Wednesday, June 30, 2010

யாருங்க போராடுறது

ஒன்ன மறக்கனும்னா அங்கிருந்து நகர்ந்துடுன்னு சொல்வாங்க.  நம்ம தலைவர்கள் அதனை செம்மையாக செய்யுறாங்க.  கறைய கழுவுவதற்கோ இல்ல மறைக்குதற்கோ ஒரு மாநாட்ட கோடில கொட்டி  நடத்தி முடிச்சாச்சுங்க.   தப்ப தப்புன்னு சொல்ல வேண்டிய எதிர்கட்சிகளோ தெருக்கட்சிகள் போல ஆகிப்போச்சுங்க.

இப்போ அடுத்ததாக ஒரு குண்டு(பெட்ரோல்,கேஸ் விலை உயர்வுதாங்க) நம்ம அட்டாக் பாண்டிக்கிட்டயிருந்து  வந்திருக்குங்க. அதாங்க நம்ம வச்ச நமக்கான நம்ம மத்திய அரசு. இந்தியா முழுசுக்கும் யாருக்கும் வஞ்சனையேயில்லாம எல்லாத்துக்கு மேலயும் போட்டுடுச்சுங்க.  இதுல ஒரு கோஷ்டிக்கு ஒரு பிரச்சனயும் இல்லங்க. யாரு எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு ஒரு .......இல்லங்க.  மிச்சமிருக்குறது இரண்டு கோஷ்டிங்க.  ஒருத்தருக்கு தானே கெட்டாலும் ஏன் கேக்குறதுக்கு தெம்பே இல்லங்க.  இன்னொருத்தர்,  இவங்க ரொம்ப பேருங்க. எண்ணுனா கோடில இருப்பாங்க.  எதையும் சீக்கிறமா ஜீரணம் செய்ற சக்தி இவங்கக்கிட்ட ரொம்ப அதிகமா இருக்குறதால இந்த விசயத்த மறந்து மன்னிச்சு டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்ணீர் விடுற புரட்சிநாயகியப்பார்த்து தானும் கண்ணீர் விட்டு நாளைக்கு என்னாகுமோங்குற  பயத்துல காத்துக்கிட்டு இருப்பாங்க.


இப்போ இந்த அணுகுண்டை எதிர்த்து தொடர்ந்து போரடப்போறவங்க யாருங்க? அவங்க எங்கயிருக்காங்க?  எங்கிருந்து வரப்போறாங்க?
அப்புடியே போரடுனாலும் விட கிடைக்குமா? இல்ல விடிவு தான் கிடைக்குமா?

இந்த கேள்வி என் மண்டையப்போட்டு குடையுதுங்க.  கம்பியூட்டரு முன்னாடி உட்கார்ந்துகிட்டு நல்லா கேள்வி மட்டும் கேட்கத்தெரியுதுள்ள,
நீ இறங்கி போறடுன்னு மனசு சொல்லுதுங்க.

ஆனா பாருங்க இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு வரலாற்றுக்கதைய சொல்லவேண்டியிருக்கு.  அது என்னனா சுதந்துரத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல ஒருத்தரு கொடிய புடிச்சிக்கிட்டு வீட்லேர்ந்து கிளம்பி தெருமுனைக்கு போனவரு, கால்ல கல்லு குத்துதனால அப்புடியே திரும்பிட்டாருங்க. மறுபடியும் ஒரு முறை இதே மாதிரி கிளம்புனாருங்க.  அன்னைக்கும் திரும்பி வந்துட்டாருங்க.  ஏன்னூ கேக்குறீங்களா? அன்னைக்கு ஆகஸ்ட் 16 ,1947.

இப்புடிதாங்க அனனைகிருந்தே இந்த நாட்டைக்காப்பற்ற புறப்பட்டு இன்னைவரைக்கும் காப்பத்திக்கிட்டே இருக்கோம்.  என் உயிரு தமிழுக்கு,  உடலு இந்த மண்ணுக்குங்க.  இப்போ பிரச்சனை என்னன்னா ' எனக்கு ரொம்பா முக்கியமான வேற வேலையிருக்குங்க, போரட்டத்துக்கு என்னோட முழு ஆதரவு உண்டுங்க.  என் வேலை முடிஞ்சதும் நிச்சயமா உங்க போராட்டத்துல கலந்துக்குவேங்க.'

