Sunday, January 31, 2010

கப்சோகண்ட்

சென்ற பதிவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அது தொடர்பான முழுதகவல்களும் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கிறேன்.

இந்த பதிவு ஒரு விளிப்புணர்வுக்காக எழுதுகிறேன்.  இதனைப் பற்றி சிலருக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடியா வாய்ப்பு இருக்கின்றது.  தொலைக்காட்சிகளில் ஒரு பற்பசை விளம்பரத்தில், அம்மா தன்னுடைய மகனை மறைத்து மறைத்துக் கூட்டிக்கொண்டுப் போவார். அப்போது அவரிடம் 'உங்கள் பையன் தேர்வில் தோற்றுபோய்விட்டானா', அதற்கு அந்தம்மா 'என் பையன் தோற்றுப்போகல எங்க பற்பசைதான் தோற்றுவிட்டது' என்று பதில்சொல்வார்கள். 
கப்சோகண்ட் உபயோகப்படுத்துங்க என்று விளம்பரம் முடியும்.

இங்கே விளம்பரத்தினை பற்றி நான் விமர்சனம் செய்யப்போவதில்லை.  நம்ம கப்சோகண்ட பற்றி நான் அனுபவ ரீதியா உணர்ந்த ஒரு விசயத்தினை பகிர இருக்கின்றேன்.  இது நடந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.  அப்போ வீட்டிலே கப்சோகண்ட்தான் பயன்படுத்திகொண்டு இருந்தோம்.  பற்கள் நல்ல பிளிச்சின் பவுடர் போட்டு தேய்ச்ச மாதிரி நல்லா பளிச்சென்று இருக்கும். ஆனால் இரண்டோ அல்லது முன்றோ மாதங்களில் பற்களில் இரத்தக்கசிவு வர ஆரம்பித்தது.  மருத்துவரிடம் சென்ற போது அவர்  மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிட்டார்.  

ஆனால் இரத்தக்கசிவு நிற்கவில்லை.  பற்கள் கூச ஆரம்பித்தது. 
எனக்குமட்டுமல்லாமல் வீட்டில் அம்மாவுக்கும் இதே பிரச்சினை.  பின்பு என் தந்தை எல்லாவற்றிற்கும் காரணம் கப்சோடண்ட் என்று கூறி அதை மாற்றிவிட்டார்.  பின்பு கிக்கோதான் இன்று வரையிலும்.  அதை நிறுத்தி ஒரு வாரத்துக்குள்ளாகவே மாற்றம் தெரிந்தது.  பின்பு முழுவதுமாக நின்று விட்டது.
இதை ஏன் சொல்கின்றேன் என்றால், இங்கு அமீரகத்தில்
கப்சோடெண்ட்டின் குறிப்பிட்ட  பிராண்ட் தடைசெய்யப்பட்டுள்ளது.
அறையில் உள்ளவர்கள் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது என்னுடையஅனுபவத்தையும் கப்சோடெண்டையும் பற்றி கூறினேன். 
பெரும்பாலானோர்  இரத்தக்கசிவு இருப்பதாக கூறினார்கள். 

இதை என் நண்பனிடம் கூறிய பொழுது அவன் 'கிக்கோவா அது ரொம்ப சப்புன்னுல்ல இருக்கும் '  என்றான்.  உங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் இங்கே பகிருங்கள்.

Thursday, January 28, 2010

அமீரகத்தில் இந்தியரைக்கொன்ற இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.  கொல்லப்பட்டவரும் தண்டனைக்குள்ளானவர்களும் தமிழ்நாட்டில் தஞ்சாவூரைச்சேர்ந்தவர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் முழு விவரங்களும் கொடுக்கப்படவில்லை.  தீர்ப்பின் விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிகமான விவரங்கள் பின்பு பதியப்படும்.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?section=theuae&xfile=data/theuae/2010/january/theuae_january742.xml

Tuesday, January 26, 2010

இது நம்ம ஆளு-2

இதுவும் நம்மாள பத்தின கதைதான்.  இதுக்கு காரணம் நம்மாளு செல்போன்ல பேசிக்கிட்டிருக்கறப்போ, ஹாரன் அடிச்ச அந்த பஸ்காரனத்தான் சொல்லமுடியும்.

