது மகிழ்ச்சியான மனதை வருடும் ஒன்றாகவோ இருக்கக்கூடும். அது நட்போ,காதலோ, இரண்டின் பிரிவோ ஏதாவது ஒன்றாக இருக்கக்கூடும்.  இந்த இரண்டு வார்த்தைக்கு பின்னும் எத்தனையோ கணக்கிட முடியாத அற்புதமான கதைகளும் இருக்கக்கூடும்.  அவை மகிழ்வையும், சோகத்தையும் இரு சேர கலந்த நம் வாழ்வின் எச்சமாக நம்மோடு ஒட்டிக்கொண்டு,  வாழ்நாள் முழுவதும்  நம்மோடு பயனித்துக்கொண்டிருக்கக்கூடும்.

இது எங்கு துவங்கி எங்கு முடியும் என்று தெரியாது.  எழுதத்துவங்கும் எனக்குத் தெரியாது என்று துவங்கியது எங்கு முடியப்போகின்றது என்று.  காதல் என்ற உணர்வுக்கு யாரும் விதிவிலக்கில்லை.  காதலுக்கும் பருவம் உண்டு காலமும் உண்டு.  ஒரு மனிதனின் வாழ்க்கை படிநிலைபோல் ஒவ்வொரு படிநிலையிலும் அவனோடு ஒட்டிக்கொண்டு பயனிக்கும்.  அதுவே அவன் வாழ்க்கை படிநிலையை முடிவுசெய்கிறது.  அதை எவரும் புறம் தள்ளமுடியாது.  காதல் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கி மீண்டும் அதே ஒற்றைப்புள்ளியில் நாம் வந்து சேரும் போது நாம் என்பது இல்லாது போயிருக்கும்.

ஆதார  சுருதியான, ஆதியான ஓர் உணர்வு.  அதை கதைசொல்லியாக சொல்ல முறச்சி செய்கின்றேன்.  எழுத்தில் எந்தக்காதலை சொல்வது.  எந்தக்காதலை சொல்லாமல் செல்வது.  காதல் என்பது அனைத்திலும் நிறைந்திருக்கக்கூடிய அபாயம் இங்கிருப்பதால்,  அனைத்தையும் சொல்லத்தோன்றியது, நானும் ஆதியிலிருந்து எழுத்த தொடங்கினேன்.  எழுதி முடித்துவிட்டு படிக்கவில்லை எழுதும்போதே நிறுத்திவிட்டேன்.  அதில் எதனை எடுப்பது எதனை சேர்ப்பது.   என் காதலை முழுமையாக என்னால் ஏன் எழுதமுடியவில்லை. அசிங்கம் என்பது ஏதுமில்லை. நான் தூக்கிச் சுமந்த என் காதலின் முன்னே என் முகத்திரை அல்ல மனத்திறை கிழியும் ஓசைக்கேட்டது.  என் காதல் படிநிலைகள் என்னை அடித்து கீழை தள்ளி என் முகத்தில் காரி உமிழ்ந்தன.


 எத்தனை பக்கங்கள் எழுதியிருப்பேன் என்பது எனக்குத்தெரியவில்லை.  என் காதல்களைப் பொருத்து என் கையெழுத்துக்களும் படிநிலைகளுடன் இருந்தன.  கையெழுத்துகளும் காதல் கொண்டது.  இங்கு பிடித்ததும், பிடிக்காததும் அனைத்திற்கு பொதுவான ஒன்றே.  இங்கு என் காதல் என்பது  அனைத்து திணைகளையும் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.  என் மீது காரி உமிழும் என் காதலை அப்படியே ஏற்றுக்கொண்டு வெளிக்கொணர முடியவில்லை.  அவ்வாறு செய்யும் படசத்தில் இந்த உலகம் என்னை தூற்றத்தொடங்கிவிடும்,  அதுவும் அதன் பங்கிற்கு காரத்துடங்கும் , அதன் காதலை மறைத்துக்கொண்டு.  இங்கு காதல் பொதுவான ஒன்று.  என் மீது துப்பப்படும்,தூற்றப்படும் அனைத்தும் தங்கள் மீது காரி
உமிழ்வதற்கு ஒப்பானதாக இருக்கக்கூடும்.  

 இரண்டு படிநிலைகள் ம்னித உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது.  ஒன்று குடும்பம் என்ற உறவுகள், அதன் பின் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான என்ற இரண்டு நிலைகள்.


