Monday, November 21, 2011

பிதற்றல்கள்

தூக்கம் வரா இரவுகளை
சிறு துக்கத்திற்குப் பின் தந்தவள் நீ.

எதிர்மறை அர்த்தங்களில்
சிந்திச் சிதறும் எண்ணங்கள்
முற்றுப் புள்ளிக்குப் பின் ஒற்றை வார்த்தையில்
மொத்தமாய் சேரக்கூடும்.

மூடிவைத்த காற்றுப்பைக்குள்
அழுத்தி அழுத்தி நிறப்பப்பட்ட
என் சுவாசத்தினுள்
எதை கலந்திருப்பேன் என்று
தெரிந்து கொள்ளாமலா போய்விடுவாய்...!

தடுமாறாமல் தள்ளாடுகிறேன்
காதல் கொண்டு நிமிர்ந்திடவே
உன் கரம் பற்றி நடந்திடவே
நீளம் பாரமல் எழுதிச் செல்லவே
என் விரல்கள் துடிக்கிறதே.

கண்மூடும் தருணங்களில் நிழலாடிய பல நூறு பிம்பங்களில்
எல்லாம் கரைந்து நீ மட்டும் தனித்து நிற்கும் விந்தை ஏனடி!!!
நீதான் எனக்கானவளோ!!!!
நிதமும் எண்ணி மகிழ்கிறேன்...............!

ஒரு வித தடுமாறிய மன நிலையில் எழுதிய ஒன்று. இருக்கட்டும் என்று ஏற்றி வைக்கின்றேன்.

Monday, May 16, 2011

பொதிகள்

அலை மோதும் நினைவுகளில் தேங்கிக்கிடக்கின்றதோ
உனக்கான என் கவிதாஞ்சலிகள்...
மிச்சமிருக்கும் அத்தனையும் வெற்றுத் தாள்களாய் போய்விடட்டும்..
ஒற்றைபுள்ளிகளில் சேதிகள் கேட்கின்றேன்...
அவிழும் முடிச்சுகளில் நிறைந்திருக்கின்றது காதல்...

படிநிலைகளை சில நேரங்களில் ஒரே பாய்ச்சலில் கடக்கின்றேன்..
மெத்தென விழும் அடிகளில் தெரிக்கின்றன பஞ்சு பொதிகள்..
நாசியில் ஏறும் துகள்களில் வாசம் தேடுகின்றேன்...
சில, காதோரம் வந்து கவனமாய் திரும்பிச்செல்கின்றது...

மின்மினிகள் நிலைகொள்ளாமல் கண்சிமிட்டுகின்றன
அங்கும் காதல் கதைகள் கதைக்கப்படுமோ!
ஒன்று மட்டும் ஓடித்திரிகின்றதே கண்சிமிட்டாமல்
அது ஆணா? பெண்ணா?
ஆண் என்றால் சுலபம், பெண் என்றால்...... விடை காணாக் கேள்விதான்.

Sunday, May 15, 2011

மிச்சம் ஏதுமிருப்பின்

நிழல் தேடி அலைகின்றது
எதிர்வரும் வரைகோடுகளில்
எனக்கான எல்லைகள் குறிக்கப்படக்கூடும்..

மெதுவாகவே நகருகின்றன பொழுதுகள்..
நேற்றைய வெக்கையோடு
இன்றைய வெக்கையும் சேர்ந்துகொண்டது..

திசைமாறிவிட்ட காற்றைடைத்த பாலிதீன் பைகள்
எதை நோக்கி பறக்கின்றதோ!!!
எதன் இலக்குகலிளோ சிக்கிக்கொள்ளக்கூடும்...

சட்டை பொத்தான்களில் தன்னை மறைத்துக்கொள்ளப்பார்க்கின்றது..
உள்ளிருக்கும் அதனதன் ஆசைகளை...
குளியலரையில் கரைந்துவிடக்கூடும்..

மிச்சம் ஏதுமிருப்பின் பின்னால் வரட்டும்

Saturday, February 26, 2011

அவிழ்க்காதவை

ஊடருக்கும் ஒப்புமையில்லா உருவமது
குழலினது குழைவல்லாது கலைந்திருக்கும்
அற்றவையின் ஆழத்திலே ஒழிந்திருக்கும்
பிரிதோர் கூடலில் புரிந்திருக்கும்..
அரிதாரம் கொண்டு அறிவை பெருக்கி
சரிதானொரு விடை கொண்டு
கண்டு உளம் நகிழ மனம் மகிழ 
அகம் விடுத்து புறம் நோக்கி பின் அகம் சேரும். 


Monday, February 21, 2011

கூடிக்கழித்த பொழுதுகள்

உதட்டோரம் வழியும் பிரியங்களை..
எதை கொண்டு துடைக்கப்போகிறாய்..
விழியில் தொடங்கி விழியில் முடியும் பார்வை கொண்டு..
வழிநடத்திச்சென்றாயே விழிப்பெண்ணே...

பிரகாசமான இரவுகளின் துவக்க விழா...
நிலவுகளும் நட்சத்திரங்களும் விழித்திருக்க..
எனக்குள் உன்னையேற்றி வைத்து..
விழிக்குள் விழிமூடி இமைக்குள் பேசிக்கொண்டோம்...

