ரொம்ப நாளாச்சுள்ள முதல் பாகம் இங்க கிளிக் பண்ணி படிக்கலாம்
காதல் அருமையான உணர்வுன்னு ரொம்ப சுலபமா ஒரு வார்த்தைல சொல்லிட்டு போற விசயமில்ல. அந்த உணர்வு உள்ள வந்த பின்னாலே வரக்கூடிய இல்லை கிடைக்கப்பெறக்கூடிய சந்தோசமும், வருத்தமும் அளவுக்கு அதிகமா இருக்கும். அது அவங்கவங்க திறமையப்பொருத்த விசயம். அதுக்கு நீங்க நல்லவனா இருந்தா மட்டும் போதாது ஒரு வேலையச்செய்ய எப்படி படிப்பும் திறமையும் முக்கியமோ அதவிட அதிகபடியான திறமைய இதுல காட்ட வேண்டியிருக்கும். இந்த விசயத்த பொருத்த வரைக்கும் திறமையிருந்தா படிப்பெல்லாம் ஒரு விசயமே இல்லங்க.
ஆனால் கேவுக்கு இத்துனை எளிதாக அமைந்ததில் அவனுக்கே ஆச்சரியம்தான். அத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவே அவன் பேரை சொல்லி அழைத்துவிட்டு வெட்கித் தலைகுனிந்திருந்தாள். பறக்கத்தொடங்கிய பட்டாம் பூச்சிகள் நண்பர்களின் கேளிப்பேச்சுகளில் மறைந்தன. தலை குனிந்த வாரே அவள் இவனைக் கடந்து செல்ல, இவனும் என்ன செய்வதென்று அறியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
வீணான கற்பனைகளுக்குள் செல்வதை அவன் மனம் என்றுமே அனுமதித்ததில்லை. ஆனால் அன்றைய இரவு அவன் மனமும் மூளையும் தூக்கத்துக்கு விடைகொடுத்துவிட்டு நான்கு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து குதூகலித்துக்கொண்டிருந்தது. அவள் கடந்து சென்ற பின் இவனும் பின்னால் செல்ல நண்பர்களுக்குக் கொண்டாட்டமாய் போனது. பேருந்து நிலையத்தில் பெருங்கூட்டம் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தது. பேருந்து உள் நுழையும் போதே பையைப் போட்டு இடத்தினை பிடிக்க அனைவரும் முண்டியடிக்க, இவன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.
உங்கள் இயல்புகளை உடைத்துபோடும் வல்லமை காதலுக்கு மட்டுமே உண்டு. அதுவரையிலும், கூட்டம் குறைந்த பின்னே பேருந்தினுள் ஏறிக்கொண்டிருந்தவன் முதல் முறையாக கூட்டத்தில் அடித்து பிடித்து ஏறி இரண்டு சீட்டுகளைப் பிடித்தான். உட்கார வருபவர்களை எதிர்த்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டிருக்க அவள் அந்தப் பேருந்தில் ஏறவேயில்லை. அவன் நண்பர்களும் ஏறவில்லை.(இந்த இடத்துல நம்ம கே வழிஞ்ச வழிசல் இருக்கே, காலத்துக்கும் மறக்காது)
மறுநாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் எழுந்தவன் குளித்து முடித்து, உடைகளை அயர்ன் செய்து, முகத்தில் பேர் அண்ட் லவ்லியின் புதுப் பொழிவுடன் பேருந்து நிறுத்தத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே காத்திருக்க, அரை மணி நேரத்தில் அவளும் வர, பேருந்து கிளம்பும் வரைக் காத்திருந்து விட்டு கிளம்பிய பின் ஒற்றைக்கையில் கம்பியைப் பற்றி தொத்திக்கொண்டான். சட்டென யாரோ இவன் பெயர் சொல்லி அழைக்க திரும்பிப்பார்த்தான் அவன் அண்ணன் நின்று கொண்டிருந்தார். கேவுக்கு அடிவயிற்றை ஏதோ செய்தது.
4 comments:
இது நிச்சயமா உங்க கதை தான் :)
//வீணான கற்பனைகளுக்குள் செல்வதை அவன் மனம் என்றுமே அனுமதித்ததில்லை. ஆனால் அன்றைய இரவு அவன் மனமும் மூளையும் தூக்கத்துக்கு விடைகொடுத்துவிட்டு நான்கு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து குதூகலித்துக்கொண்டிருந்தது. //
இதுதான் ஆரம்பமா அண்ணா ., ?!
//அடித்து பிடித்து ஏறி இரண்டு சீட்டுகளைப் பிடித்தான். உட்கார வருபவர்களை எதிர்த்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டிருக்க அவள் அந்தப் பேருந்தில் ஏறவேயில்லை//
ஹி ஹி ஹி .., இது செம .. பாவம் அவர் ., ஆனா காதல் வந்தா எல்லோரு கூடவும் சண்டை போட சொல்லுமா ..? இல்ல அமைதியா எல்லோரையும் பார்த்து சந்தொசப்படுமா ..?
இப்பதான் ஆரம்பம் போல தெரியுது.... அதுக்குள்ள அண்ணன் எதுக்கு வந்தார்....?!! :))
நன்றாக இருக்கிறது கதை....
Post a Comment