Saturday, January 15, 2011

உதிரும் சிறகுகள்

தடம் மாறி உன் வழி நடக்கையில்...
நான் தொடரும்  நிழலின் மோதல்களில்...
உன் ஸ்பரிசத்தினை உணருகின்றேன்...
நீ இல்லாமலே.....!

நிறைந்திருக்கும் துயரங்களின் போது...
உன் அறைவனப்பின் மிதப்பினை...
கடந்து செல்லும் மிகுந்து போன எச்சங்களில்...
முகர்ந்து முகர்ந்து கலைத்துப்போகிறேன்...
உன் சுவாசம் இல்லாமல்....!


உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!


சுமை கூடித்தான் போகிறது....!
இறக்கி வைக்க மனமின்றி
தூக்கிக்கொண்டே திரிகின்றேன்...
மீண்டும்....
தடம் மாறி உன் வழிநடக்கையில்...
நான் தொடரும்  நிழலின் மோதல்களில்
ஸ்பரிசத்தினை உணருகின்றேன்
நீ இல்லாமலே.....

Friday, January 07, 2011

தென்மேற்குப் பருவகாற்று



உலகத்துல இருக்குற படத்த எல்லாம் தேடித்தேடி பாக்குறப்போ நம்ம ஊர்க்காரங்க ஏன் இப்புடி எல்லாம் எடுக்கமாட்டேங்குறாங்கன்னு ஒரு ஏக்கம் இருக்கும்.  அந்த ஏக்கத்த இந்தப்படத்தோடு ஒரு பாட்டே போக்கிடுச்சு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு அம்மா பாடல்.  படம் தொடங்கும் போதே டைடில் பின்னனியில் நம்மை படத்தோட பயணிக்க வைக்குது.  ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை.   மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு நிரந்தரமான ஒர் அமைதியை பறவவிட்டு......

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.....
என்னைக் கல்லொடச்சு வளர்த்த நீயே.....
முள்ளுக்காட்டில் முளச்ச தாயே...
என்னை முள்ளுத்தைக்க விடல நீயே......

இப்புடிப்போகும் பாடல்தான் படத்தின் முடிவில் காட்சிகளின் பின்னனியில் தாக்கத்தைக் கொடுத்து மனதைக் கனத்துப்போக வைக்கின்றது.  படத்தினைப் பார்த்துவிட்டு இதை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை.   இதற்கு முன்பு கனா கண்டேன் படத்தின் முதல் பாடலில் "தாய் சொல்லும் உறவை வைத்தே உலகம் சொந்தம்" என்று ஆரம்பித்து அந்தப்பாடலின் பின்னனியில் ஒரு கதையை சொல்லி முடித்திருப்பார் இயக்குனர்.   இரண்டு பாடலுக்கும் சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள்.

இந்த மாதிர் பாடல்கள் வராதா என்று நீண்ட நாட்களாக இருந்த எனது ஏக்கத்தை தீர்த்து வைத்த தென்மேற்கு பருவக்காற்று குழுவினருக்கும் படம் முழுவதும் இரைச்சல் இல்லாத பாடல்களை தெளிவாகப் புரியும் வகையில் இசையமைத்து இசையமைப்பாளருக்கும் வாய்ப்பினைக் கொடுத்த இயக்குனருக்கும் நன்றிகள்.


இந்த நொடி வரையிலுல் காட்சிகளின் பின்னனியில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.  யாருமற்ற தனிமையில் கேட்டுப்பாருங்கள் உணர்வீர்கள் அதன் வலிமையை.