அண்ணனுக்கு கலயாணங்குறதால நம்மாளு துபாய்க்கு வந்து வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்லயே 15 நாள் விடுமுறைல இந்தியாவுக்கு வந்திருந்தாரு. கல்யாணம் முடிஞ்சு ஊருக்கு கிளம்புறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி திருச்சி பால்பண்ணை ரவுண்டான கிட்ட போய்க்கிட்டுருக்கிறப்போ செல்போன் அடிச்சுது, எடுத்து பேசிக்கிட்டு இருக்குறப்போ மின்னல்னு பேர் போட்ட தனியார் பஸ் ஒன்னு மின்னல் வேகத்துல இவர கடந்து போச்சு.  புரிஞ்சும் புரியாம இவரும் ஓகே ஓகேன்னு தலையாட்டிட்டு வச்சுட்டாரு.  மனசுக்குள்ள ஒரே குழப்பம்,  துவரம் பருப்பு ஓக்கே,  ஆனா குளுக்கோஸ் கொஞ்சம் இடிக்குதே.


ஏன் துபைல குளுக்கோஸ் கிடைக்காதா.  துவரம் பருப்பு வாங்கியாச்சு, குளுக்கோஸ வாங்கலாமா வேண்டாமா? சரி ஒரு தடவ போன் பண்ணி கேட்டுருவோம். " நீங்கள் டையல் செய்த எண் switch off  செய்யப்பட்டுள்ளது"
ஆனது ஆகட்டும்,  இன்னைக்கு ராத்திரி பொட்டிய கட்டனும். இப்பவே ரொம்ப நெரமாகிடுச்சுன்னு நம்மாளு துவரம் பருப்பையும் குளுக்கோஸையும் வாங்கி பொட்டியையும் கட்டிட்டாரு.  ஆனா அவரு மனசுக்குள்ள குளுக்கோஸ் மேட்டரு மட்டும் ஓடிக்கிட்டே இருக்கு.


அநேகமா இந்தியாலேர்ந்து துபைக்கு குளுக்கோஸ் வாங்கிட்டுப்போனது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன்.
ஒரு வழியா துபைல இறங்கி பொட்டிய பிரிச்சு நம்மாளு யாராருக்கு என்னென்ன கொடுக்கனுமோ அதயெல்லாத்தையும் கொடுத்துட்டு குளுக்கோஸையும்,  துவரம் பருப்பையும்  கேட்டவருக்கிட்ட கொடுத்தாரு.  அவருக்கு ஒன்னும் புரியல.  துவரம் பருப்பு ஒகே, ஆனா குளுக்கோஸ் இடிக்குதேன்னு அவரு மனசுல ஓடுறத நம்மாளு அவரு முகத்துல படமா பாக்குறாரு.

கொஞ்ச நேரத்துல கூட்டம் கூடிடுச்சு.  எல்லோரும் சிரிக்குறாய்ங்க
சிரிக்குறாய்ங்க அடக்க முடியாம சிரிக்குறாய்ங்க.  கூட சேர்ந்து நம்மாளும்
சிரிக்குறாரு. அவரு என்ன செய்வாறு இதெல்லாம் தெரிஞ்சா நடக்குது,  அவங்ககிட்ட போய் இதுக்குக்காரணம் நா இல்ல அந்த பஸ்காரந்தான்னு
சொல்லவா முடியும்.  அப்புடியே சொன்னாலும் நம்பவா போறாங்கன்னு அந்த உண்மைய அப்புடியே மூடி மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டாறு.  அந்த ரணத்த எங்கிட்ட சொன்னதால அது என்ன தாக்கிடுமோன்னு பயந்து இங்க கொட்டிட்டேன்.  நீங்க யாரும் டென்ஷ்ன் ஆகாதீங்க.

