Monday, November 23, 2009

வலி

அன்றைக்கு காலையில் 6 மணிக்கு மேல் தூக்கம் வரவில்லை. அவன் பதின்ம வயதை கடந்த பின் அவனது நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறப்போகின்ற மகிழ்ச்சியும் அந்த தருணத்தையும் நேற்றிலிருந்தே அவன் அனுவிக்க தொடங்கிவிட்டதன் காரணமாகவும் இருக்கலாம்.  வீட்டின் முன் பக்க கதவை திறந்து செய்திதாளினை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.  அன்றைய தினம் விடுமுறையாதலால் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. அவனும் விடுமுறை நாட்களில்
தாமதாகத்தான் எழுவான்.  கடிகாரத்தை பார்த்தான் மணி 06.05 காட்டியது.  காலைக்கடன்களை முடித்துவிட்டு புத்தாடையை உடுத்திக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேரும் போழுது மணி 06.30.

அவன் வீட்டிற்க்குப் பின்புறம் கருவேலங்காடு அதன் தொடர்ச்சியாக சுடுகாடும், இடுகாடும்.  அதனூடே ஒற்றையடிப்பாதை.  பாதையின் இரு புறமும் கருவேலங்காடு.  கருவேல மரங்களின் கிளைகளை முகத்தில் படாதவாறு ஒரு கையால் ஒதுக்கியவாரு நடக்கத்தொடங்கினான்.   பள்ளிக்காலங்களில்
இதே பாதையில்தான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வான்.
இவன் சைக்கிளில் போகும் போது பாம்புகள் இவனைக் கடந்துபோகும்.
சில நேரங்களில் பிரேக் அடித்து நிறுத்துவான். சில நேரங்களில் அதன் மீது ஏறிப்போவதும் உண்டு.    அப்போது இல்லாத பயம் இப்போது இவனை தொற்றிகொண்டது.  ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்தான்.  சுடுகாடு என்பதால் ஒற்றையடிப்பாதையின் இரண்டு பக்கமும் மனித மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் இருக்கும்.  அதனைப் பார்த்த போது பயம் கூடிப்போனது.  பாம்புகளே மேல் என தோன்றியது.  நடையில் வேகம் கூடியது. 


ஒரு வழியாக சுடுகாட்டினைக் கடந்து நெல்வயலினை ஒட்டிய பிரதான சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையை
அடைந்தான்.  இன்று அவன் பார்க்கும் அனைத்துமே அவன் பள்ளிக்குச்
செல்லும் போது பார்த்தவை தான் என்றாலும் எல்லாம்  மாறிவிட்டாதாக எண்ணிக்கொண்டான். மாறிவிட்டது என்பதைவிட மோசமாகிவிட்டது என்பதே உண்மையென அவனுக்கு தோன்றியது.  வேகமாக நடக்கத்தொடங்கினான்.  தென்னந்தோப்பைத் தாண்டி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்துவிட்டான்.  இப்பொழுது பசிக்கத்தொடங்கியது.  பையைத் துலாவினான்.  காசு எடுக்காமல் வந்தது பையில் கையை வைத்தவுடன் நினைவுக்கு வந்தது.   வீட்டிற்கு போனால் தான் சாப்பாடு.  சரி வந்த கடைமையை முடித்துவிட்டே செல்லலாம் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


விடுமுறையானதால் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.  அதுவும் கரைவேட்டிகளின் நடமாட்டம்தான்.  எல்லோரும் இவனையே கவனிக்கிறார்களோ என்ற எண்ணம்.  புதுசட்டையும்,பேண்டும் தான் காரணமோ?  யோசித்துக்கொண்டே வந்ததால் பைக்கில் வந்த கரைவேட்டி இவனை உரசிக்கொண்டே சற்று தள்ளிப்போய் நின்றான்.  இவன் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்தான்.  முகம், கை,கால் என்று நிறைய இடங்களில் சிராய்ப்புகளுடன் இரத்தமும் வழியத்தொடங்கியது.   மயக்கம் வருவது போலிருந்தது.  கும்பல் கூடிவிட்டது.  இருவர் கைகொடுத்து தூக்கி அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் உட்காரவைத்தனர்.  கரைவேட்டி மேல் தவறில்லை என்றாலும் அவனை ஒரு சிலர் குறை சொல்லிக்கொண்டிருந்தனர்.  அவன் ஒன்றும் பேசவில்லை.  எந்த ஏறியா, அப்பா பெயர்,  எதுக்கு வந்த இப்படி சில விசாரணைகளுக்கு பிறகு  டீயும்,பன்னும் கிடைத்தது.  அதனை சாப்பிட்ட பிறது கொஞ்சம் நிதானம் வந்தது போல் உணர்ந்தான். 
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நடக்கத்தொடங்கினான். வலது காலின் மூட்டு வலிக்கத்தொடங்கியது.  


 காவல் நிலையத்தைக் கடக்கும் போது யாரோ அவனை அழைப்பது போல் இருந்தது.  திரும்பிப் பார்த்தான் யாரையும் காணவில்லை.  இந்த வலியோடு எப்படிச் சுடுகாட்டினை தாண்டி வீட்டுக்கு போவது என்ற கவலையும் சேர்ந்த போது வலி இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது.  ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டான்.  அங்கு இருபதுக்கும் மேலானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.  இவனும் வரிசையில் நின்று கொண்டான். 


அவனுக்கு இருந்த மகிழ்ச்சியில் வலி இருப்பதையே மறந்திருந்தான்.  பின்னால் இருந்தவர் காயங்களை பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்.  நடந்தவைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் புலம்பிக்கொண்டு செல்வதை கவனித்தான்.  போலிஸ்காரர் பேசாதே என்று சைகைக்காட்டினார்.   இவன் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.  வரிசை சிறிது சிறிதாக குறைந்து இவனுடைய முறை வந்தது.  அலுவலரிடம் அடையாள அட்டையைக் கொடுத்தான்.  மேஜையில் இருந்த புத்தகங்களில் அடையாள அட்டையினை வைத்துக்கொண்டு எதையோ தேடுவதில் முனைந்தார்.  இவன் கால்கள் தரையில் நிற்கவில்லை எங்கோ பறப்பது போல் உணர்ந்தான்.  அலுவலர் இவனைப் பார்த்தார்.  இவன் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கையை நீட்டினான். 

'தம்பி உங்க பேரு லிஸ்டுல இல்ல, அதனால நீங்க ஓட்டு போடமுடியாது'. காலின் வலி சுலிரென்று ஏறி மூளைக்குச் சென்றது.

5 comments:

RAD MADHAV said...

//காலின் வலி சுலிரென்று ஏறி மூளைக்குச் சென்றது. //

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சமீர். இன்னும் நிறைய எழுதுங்கள்..

venkat said...

அருமை

அது ஒரு கனாக் காலம் said...

நன்னா இருக்கு .... இன்னும் எழுததுங்கோ

கலையரசன் said...

:-)

ஜீவன்பென்னி said...

ராட்

வெங்கட்

கனாக்காலம்

கலையரசன்

அனைவருக்கும் நன்றி.

Post a Comment