மீண்டும் எழுதத்தொடங்கினேன்.  இந்தக்காதல் சுவையாக இருந்தது.  கேலிகளும் கிண்டல்களும்,  கவலையில்லா முகங்களும் அனைத்தும் இதுவரையில்லாத மகிழ்வுடன் கூடிய மறுமலர்ச்சியினை கொண்டிருந்தது.
இது எங்கு எப்போது மலர்ந்தது என்று எனக்குத்தெரியாது.  முகமும்,உடலும் மற்றும் மனம் எங்கும் ஒரு பரவசநிலை பரவியது.  இந்தக்காதல் அவளுக்கும், அவனுக்குமானது.  இந்தப்பரவச நிலை இருவருக்கும் பொதுவானது.  காலையில் தொடங்கி மாலையில் முடியும் பருவகால நிலையில்லாதது.  ஒரு தாம்பத்தியத்தின் அடிநிலையின் முதல் படிநிலையினை நாம் உணர்ந்துகொள்ள உதவக்கூடியது. குறிக்க இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்.  தூங்க மறந்த இரவுகள் அதிகம்,  இமைகள் மூடினாலும் அவள் முகமோ,  அவன் முகமோ கரிய இருட்டுக்குள் வெளிச்சம் போட்டுக்காட்டிக்கொண்டிருக்கும்.   இது முதல்படிநிலையானதால் புரிந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களும்,  அதை வளர்க்க வேண்டா சந்தர்ப்பங்களும் அதிகமிருக்கக்கூடும்.  விட்டுப்பிரிவதும் மறக்கவோ மறைக்கவோ முயல்வதும் இயலாது போகக்கூடும். இதனை விட்டுப்பிரிவது அத்தனை சுலபமில்லை.  ஒற்றைப்புள்ளியில் தொடங்கி மற்றொரு ஒற்றைப்புள்ளியில் முடியும் ஒரு நாளில் இது மறையக்கூடும்.

 எத்தனையோ படிநிலைகளை கடந்துவிட்ட இந்த வாழ்க்கையில்  இந்த ஒரு படிநிலையினை ஆழமாக இல்லாமல் மேலோட்டமாகவே என்னால் எழுதமுடிந்தது.  மற்றவைகளை பற்றி ஒரு சிறிய குறிப்பினைக்கூட இங்கு எழுதமுடியவில்லை.  அவை மறைக்கப்பட்ட பக்கங்களாக மனதின் ஆழ்கிணற்றில் எங்கோ ஓர் மூளையில் ஒளிந்திருக்கக்கூடும்.  கடக்க வேண்டிய காதல் படிநிலைகளை கடக்கும் போது அவை ஒரு நாள் வெளிப்படக்கூடும்.  இதை இப்போது எழுதவிடாமல் தடுத்ததும்,  ஒரு நாள் எழுதச் சொல்லப்போவதும் இதே காதல்தான்.


அதுவரை எங்கோ தொடங்கி எங்கோ முடியும் அறியாத்தெரியா ஒன்றைப்போல் இந்தப் பயணம் தொடரும்.

                                                           

Monday, July 05, 2010

கிறுக்கல்கள்

ஆழக்குழி தோண்டி
மண்ணிலே தாழி செய்து
அடங்கிவிட்ட பிண்டத்தினை
அடைத்துவிட்டு நகர்ந்த பின்னே
அரித்து போகும் பூவுடலும்
முடிவிலா ஆசைகளும்
அதனுடனே முடிந்து போனதோ.
விட்டுப் பிரிந்த
சொந்தங்களும் கேள்வி ஏதும் கேட்பதில்லை.
மறைந்துபோன
மனிதர்களும் வந்து ஏதும் சொல்வதில்லை.

மெய் என்பது உண்டென்றால்
விட்டுப்பிரிவதும் அதுவென்றால்
விடைக்காணா கேள்விகளும்
கடைக்கோடி நட்சத்திரங்களும்
உறைவிடம் தேடி அலைகின்றதோ!

(எதுக்கு எழுதினேன்னு எனக்கே தெரியல)

நிசப்தம்

ஆராவாரங்கள் அற்றுபோனது.
கதவுகளின் உராய்வுகளில்
நிறைந்திருக்கும் ஓசைகளும்
அங்கும் இங்கும்
எங்கும் ஓடித்திரியும்
மழலைகளின் காலடிச்சத்தங்களும்
சுவர்களில் பட்டுத்தெறிக்கும்
கள்ளமில்லா கொஞ்சல்களும்
அடிக்கடி நிகழும்
மனதில் பதியா சண்டைகளும்
பின்வரும் பஞ்சாயத்துகளும்
கலைந்துகிடக்கும் கோலங்களாய்
நிறைந்துகிடக்கும் நினைவூட்டும்
இருத்தல்களும்
காணக்கிடைக்கவில்லை.