அட எதுக்கு சிரிச்சாங்கன்னு சொல்லவேயில்லன்னு கேக்குறீங்களா,  ஒன்னுமில்ல குளுக்கோஸுக்கு பதிலா அங்க குல்கந்து இருந்திருக்கனும் அவ்வளோதான்.

Saturday, January 23, 2010

நிகர்நிலை பல்கலை கழகமும் - நானும்

நிகர்நிலை பல்கலை கழகங்களின் அங்கிகாரம் ரத்து- மாணவர்கள் போராட்டம். இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து இந்த பிரச்சனை தேசிய அளவில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே இந்த வருசம் Autonomous ஆகிடும்னு  கல்லூரில நுழையும் போதே காதுக்கு செய்தி வந்து சேர்ந்தது. அப்படி மட்டும் நடக்கக்கூடாது என்று  மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். ஏன்னு கேக்குறீங்களா?  அத அப்புறமா சொல்லுறேன்.

முதல் நாள் வகுப்பில் வந்த பேராசிரியரும் அதைப்பற்றியே பேசினார்.  Autonomous அந்தஸ்தின் முலம் அந்த course, இந்த course என்று அவருக்கு தெரிந்த அந்த கல்லூரியில் இல்லாத  பட்டப்படிப்புகளை பட்டியலிட்டு,  புதிதாக காலத்துக்கு ஏற்ற மாதிரியான படிப்புகளையும்,  .
பாடத்திட்டங்களையும் நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.  இது நல்ல விசயம் என்ற வகையில் மாணவர்களும் மிகுந்த
ஆர்வத்துடன் கேட்டுகொண்டார்கள்.
முதல் செமஸ்டர் முடிந்து முடிவுகளும் வெளியானது.  முதல் ஆறு மாதத்ததில் நாங்க செய்த சேட்டைகளை பேராசிரியர்கள் பொறுத்துக்கொண்டார்கள்.  சிலபேர் தாங்க முடியாமல் இன்னும் ஆறு மாதம்தான் அதற்குள் கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிவிடும் அதன்பிறகு இவர்களை பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தனர்.  ஆனால் அதிர்ஷ்ட வசமா நாங்கள் சேர்ந்த வருடம் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.


முதல் செமஸ்டர் முடிந்து இனிமேல் பிரச்சனை இல்லையென்ற நிலையில் அடுத்து ஒரு செய்தி, இடியா  மாணவர்கள் மத்தியில் புயலாக கிளம்பியது, அடுத்த செமஸ்டருக்குள் அனுமதி கிடைத்துவிட்டால எல்லோரையும்   Autonomous க்கு மாற்றிவிடுவார்கள் என்று.  அந்த ஆறு மாதமும் நான் பயந்துகொண்டேயிருந்தேன்.  ஆனால் ஆறு மாதத்தில் இரண்டாவது செமஸ்டரும் முடிந்து முடிவுகளும் வெளியானது. 
இனிப் பிரச்சனையில்லை.

பேராசிரியர்கள் ஒருசிலருக்கு இவர்களை அடக்க முடியலவில்லை எங்கின்ற குறை.  நினைவு  கைகூடாது போன ஏமாற்றம்.  அவங்க கையிலிருந்த ஒரே ஒரு துருப்புச்சீட்டு 'பிராக்டிகல்'  எங்கின்ற செய்முறைத்தேர்வு.  அதைவைத்து எங்களை பயமுறுத்திப்பார்த்தார்கள்.  ஆனால் அது அவர்கள் நினைத்த  அளவிற்கு பயம்பெறவில்லை.