காத்திருப்புகளை எனக்கான கவிதைகளாக மாற்றினாயே..
கவிதைக்காணவே காத்திருப்புகள் தொடர்கதையானதோ...
(என்) கவிதையின் தொடக்கம் எது வென்று அறிவேனடி..
பிரியத்தின் கவிதைகாலமது...
.
விரல் பிடித்து நடக்கவே உரசல்களின் வழி அழைத்தேன்..
சட்டென கரம் பிடித்து கன்னத்தில் இச்சென முத்தம் பதித்தாய்..
திகைத்துப்போனேனடி நித்தம் உன் செய்கைகளால்..
கள்ளமில்லா கள்ளி அவள்..

"நீ ஒரு குழந்தடா"
இதை நீ சொல்லாத நாளில்லை..
நானும் காரணம் கேட்டதில்லை..

முடிக்கவியலாமல் தடுமாறுகிறேன்..
எங்கிருக்கிறாய் நீ..
வா பெண்ணே...
உன் கரம்பற்றி நடக்கவே
நாம் கடந்து சென்ற வழிப்பாதைகள்
காத்திருக்கின்றன..  

Saturday, January 15, 2011

உதிரும் சிறகுகள்

தடம் மாறி உன் வழி நடக்கையில்...
நான் தொடரும்  நிழலின் மோதல்களில்...
உன் ஸ்பரிசத்தினை உணருகின்றேன்...
நீ இல்லாமலே.....!

நிறைந்திருக்கும் துயரங்களின் போது...
உன் அறைவனப்பின் மிதப்பினை...
கடந்து செல்லும் மிகுந்து போன எச்சங்களில்...
முகர்ந்து முகர்ந்து கலைத்துப்போகிறேன்...
உன் சுவாசம் இல்லாமல்....!


உன் நினைவுகளுக்கு சிறகுகள் வரைந்து...
கட்டற்ற காலப்பெட்டகத்தின் திக்கற்ற வெளியினில்...
பறக்கவிட நினைக்கையில்...
விடுமுன்னே உதிரத்தொடங்கி விடுகிறதே சிறகுகள்...!


சுமை கூடித்தான் போகிறது....!
இறக்கி வைக்க மனமின்றி
தூக்கிக்கொண்டே திரிகின்றேன்...
மீண்டும்....
தடம் மாறி உன் வழிநடக்கையில்...
நான் தொடரும்  நிழலின் மோதல்களில்
ஸ்பரிசத்தினை உணருகின்றேன்
நீ இல்லாமலே.....

Friday, January 07, 2011

தென்மேற்குப் பருவகாற்றுஉலகத்துல இருக்குற படத்த எல்லாம் தேடித்தேடி பாக்குறப்போ நம்ம ஊர்க்காரங்க ஏன் இப்புடி எல்லாம் எடுக்கமாட்டேங்குறாங்கன்னு ஒரு ஏக்கம் இருக்கும்.  அந்த ஏக்கத்த இந்தப்படத்தோடு ஒரு பாட்டே போக்கிடுச்சு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு அம்மா பாடல்.  படம் தொடங்கும் போதே டைடில் பின்னனியில் நம்மை படத்தோட பயணிக்க வைக்குது.  ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை.   மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு நிரந்தரமான ஒர் அமைதியை பறவவிட்டு......

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.....
என்னைக் கல்லொடச்சு வளர்த்த நீயே.....
முள்ளுக்காட்டில் முளச்ச தாயே...
என்னை முள்ளுத்தைக்க விடல நீயே......

இப்புடிப்போகும் பாடல்தான் படத்தின் முடிவில் காட்சிகளின் பின்னனியில் தாக்கத்தைக் கொடுத்து மனதைக் கனத்துப்போக வைக்கின்றது.  படத்தினைப் பார்த்துவிட்டு இதை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை.   இதற்கு முன்பு கனா கண்டேன் படத்தின் முதல் பாடலில் "தாய் சொல்லும் உறவை வைத்தே உலகம் சொந்தம்" என்று ஆரம்பித்து அந்தப்பாடலின் பின்னனியில் ஒரு கதையை சொல்லி முடித்திருப்பார் இயக்குனர்.   இரண்டு பாடலுக்கும் சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள்.

இந்த மாதிர் பாடல்கள் வராதா என்று நீண்ட நாட்களாக இருந்த எனது ஏக்கத்தை தீர்த்து வைத்த தென்மேற்கு பருவக்காற்று குழுவினருக்கும் படம் முழுவதும் இரைச்சல் இல்லாத பாடல்களை தெளிவாகப் புரியும் வகையில் இசையமைத்து இசையமைப்பாளருக்கும் வாய்ப்பினைக் கொடுத்த இயக்குனருக்கும் நன்றிகள்.


இந்த நொடி வரையிலுல் காட்சிகளின் பின்னனியில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.  யாருமற்ற தனிமையில் கேட்டுப்பாருங்கள் உணர்வீர்கள் அதன் வலிமையை.