Sunday, October 24, 2010

வாழ்வே மாயம்

அது கல்லூரிக்காலம்.  புத்தகங்களை மிகத்தீவரமாக வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.  ஒரு நாள் திருச்சி தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் சு.ரா வின் ''என் உரைகள்'' மற்றும் சி.சு செல்லப்பாவின் ''வாடிவாசல்'' என இரண்டையும் தேடிக்கொண்டிருந்தேன்.  அப்பொழுதுதான் அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. "மரணம் மற்றும்" இதுதான் புத்தகத்தின் தலைப்பு.  கன்னடத்து சிறுகதைகளின் தொகுப்பு.  தமிழில் அதை நஞ்சுண்டான் மொழிப்பெயர்த்திருந்தார்.  மரணம் என்கின்ற வார்த்தையும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அர்த்தங்களும் என்று ,  மரணம் என்ற வார்த்தையில் எனக்கு பயமே உண்டானது.

 ஆனாலும் அந்தப் புத்தகத்தை வாங்கி விட்டேன்.  மரணத்தைப் பற்றியும் அதன் பின் நடக்கக்கூடியவைகளைப் பற்றியும் சொல்லிச்சென்றது.  இப்பொழுது அந்த கதைகள் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.  அதனால் ஏற்பட்ட பாதிப்பு இன்றும் தொடர்கின்றது.  ஒரு புரிதல் என்று கூட அதனைக்கூறுவேன்.  இன்ஸூரன்ஸ் துறையில் வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது உங்கள் மரணத்திற்கு பின் என்ற வார்த்தை உபயோகத்தை முடிந்த அளவிற்கு தவிர்க்க முயற்சி செய்வோம்.  இப்படி பொதுவாக நாம் அதனையும், அதனைப்பற்றி பேசுவதையும் தவிற்கவே விருப்புகின்றோம்.  நேற்று தேவா அவர்களின் ஒரு பதிவுத்தொடரை படிக்க நேர்ந்தது. வாழ்வே மாயம் என்ற தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதப்பட்ட ஒரு தொடர்.  


ஒருவரின் மரணத்தில் தொடங்கி அந்த உடல் எரியூட்டப்படுவது வரையான தன் எண்ண ஓட்டங்களை மிக எதார்த்தமாக எழுதியிருந்தார்.  சிலருடைய பதிவுகளை நாம் படிக்கத்தொடங்கிய காலகட்டதிலிருந்தே தொடர்கிறோம் அதற்கு முன் அவர் எழுதியவைகளை கண்டுகொள்வதில்லை, அதற்கான நேரமும் கிடைப்பதில்லை.  நேற்று இந்த பதிவு வாழ்வே மாயம் என் கண்ணில் பட்டது.  அதை அனைவரிடமும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை தேவா அவர்களின் அனுமதியுடன் பகிர்கின்றேன். Thursday, October 07, 2010

நிறைவு

இவர் என் வாழ்க்கையின் உள்ளே வருவார் என்று நான் நினைத்துப்பார்த்தது இல்லை.  அவரும் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்.  ஆனால் அது நடந்துவிட்டது.  அதனில் தானே வாழ்க்கையின் சுவரசியமும் அடங்கியிருக்கின்றது. அவருடைய பதிவுகளை படிக்காமலேயே தலைப்பைப் பார்த்த நொடியில் ஓட்டுப்போட்டுவிட்டேன்.  அந்த பதிவு அறை வீடு.  வோட் செய்த அடுத்த அரைமணி நேரத்தில் சாட் விண்டோவில் ஒரு அழைப்பு.  அனுமதித்துவிட்டு காத்திருந்தேன்.