Autonomous அந்தஸ்த்து வழங்குவதற்கு முன் தில்லியிலிருந்து ஒரு குழு வந்து கல்லூரியில் மாணவர்களிடம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களின்
கருத்தையும் கேட்டனர்.  பேராசிரியர்களிடமும் கலந்தாய்வு நடைபெற்றது.   இப்போதைக்கு இன்றைய காலகட்டதுக்கு இந்த மாதிரியான பயிற்சிகளும்,  இந்த மாதிரியான பாடத்திட்டங்களும், இந்த மாதிரியான புதிய படிப்புகளும் என்று  அவர்கள் செய்யப்போகின்ற மாற்றங்களைப் பற்றி விவரித்தார்கள்.  இதற்குப்பிறகு தில்லிக்காரர்கள் ஒரு வழியாக அனுமதியை கொடுத்தார்கள்.  அதனால்ஒருசில நன்மைகள் கிடைசத்தது.  கல்லூரிக்கட்டணம் குறைக்கப்பட்டது,
புதிதாக ஒரு சில பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் மாணவர்களின் சுதந்திரம் பறிபோனது உண்மை.   நாங்கள் தப்பித்தாலும் எங்களுக்கு அடுத்து சேர்ந்த மாணவர்கள் மாட்டிக்கொண்டார்கள். ஏன் மாட்டிக்கொண்டார்கள் என்றால், எங்களுக்கு கல்லூரியாக இருந்தது அவர்களுக்குப் பள்ளிக்கூடமாகக்கூட இல்லாமல் டியுசன் செண்டராக மாறிப்போனது.

Friday, January 22, 2010

ஆயிரத்தில் 1ருவன்

முதல் பத்து நிமிடப் படத்தை பார்க்கலன்னாலும்,  எனக்கு எந்த குழப்பமும் வரல.  ஏன்னா நம்ம பதிவர்கள்தான் விமர்சனம்னு சொல்லி முழுசா கதைய பிரிச்சு மேஞ்சுட்டாங்களே. 

காதல்  காட்சிகளே இல்லாத ஒரு படம்.  குத்துப்பாட்டு, கானாப்பாட்டுங்குற பேர்ல காத ரணமாக்குற எந்தவிதமான் இம்சைகளும் இல்ல.

படத்துல நாயகியும் கிடையாது நாயகனும் கிடையாது. 

இடைவேளைக்கு முன்னாடி வரைக்கும் என் பக்கத்துல இருந்தவருக்கு சந்தேகமே வரல.  ஆனா இரண்டாவது பாதியில அவருக்கு வர்ற சந்தேகத்த அப்பப்போ கிளியர் பண்ணவேண்டியாத போச்சு.  இத ஏன் சொல்லுறேன்னா ரோம்ப போர் அடிச்சா குருவிய தினமும் பார்க்குற ஆளு அவரு.

இடைவேளைக்கு பிறகான கதையின் போக்கு தமிழுக்கு ரொம்ப புதுசா இருக்குமோன்னு தோனுது.  அப்புறம் நிறைய பேர் சொன்ன மாதிரி இரண்டாவது பாதில யாருக்கும் புரியாத தமிழ யாருமே பேசல.  ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கலாம் ஏன்னா அவங்க பேசுறது தமிழத்தான். 

பிரகாஷ் தன்னால எவ்வளவு சிறப்பா இசை அமைக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். ஆனா பாடல்கள் படத்தோட ஒட்டலயோன்னு தோணுது.  முக்கியமா ஓ ஈசா பாடல்.

கலை மற்றும் ஒளிப்பதிவு  இரண்டு துறையைச் சேர்ந்தவங்களுக்கும் இயக்குனர் நிறைய வேலைய கொடுத்திருக்கார்.   

மற்றபடி படத்துல நடிச்சவங்க எல்லோருமே தங்களுடைய சிறப்பான பங்களிப்பத்தந்திருக்காங்க.

திரைக்கதைய இன்னும் சிறப்பா வடிவமைச்சிருக்கலாம்.  முதல் முறை பாக்குறப்போ சிலருக்கு படம் புரியாம போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.

முழுசா மசாலாவ கலக்காம கொஞ்சமா சேர்த்து தமிழுக்கு ஒரு புது திரைப்படத்த கொடுக்க செல்வா முயற்சி பண்ணியிருக்கார். 