சரிங்க, இப்போ யாருங்க போராட்டத்த ஆரம்பிக்கப்போறீங்க.  பந்தல் போடுறது,
டீ, காபி,டிபன் இப்புடி போராட்டத்துக்கு தேவையான அனைத்துவகையான தேவைகளுக்கும் குறைந்த செலவுல அனைத்தையும் நாங்க செஞ்சுகொடுப்போங்க. எனக்கு நீங்க எப்போவேனா கால் பண்ணலாங்க. 
24 ஹவர் சரிவீஸ்ங்க.

Tuesday, June 29, 2010

போர்

இருள் சூழ்ந்துவிட்டது
ஆனால்
இது இரவும் அல்ல
மழைப்பெய்வதற்காகவும் அல்ல
வெப்பமும் குறைவதில்லை
வெக்கையும் குறைவதில்லை
உக்கிரத்தின் உச்சதினை
எட்டி
அடங்கிவிட்டது.
பின்னும்
எட்டி எட்டி உதைக்கின்றது
ஓட ஓட விரட்டுகின்றது
எத்திசை நோக்கிலும்
எங்கும் காணவில்லை
ஏதுமற்ற வெளியே தெரிகின்றது.
அடைந்தது யாதென்று
இந்த ஆறறிவிற்கு புரியவில்லை
விடியல் வரும் நாளும் தெரியவில்லை.

Saturday, June 26, 2010

கண்ணீர்

அசைந்து கொண்டிருக்கும்
அனைத்திலிருந்தும்
அறிந்து கொள்ளலாம்
அதனதன் இருப்பை.
செயலற்றுகிடக்கும்
அற்றுப்போன ஆதரங்களை
ஆழத்தோண்டி புதைத்துவிட்டு
கசியும் கரிக்கும் நீர் துளிகளை
செயற்கையாய்
துடைக்கும் அந்த கைகளுக்கு
என்று தெரியுமோ
அது கண்ணீர் என்று.

வார்த்தைகளற்ற ஒரு தருணத்தில்

முன் பின் என
கலைத்து கலைந்துவிட்ட
முற்றுபெறாத ஓவியம் ஒன்றில்
வெடித்துச்சிதறும் வண்ணங்களில்
வழிந்துகொண்டிருக்கும் விருப்பங்களை
அடுக்கடுக்காய்
மேல் கீழாய்
எதிர்மறையாய்
அள்ளித்தெளித்து
கதிர்களைப்போல்
எங்கும் நிறைந்திருக்கும்
வண்ணங்களற்ற வெளியினில்
                                                                                        வெளிப்படவே
                                                                                        விடுபடுவேன் சிறகுகளுடன்.

படங்கள் http://ergunkaraman.com/  என்ற தளத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday, June 23, 2010

மகிழ்ச்சி

எங்கோ ஓர் மூலையில்
முடிந்துவிட்டதாக மூடிவைக்கப்பட்டதாக
உறைந்துவிட்டதாக என எண்ணிக்கொண்ட
பிழையில்லா முகமறியாப் பிரியங்களை
வந்து சேர்ந்த புன்னகையில்
கரைத்துவிட்டு கரையேறினேன்.
ஆறறிவின் மிகுந்துவிட்ட எச்சங்களை
புறம்தள்ளி குருதியில்லாக் கொலை செய்து
புறத்தில் வழிந்தோடிய
முடிவில்லா முடிவிலிகளை
அள்ளிக்குடித்துவிட்டு நிமிர்ந்த வேலையில்
வந்தனைத்த ஆறறிவின் புன்னகையில்
முடிவிலிகள் மிகுந்துபோனது.

Tuesday, June 22, 2010

வெறுமை

எஞ்சியிருக்கும் எச்சத்தையும்
என்னுள் நிறைந்திருக்கும்
வெறுமை எடுத்துக்கொண்டது.
நினைவிலிருக்கும் நினைவுகளும்
ஏற்குமிடமில்லாமல் புறம் தள்ளிவிட்டது மனது.
என் மனக்குரங்கும்
முன்பு போல் எங்கும் தாவுவதில்லை
தவறிவிட்ட பக்கங்களும்
தவிர்த்து விடப்பட்ட பக்கங்களும்
என்னை பின்னோக்கி இழுக்கின்றன.
உள் வர மறுக்கும் புறம் தள்ளிவிட்ட நினைவுகளை
மீள் செய்ய முனைகிறேன்
மீண்டும் மீண்டும் வெறுமையே ஆட்கொள்கின்றது
மீண்டும் மீண்டும் முனைகிறேன்
மீண்டும் மீண்டும் மீள்கிறேன்
முனைவும் மீள்வும் முடிவில்லாமல் தொடர்கின்றது
வெறுமையை புறந்தள்ளாமல்.