அடுத்த நொடியில் வணக்கம் என்ற வாசகத்துடன், வாக்களித்ததிற்கு நன்றி என்ற தகவல் வந்தது.  நான் எந்தப்பதிவுக்கு என்றேன்.  என் பதிவுக்கு தற்பொழுதுதானே வாக்களித்தீர்கள் என்றார். மீண்டும் எந்த பதிவு என்றேன். அறைவீடு என்றார்.  நான் அப்படியா உங்கள் பதிவின் தொடுப்பை அனுப்புங்கள் என்றேன்.  பார்த்துவிட்டு உங்கள் பதிவின் தலைப்பையும், புகைப்படத்தையும்  பார்த்தேன் பிடித்திருந்தது.  அதனால் வாக்களித்தேன், ஆனால் இன்னும் படிக்கவில்லை என்றேன்.   பிறகு பரஸ்பர அறிமுகத்தில் இருவரும் ஒரே ஊர் என்று தெரிந்தது.  நான் என் தொலைப்பேசி எண்ணை அவரிடம் அளித்துவிட்டு அவருடைய எண்ணைக்கேட்டேன்.  அவர் தரவில்லை.

அடுத்த நாள் காலைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.  தன் பதிவின் முகவரியை கொடுத்து புதிய பதிவு என்றார்.  நேற்று அவருக்கு வாக்களித்த பதிவையே இன்னும் படிக்கவில்லை,  அதற்குள் மற்றொன்றா.  ஆஹா வசமா மாட்டிக்கிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.  நான் அவரிடம் இதற்கு முந்தைய பதிவையே நான் இன்னும் படிக்கவில்லையே, எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே கருத்துறையும், வாக்கும் அளிப்பேன் என்றேன்.


அலுவலக நேரத்தில் பதிவுகளை படிக்க இயலாத சமயங்களில் வாக்களித்துவிட்டு தமிழிஸின் என்னுடைய புரொபைலில் சென்று அன்று வாக்களித்த பதிவுகளை படிப்பது என் வழக்கமாக இருந்தது அப்போது.
தொடர்ந்து அவரும் அவருடையப் பதிவுக்கான தொடுப்புகளை அனுப்பிக்கொண்டே இருந்தார்.  நான் அப்பொழுது பதிவுகள் எழுதுவதை நிருத்தி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. (உருப்படியான ஒன்றையும் எழுதியதில்லை அதனால்)  பதிவுலகில் சில பல அரசியல்களும் அரங்கேறிய நேரம் அது. ஒரு சலிப்பு என்று கூட அதனை சொல்லலாம்.

ஒரு வழியாக அறைவீடு பதிவினைப் படித்தேன்.  அதில் நான் இருந்தேன்.  என் பாட்டியும் தாத்தாவும் இருந்தார்கள்.  அருமையான பதிவு அது.  எங்கள் அறைவீடு என் கண்முன் வந்துச்சென்றது.  ஒரு ஈர்ப்பு உண்டாது, அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வந்தது.  அவருடைய எழுத்துக்கள் ஒரு தேடலை நோக்கிச்செல்வதாக தோன்றியது.  அவருடைய பழைய பதிவுகளையும் படிக்கத்தொடங்கினேன்.

முதலில் முழுவதுமாக விளங்கவில்லை.  அவரது பதிவின் பயணம் நம்மை எங்கே கொண்டு போய் நிருத்தப் போகின்றது,  அதன் மையம் எங்கே என்றக் கேள்வி எங்கே என்ற தேடலின் உந்துதல் உண்டானது.  அடுத்த பதிவில் மரணத்திற்குப்பிறகான வாழ்க்கை என்ற கருவைக்கொண்டு வடித்திருந்தார்.  அந்தப்பதிவைப் போடுவதற்கு ஒரு நாள் முன், தொலைப்பேசி எண்ணைக் கேட்டார் முதல் முறையாக பேசினோம்.   அந்தப் பதிவின் கேள்வியைக்கேட்டார்.  நானும் அதற்கான பதிலை தந்துவிட்டேன்.  அடுத்த நாள் அந்தக்கேள்வியே ஒரு பதிவாக நீண்டிருந்தது.  பின்பு அந்தக் கேள்வி என்னிடம் மட்டும் கேட்கப்படவில்லை என்று தெரிந்துகொண்டேன்.