அமீரகத்துல இன்னைக்குத்தான் வெளியாச்சு. பதிவர்களோட விமர்சனத்துல படிச்ச நிறைய காட்சிகளுக்கு கத்திரிய போட்டுட்டாங்க போல. ஊருக்கு வர்றப்போ டிவிடில ஒரு முறை பார்க்கனும்.




மொத்தத்துல ஆயிரத்தில் ஒருவன் தமிழுக்கு புதுசு.  ஆனா அந்த அனுபவம் முழுசா கிடைக்காம போறதுதான் பழசு.

Thursday, January 14, 2010

இது நம்ம ஆளு-அச்சா அச்சா பகூத் அச்சா

நம்மாளூ ரொம்ப நல்லவரு யாரு மனசும் புண்படக்கூடாதுங்குற நல்ல எண்ணத்துல அவரு செய்யுற ஒரு சில காரியம் சிலர புண்படுத்திடுது. அதுக்கு அவரு காரணம் இல்லன்னாலும், அதுக்கு அவருதான் காரணம்னு அவருக்கு தெரியும்.

நம்மாளுக்கு ஆங்கிலத்துல இருக்குற புலம தமிழ்ல கூட கிடையாது.  இலக்கணச் சுத்தமா பேசுவாறு ஆங்கிலத்துல.  வேலைக்குச் சேர்ந்தப் புதுசுல,  எங்கன்னா துபாய்ல, ஏறகனவே ஹிந்திகாரங்க தொல்லைய தாங்க முடியாது இப்போ இந்த அரபிங்களும் நம்மாளுங்ககிட்ட ஹிந்தி பேசி வெந்த புண்ணுல வேல பாய்ச்ச ஆரம்பிச்சுட்டாங்க.

நம்மாளுக்கு வந்த புதுசுல இதெல்லாம் தெரியல.  ஆனா போகப்போக அச்சா அச்சான்னு ஆரம்பிச்சு சொச்சமா ஹிந்திய கத்துக்கிட்டாறு.
ஆனா அச்சா அச்சா பகூத்தச்சாங்குற வார்த்தை இப்புடி கால வாறிவிடும்னு அவருக்கு முன்னமே தெரியாம போயிடுச்சு.


ஒரு நாள் வேலையில்லா சமயத்துல கடையோட வாட்சுமேன் நம்மாளுக்கிட்ட பேசிக்கிட்டிருந்தாப்ல,  ஹிந்தில பேசுனதால நம்மாளுக்கு முழுசாப் புரியலன்னாலும் புரிஞ்சா மாதிரி நல்லா தலைய ஆட்டி ஆட்டி கேட்டுகிட்டாரு, கூட அச்சாவையும் அங்க அங்க சேர்த்துக்கிட்டாரு.  வாட்ச்மேன் முகம்மாறுனதையும்,
கண்கள் கலங்கிப்போனதையும்  நம்மாளு கவனிக்கவே இல்ல.
அவன் பேசுறத நிறுத்தின உடனே நம்மாளு அச்சா, பகூத்தச்சான்னாறு. 

இப்போ நம்மாள அவன் அடிக்காதது ஒன்னுதான் குறை.

 " நான் எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ரொம்ப சீர்யஸாயிருக்காருன்னு சொல்லிகிட்டு இருக்கேன் நீங்க அச்சா அச்சா பகூத்தச்சாங்குறீங்க' ன்னு அவனுக்கு தெரிஞ்ச ஹிந்திங்கிலிஸ்ல சொல்ல.  நம்மாளு பதறியே போனாரு.  அதுக்கப்புறம் அவன் சமாதானம் ஆனாலும் நம்மாளுக்கு ரெண்டு நாள் தூக்கம் போனது வேற கதை.

அதுக்கப்புறம் அச்சாங்குற வார்த்தையும், பகூத்தச்சாங்குற வார்த்தையையும் நம்மாளு சொல்லுறதேயில்ல.  இப்போ அவரு ஹிந்தில சொல்லுற ஒரே வார்த்த 'ஹிந்தி மாலும் நஹீ'.