Wednesday, September 29, 2010

முதல் முதல்-2

                    கே விற்கு தெரியாது அன்று நடக்கப்போகும் அந்த விபத்து அவன் பாதையை மாற்றி வாழ்க்கையை தடம்புரளச் செய்யப்போகின்றது என்று. பள்ளிப்படிப்பை முடித்த பின்பு பொறியியல் கல்லுரியில் சேர்வதற்காக நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்தான். அதில் சேர்ந்து ஒரு வாரங்கள் கடந்திருக்கும்.  அன்றும் வழக்கம் போல் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தான்.

                      அவளின் முதல் பார்வை அவனை ஒன்றுமே செய்யவில்லை. அவன் அந்தப்பேருந்திலும் ஏற வில்லை.   பேருந்து அவனைக் கடந்த பின்பே ஏதோ ஒன்று தாக்கியதை உணர்ந்தான்.  உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனை உசுப்பி விட பேருந்தை நோக்கி ஓடத்தொடங்கினான்.  சிறிது தூரம் சென்ற பேருந்து அவனை மூச்சிரைக்க விடமால் அவனுக்காக நின்றது. சன்னல்லிருந்து   மீண்டும் அதே பார்வை புன்னைகையுடன்.  பேருந்து நின்று விட்டதே என்று இவனும் நிற்க, நொடிப்பொறுமையின்றி  மீண்டும் இவனை விட்டுவிட்டு அது கிளம்பி விட்டது.


                     சிவப்பு நிற தாவணியில், முகத்தில் இருந்த திருநீரும்,ஜவ்வாதும் , சிரிப்பில் தெரிந்த தெத்துப்பள்ளும் என்று அந்த முகம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தது.  தனக்குள் ஒரு மாற்றத்தை அவன் உணர்ந்தான். அடுத்த நாள் முதல் அவளுக்காக காத்திருக்கத்தொடங்கினான். ஒரு வாரம் கடந்த பின்பும் அவள் முகம் காணக்கிடைக்கவில்லை.   நம்பிக்கையற்றவனாய் வாரத்தின் தொடர்ச்சியான ஒரு நாளில் காத்திருக்க மீண்டும் அவள்.

                     அதே பார்வை, அதே புன்னகை. பரவசமும் ஆச்சரியமுமாய் இருவரின் பார்வைகளும் மோதிக்கொண்டன. பேருந்து நிற்கவில்லை, தலையை வெளியே நீட்டித் திரும்பிக் கேவைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இவன் சப்த நாடிகளும் அவளுக்காகவே வாழ்ந்து முடித்தன, அந்தக் கணத்தில். பின்னால் வந்த மற்றொரு பேருந்தில் ஏறி  பின் தொடர்ந்தான்.  விதி வலியது என்பார்கள்.  முன்னால் சென்ற பேருந்து நேரே செல்ல,எங்கே போகின்றது என்பதை அறியாமலேயே இவன் ஏறிய பேருந்து  வலதுபக்கம் திரும்பியது.

                   வழக்கம் போல் அன்றும் வகுப்பிற்கு தாமதமாக சென்றவன்,  அனுமதி மறுக்கப்பட்டு அந்தக் கல்லூரியின் மைதானத்தில் தனியாக அமர்ந்திருந்தான். 
மதிய உணவுக்கான இடைவேளையில் நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.  அவர்களுடன் பேசிக்கொண்டே கல்லூரியின் உணவு விடுதியை நோக்கி நடக்க  எதிர்வரும் முகங்களில் எல்லாம் அவளின் முகத்தை தேடத்துவங்கினான்.  நண்பர்களின் கேளியும். கும்மாளமுமாய் இருந்த ஒரு கணத்தில் அதே முகம் இவனைக் கடந்து சென்றதை இவன் தவற விட அவள் தேடிக்கொண்டிருந்த முகத்தை கண்டுகொண்டாள்.

                    காத்திருக்கவைப்பதிலும், தவிக்க விடுவதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்.  எத்தனை மணி நேரங்கள் தாமதமாக வந்தாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமால் பேசுவது அவர்களுக்கு மட்டுமே உள்ள திறமையென்பது பின் வந்த நாட்களில் தெரிந்துகொண்டான்.  கண்ணாமுச்சியாட்டம் மேலும் ஒரு வாரங்களுக்குத் தொடர்ந்தது. நொந்தே போனான்.  இது தேவையா என்ற கேள்வியும் அவன் மனதில் தோன்றாமல் இல்லை.  விட்டுவிட நினைத்தாலும் மனதில் பதிந்துவிட்ட முகம் இமை மூடும் தருணத்தில் எல்லாம் உள் வந்து இம்சை செய்து கொண்டிருந்தது.

பயிற்சி முடிந்த ஒரு நாளின்  மாலை வேலையில் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த பொழுதில்  இவன் பேர் சொல்லி அழைத்த குரல் கேட்டு  திருப்பிப்பார்க்க........... கே வைச் சுற்றிப் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்தன...........

Sunday, September 26, 2010

முதல் முதல்

முதல் சிரிப்பில்
அதிர்ந்துதான் போனது
பின் வந்த சென்ற ஒவ்வொருச் சிரிப்பிலும்
அதிர்ந்து அதிர்ந்து அதிர்வு நிரந்தரமான ஒன்றானது....

முதல் பார்வையில்
சிறகுகள் முளைத்தது
பின் வந்த சென்ற ஒவ்வொருப் பார்வையிலும்
அறியாத் திசை நோக்கிப் பறக்கச் செய்தது.......

முதல் ஸ்பரிசத்தில்
அருகாமையின் அருமையை
சிலிர்த்து அடங்கும் மயிற்கால்கள்
நிதமும் உணரவைத்தது........


முதல் மோதலில்
அடங்கித்தான் போனது....
பின் வந்த தொடர் மோதல்களில்
முன் வரும் கோபம் பின்வராமல் போனது..........


முதல் கோணலில்
கனவுக்கோட்டையின் பாதாளத்தில்
காவு வாங்கிய கைதியின்
உயிர் பிரியும் வலியிருந்தது........


முதல் முத்தம்
அறியும் தருணம்  வரவில்லை
கொடுக்கவோ இல்லை தடுக்கவோ
யார் கையும் உதடும் துடிக்கவில்லை......

முதல் முதல் என்று நீண்டு கொண்டிருந்த ஒவ்வொன்றும்
கற்பனையின் உச்சத்தில் தூர நின்று ரசிக்கும்
சராசரிப் பார்வையாளனின் ஒரு மணிநேர
பேருந்துப் பயணத்தில் முடிந்து போனது.........