ஒன்று மட்டும் உறுதி, தன் இலக்கு என்னவென்பதை சரியாகத்தெரிந்தவனுக்கு எதுவுமே ஒரு பிரச்சனையில்லை.  இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்குப் பொருந்தும்.  தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.  தன் புரிதலை உடைக்கும் முகமாய யாராகிலும் வரமாட்டார்களா என காத்துக்கொண்டிருப்பவர். இது புகழ்ச்சியாகத்தெரிந்தால் அது உங்கள் தவறு.


 தொடர்ச்சியான உரையாடல்களில் புரிதல்களின் அடையாளமாய்    எங்கள் உரையாடல்களின் தோரணை மாறிய ஒரு பொழுதில் திட்டமிடாமல் ஒரு சந்திப்பு அவர் வீட்டினில் நடைப்பெற்றது.  அங்கிருந்து தொடங்கிய அண்ணன் என்கின்ற புதிய உறவு ஒரு நாளின் அனேக நேரங்களை அவருடன் பேசுவதிலேயே கழிந்துவிடச்செய்கின்றது.


இதற்கு பதிவுலகத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பதிவுலகத்திற்குள் வந்த நாட்களில் ஒரு சில பதிவர்களுக்கிடையேயான உரையாடல்களையும், பதிவுகளைப் படிக்கும் பொழுதும் அவர்களுக்கிடையேயான ஒரு அன்யோன்யத்தை உணர முடியும். இது எப்படி என்று வியந்து போவேன். அதை என் வாழ்விலும் சாத்தியமாக்கி உணர வைத்த பதிவுலகம் என்ற களத்திற்கு நன்றிகள்.

  அண்ணனுக்கு இன்றைக்கு பிறந்த நாளாம்,  ஒரு வாரமாக எனக்கு நியாபக அஞ்சல்கள் வந்துகொண்டேயிருக்கின்றது.  பிறந்த நாளை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  எப்பொழுதும் அதையும் வருடத்தின் ஒரு நாளாகவே என்னளவில் எடுத்துக்கொள்வேன்.  என் பிறந்த தினத்தையே மறந்துவிடும் அளவிற்கே என் ஆர்வம் இருக்கும். ஆனால் இன்று ஓர் மாற்றம்.

தேவா அண்ணா, பிறந்தநாள் வாழ்த்துகள்.

Wednesday, October 06, 2010

தோன்றிக்கொண்டிருப்பவை

ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு யுகங்களாய் தொடர்ந்து
கொண்டிருக்கும் இப்பூகோளத்தின் நகர்தலில்
நில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் நினைவுகளை
யாதோரு வலியுமில்லாமல் எதிர்வரும் முகங்களில்
திணிக்க எண்ணுகிறேன்.....

எதிரெதிரே வரும் முகங்களில்
மாறிமாறி நிகழும் மோதல்களில்
வீரியமற்ற என்னின் நினைவுகளும் மோதி
மோதித் திரும்புகின்றன புதிய நிறங்களுடன்.....

சில நேரங்களில் அதன் இயல்புத்தன்மைகள்
பஞ்சுப் பொதிகளின் தன்மையை ஒத்திருக்கின்றது
இலக்கில்லாமல் சிறகுகளின்றிப் பறக்கச் செய்யும்
அதனில் சிக்கிக்கொண்டு நான் இளகுவதை உணர்கிறேன்...

வீடு திரும்பலில் இருக்கும் இனிமையை தொலைத்துவிட்ட
தனிமையான இந்நாட்களில்
எங்கும் பறந்து நிறைந்து இறைந்து கிடக்கும்
பின்னிப்பிணைந்த அதன் தொடர்புகளில்
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக தாவிக்கொண்டு
வேர் நோக்கிய அதனின் பயணங்களில்
தொலைந்து கொண்டேயிருக்கின்றன என்னின் தூங்கா இரவுகள்......